ஈ.என்.டி.எல்.எஃப். இயக்கத்தினரால் கடத்தப்பட்ட ஈரோஸ் இயக்க தலைவர் பாலகுமார்!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -140) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)

ஈ.என்.டி.எல்.எஃப். இயக்கத்தினரால் கடத்தப்பட்ட ஈரோஸ் இயக்க தலைவர் பாலகுமார்!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 140)

 ஈரோஸின் வெகுஜனப் பிரிவான ஈழவர் ஜனநாயக முன்னணி சார்பாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவருக்கும் புலிகள் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பிருந்தனர்.

ஈழவர் ஜனநாயக முன்னணியின் பட்டியலில் போட்டியிட்ட ஈரோஸ் உறுப்பினர்கள் சிலர் தவிர ஏனையோர் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவிக்கத் தொடங்கி விட்டனர்.

இக்கட்டத்தில்தான் பிரபாவின் பிரதிநிதியாக ஈரோஸ் தலைவர் பாலகுமாரை சந்தித்தார் பொட்டம்மான். புலிகளின் யாழ்மாவட்ட இராணுவத் தளபதியாக அப்போது இருந்தவரும் பொட்டம்மான் தான்.

‘தேர்தலில் போட்டியிடலாம்’ என்று பிரபா பச்சைக் கொடி காட்டிய பின்னரும் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பபட்டிருக்கிறதே? என்று பொட்டம்மானிடம் கவலை தெரிவித்தார் பாலகுமார். “

நாடாளமன்றத் தேர்தலில் ஈரோஸின் பெயரில் புலிகள் போட்டியிடுவதாக ஏனைய இயக்கங்கள் பிரசாரம் செய்து வருகின்றன. அதனால்தான் எச்சரிக்கைக் கடிதங்கள் அனுப்பியதோடு, தேர்தலில் போட்டியிடுபவர்கள் துரோகிகள் என்றும் புலிகள் இயக்கம் அறிவிக்க வேண்டியும் ஏற்பட்டது.

சில வாரங்கள் உங்கள் தேர்தல் வேலையை நிறுத்தி வையுங்கள் நாங்கள் எங்கள் முடிவை தெரிவிக்கின்றோம்.” என்றரீதியில் தமது நிலைப்பாட்டைக் கூறினார் பொட்டம்மான்.

அதன்பின்னர் கிட்டதட்ட ஒரு மாத காலமாக ஈரோஸின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தன. புலிகளின் முடிவுக்காக ஈரோஸ் காத்திருந்தது.

சிறீலங்கா நாடாளமன்றத் தேர்தலை தமது இயக்கம் நிராகரிப்பதாக புலிகள் விடுத்த அறிக்கைகள், வேட்பாளர்களின் ராஜினாமாக்கள் பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் முக்கியத்துவம் இன்றியே வெளிவந்தன.

பத்திரிகைகளாக செய்த இருட்டடிப்பு என்று நினைத்துவிட வேண்டாம். இந்தியப் படையினரும், இந்தியத் தூதரக வட்டாரங்களும் தமது செல்வாக்கையும், அதிகாரத்தையும் பயன்படுத்தி முன்கூட்டியே செய்த ஏற்பாடு அது.

 தப்புக் கணக்கு

தேர்தலை பாதிக்கக்கூடிய செய்திகள் எதனையும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடவேண்டாம் என்று தமிழ்ப் பத்திரிகைகளுக்கு முன்கூட்டியே கூறப்பட்டு விட்டது.

ஈரோஸின் பெயரில் புலிகள் தேர்தலில் போட்டியிடுவதாக ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கம் ஒரு தப்பான கணக்குப் போட்டிருந்தது.

தன்பலம், தன் எதரியின் பலம் அறியாமல் போடப்பட்ட தப்பு கணக்காக அது அமைந்தது. ஈரோஸின் பட்டியியலில் புலிகள் போட்டியிடுவதாக அம்பலப்படுத்தி விட்டால் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று ஈ.பி.ஆர்.எல்.எஃப். நினைத்து விட்டது.

ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈ.என்.டி.எல்.எஃப். இயக்கங்களின் நடவடிக்கைகள், இந்திய படையினரின் அத்துமீறல்கள் தொடர்பாக வடக்கு-கிழக்கில் மக்கள் கடும் அதிருப்தி கொண்டிருந்தனர்.

அந்த அதிருப்தியானது புலிகளுக்கு சார்பாக ஆதரவு அலையாக மாறியிருந்தது. தங்கள் மீதான அடக்குமுறைகளை நேரடியாக எதிர்க்க முடியாத மக்கள், தம்மை அடக்குவோருக்கு எதிரான புலிகளின் தாக்குதல்களை மனதுக்குள் பாராட்டி வரவேற்றுக் கொண்டிருந்தனர்.

ஈரோசுக்கும் மக்களிடம் கெட்டபெயர் இருக்கவில்லை. ஈரோஸ் பட்டியலில் புலிகள் போட்டியிடுகிறார்கள் என்று ஏனைய இயக்கங்களே பிரசாரம் செய்த போது, ஈரோசுக்கு இருந்த நல்ல பெயரும், புலிகளுக்கு இருந்த ஆதரவு அலையும் ஒன்று சேர்ந்து விட்டது.

தமது பட்டியலில் புலிகள் இயக்க ஆதரவாளர்கள் போட்டியிடுவதையோ, தாம் புலிகளின் அனுமதியைப் பெற்றுக் கொண்டதையோ ஈரோஸ் பகிரங்கமாக கூறமுடியாமல் இருந்தது.

அவ்வாறு கூறுவது தமக்கு சாதகம் என்றால்கூட, அவை இரகசியங்கள் என்பதால் வெளியிட முடியாத நிலையில் இருந்தது ஈரோஸ்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈ.என்.டி.எல்.எஃப். போன்ற இயக்கங்கள் ஈரோசுக்கு குழிபறிப்பதாக நினைத்துக் கொண்டு செய்த பிரசாரங்கள் ஈரோசுக்கும், புலிகளுக்கும் உள்ள தொடர்பை மக்களுக்கு வெளிச்சம்போட்டு காட்டி விட்டன.

அதனால் ஈரோசுக்குத்தான் பலத்த சாதகம் ஏற்பட்டது. தங்கள் பிரசாரம் மூலமாக தலையிலேயே ஏனைய இயக்கங்கள் மண் அள்ளிப் போட்டன.

உண்மையில் ஈரோஸ் பட்டியலில் போட்டியிட்டவர்களுக்கு ஆதரவு தேடிக் கொடுத்த பெருமை ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈ.என்.டி.எல்.எஃப்., ரெலோ இயக்கங்களுக்கே சேரும்.

இப்பிரசாரங்களை இந்திய அரசு வேறு ஒரு கோணத்தில் பயன்படுத்திக் கொண்டது. வடக்கு-கிழக்கில் புலிகளும் நாடாமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என்றால், அந்தளவுக்கு அந்கு ஜனநாயக சூழலை ஏற்படுத்தியிருக்கிறோம் என்று நினைக்கட்டும் என்றே இந்திய அரசு கருதியது.

அதனால் ஈரோஸ் தேர்தலில் போட்டியிடுவதற்கு இந்திய அரசினதோ, இந்தியப் படையினதோ இடையூறுகளை ஏற்படுத்தலாம் என்று ஏனைய இயக்கங்கள் போட்ட கணக்கும் தப்புப் கணக்காகிப் போனது.

சிறீலங்கா நாடாளமன்றத் தேர்தல் 1989 பெப்ரவரி 15ம் திகதி நடைபெறவிருந்தது. (சென்ற வாரம் 1988 என்று ஆண்டைத் தவறுதலாக குறிப்பிட்டு விட்டேன்.)

தேர்தல் பிரசார நடவடிக்கைகளை இடைநிறுத்தி வைக்கும்படி ஈரோஸ் தலைவருக்கு புலிகள் கூறியிருந்தார்கள் அல்லவா தேர்தல் நெருங்கும் நேரத்தில் புலிகளிடமிருந்து மறுபடி ஈரோஸ் தலைவருக்கு தகவல் வந்தது.

“தேர்தல் வேலைகளைச் செய்யுங்கள். நாங்கள் இடையுறு செய்ய மாட்டோம்” என்று தெரிவித்து விட்டனர் புலிகள்.

மறுபடியும் தீவிரப் பிரசாரங்களில் குதித்தனர். ஈரோஸ் இயக்கத்தினர். ஈழவர் ஜனநாயக முன்னணியின் பெயரில் பிரசார நடவடிக்கைகள் சூடுபிடிக்கத் தொடங்கின.

ஈழவர் ஜனநாயக முன்னணியின் பொறுப்பாளரும், யாழ் மாவட்ட வேட்பாளர் பட்டியலில் தலைமை வேட்பாளருமான எட்வேர்ட் செபஸ்தியாம்பிள்ளை தேர்தல் பிரசாரத்துக்காக பருத்தித்துறைக்குச் சென்றிருந்தார்.

பிரசாரத்தை முடித்துக் கொண்டு தனது வாகனத்தில் அவர் திரும்பி வரும்போது இருபாலையில் வைத்து அவரது வாகனம் மறிக்கப்பட்டது. வாகனத்தை மறித்தவர்கள் ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தினர். ஆயுதங்களுடன் வாகனத்தை சுற்றிவளைத்தனர்.

அப்படியே சுட்டுதள்ளப் போகிறார்களோ? என்று பயந்து போனார் எட்வேர்ட் செபஸ்தியாம்பிள்ளை. “உங்களோடு பேசவேண்டும் முகாமுக்கு வாருங்கள்” என்றனர். அவரது வாகனத்திலேயே புத்தூரில் உள்ள தமது முகாமுக்குக் கொண்டு சென்றனர்.

ஈரோஸ் பட்டியலில் உள்ள வேட்பாளர்கள் பற்றிய பின்னணி விபரங்களை அவரிடமிருந்து கறபதுதான் கடத்திச் சென்றதின் நோக்கம் விபரங்களை அவரிடமிருந்து கறந்துவிட்டு சுட்டுத் தள்ளிவிடலாம் என்று திட்டமிட்டிருந்தனர்.

தலைமைப்பீடத்துக்கு எட்டியது. உடனடியாக இந்தியப் படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். துரித விசாரணைகள் மூலம் எட்வேர்ட் எங்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்பதை இந்திய படையினர் கண்டுபிடித்து விட்டனர்.

புத்தூரில் இந்தியப்படை முகாமில் இருந்து மேஜர் தர அதிகாரி தலைமையில் மூன்று ஜுப் வண்டிகளில் இந்தியப் படையினர் புறப்பட்டு ஈ.பி.ஆர்.எல்.எஃப். முகாமுக்கு சென்றனர். ஈரோஸ் முக்கியஸ்தர்கள் சிலரையும் தம்முடன் அழைத்துச் சென்றனர்.

அத்தனை விரைவாக இடத்தைக் கண்டுபிடித்து இந்தியப் படையினர் தமது முகாமை முற்றுகையிடுவார் என்று ஈ.பி.ஆர்.எல்.எஃப்., இயக்கத்தினர் எதிர்பார்க்கவில்லை.

ஆனால் அந்த முகாமில் இருந்த ஈ.பி.ஆர்.எல்.எஃப். உறுப்பினர்கள் புத்திசாலிகள். உடனே சமயோசிதமாகச் செயற்பட்டனர்.

எட்வேர்டை கொண்டு வந்து முகாமின் முன்பக்கத்தில் இருத்தினார்கள். ‘கடத்தி வரவில்லை. கதைக்க அழைத்தோம்.’ என்று கூறுவதற்கு வசதியாகவே அப்படிச் செய்தார்கள்.

எட்வேர்ட்டிடம் ஒருத்தர் கூறினார். “இங்கே பாரும் ஐசே, அவர்கள் கேட்டால் கதைக்க அழைத்ததாகச் சொல்ல வேண்டும். கடத்தல் கிடத்தல் என்று சொன்னால் இங்கேயே எல்லோருக்கும் சமாதி கட்டி விடுவோம்.” எட்வேர்ட் பயந்துபோனார்.

ஈரோஸ் பிரமுகர்கள் சகிதம் இந்தியப்படை அதிகாரி முகாமுக்குள் சென்றார். முன்னாள் இருந்த எட்வேர்டைக் கண்டதும் ‘இவர்தான் என்று ஈரோஸ் பிரமுகர்கள் வாய்திறக்க முன்னரே, ஈ.பி.ஆர்.எல்.எஃப். உறுப்பினர்கள் முந்திக் கொண்டனர்.

“வாருங்கள் சேர்” என்று வரவேற்றதுடன், “இவர்தான் எட்வேர்ட் செபஸ்தியாம்பிள்ளை. இந்தப் பக்கமாக வந்தார். பேசிக் கொண்டிருக்கிறோம்” என்று போட்டார்கள் ஒரு போடு

பொய் சொல்லுகிறார்கள். தெரிந்தாலும் பிரச்சினையாக்க விரும்பவில்லை. இந்தியப் படையினர் எட்வேர்ட்டும் எதுவும் பேசவில்லை. அதனால் எட்வேரட்;டை தம்முடன் வந்த ஈரோஸ் பிரமுகர்களிடம் ஒப்படைத்து விட்டுச் சென்று விட்டனர்.

அதன் பின்னரும் யாழ்ப்பாணம் நாவாந்துறையில் இருந்த எட்வேர்ட் வீட்டுக்கு பல தடவை சென்று அவரைத் தேடினார்கள் ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தினர்.

கிளிநொச்சியில்

வன்னியில் தேர்தல் பிரசாரத்துக்காக ஈரோஸ் தலைவர் பாலகுமாரும், ஈரோஸ் இயக்கத்தினரும் மூன்று வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். கிளிநொச்சியில் வைத்து அவர்களை வழிமறித்தனர் ஈ.என்.டி.எல்.எஃப். இயக்கத்தினர். தமது முகாமுக்கு கொண்டு சென்றனர்.

ஈ.என்.டி.எல்.எஃப். உறுப்பினர்களிடம் மாட்டிக் கொள்ளாமல் ஒரு வாகனத்தில் இருந்த ஈரோஸ் உறுப்பினர்கள் தப்பிச் சென்று இந்தியப்படை முகாமுக்கு போய் விட்டனர்

தமது தலைவரும் உறுப்பினர்களும் ஈ.என்.டி.எல்.எஃப். இயக்கத்தால் கடத்தப்பட்ட தகவலை தெரிவித்தனர். உடனடியாக செயலில் இறங்கினார்கள் இந்தியப்படையினர். ஈ.என்.டி.எல்.எஃப். முகாம் நோக்கி இந்தியப் படையினரின் வாகனங்கள் விரைந்து சென்றன.

அதற்கிடையே ஈ.என்.டி.எல்.எஃப். முகாமில் வைத்து ஈரோஸ் தலைவர் பாலகுமாரை தாக்கத் தொடங்கி விட்டனர். தமது தலைவர் தாக்கப்படுவதைப் பொறுக்க மாட்டாமல் தில்லைநாதன் என்ற ஈரோஸ் உறுப்பினர் குறுக்கே விழுந்து தடுத்தார்.

அதனால் தில்லைநாதனைப் பிடித்து அடிக்கத் தொடங்கினார்கள். அடிதாங்காமல் அவர் மயங்கிப் போனார். அப்படியிருந்தும் ஏறிமித்திதார்கள்.

ஈ.என்.டி.எல்.எஃப். முக்கியஸ்தரான முஸ்தபா என்றழைக்கப்படும் ராமராஜ் என்பவர் தான் அத்தாக்குதலுக்கு தலைமை தாங்கிக் கொண்டிருந்தார். ஈரோஸ் உறுப்பினர்கள் சென்ற வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன.

தில்லைநாதன் உயிர்போகும் கட்டத்தில் இருக்க மறுபடி பாலகுமார் தாக்கப்பட்டார். பாலகுமாரின் நல்ல நேரமோ, என்னமோ இந்தியப்படையினர் வந்து சேர்ந்து விட்டனர்.

அதனால் உயிர்தப்பினார் பாலகுமார். ஆபத்ததான நிலையில் இருந்த தில்லைநாதன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றப்பட்டார்.

கிட்டதட்ட 25 நிமிடங்கள் பாலகுமார் மீதும், ஈரோஸ் உறுப்பினர்கள் மீதும் தாக்குதல் நடந்தது. ஈரோஸ் உறுப்பினரான நாதன் தாக்குதலில் பலியானார். இறுதியாக பரந்தன் ராஜன் தமது உறுப்பினர்களின் செயலுக்காக மன்னிப்புக் கேட்டார்.

பாலகுமாருக்கு தாங்க முடியாத கோபம். செய்வதையும் செய்துவிட்டு மன்னிப்புக் கேட்கிறார்கள் என்று எரிச்சலாகி விட்டார். பாலகுமார் சொன்னார் “ உங்களுக்கு புலிகள் தான் சரி”.

பொதுச்சின்னம்

தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயரில் உதயசூரியன் சின்னத்தில் ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈ.என்.டி.எல்.எஃப்., ரெலோ வேட்பாளர்களும் போட்டியிட்டனர் அல்லவா.

அந்தப் பொதுப்பட்டியலில் இருந்த கூட்டணி வேட்பாளர்களை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று திட்டமிட்டனர். ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈ.என்.டி.எல்.எஃப்., ரெலோ இயக்கத்தினரும் அதிலே பரிபூரண உடன்பாடு இருந்தது.

இந்திய அரசின் நிர்பந்தம் காரணமாக பொதுப்பட்டியலுக்கு உடன்பட்டாலும் கூட்டணியை மீண்டும் புத்துயிர் பெறவிடக் கூடாது என்பதில் மூன்று இயக்கங்களும் உறுதியாக இருந்தன.

கொழும்பில் இருந்து ஈ.பி.டி.பி இயக்கத்தினர் பொதுப்பட்டியலில் போட்டியிட்ட வேட்பாளர்களை ஆதரித்து வீரகேசரிப் பத்திரிகையில் முழுப்பக்க விளம்பரங்களை வெளியிட்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட கூட்டணிச் செயலதிபர் அமிர்தலிங்கத்தை ஆதரித்து வெற்றிபெறச் செய்யுமாறும், பிரதேச வாதங்களுக்கும், வடக்கு- கிழக்கு பிரிப்பு முயற்சிகளுக்கம் முடிவு கட்டுமாறும் ஈ.பி.டி.பி. வெளியிட்ட விளம்பரத்தில் கோரப்பட்டிருந்தது.

தாம் தேர்தலில் போட்டியிடா விட்டாலும் பொதுசின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களை ஆதரிப்பது என்று ஈ.பி.டி.பி. முடிவு செய்கிறது. திருகோணமலையில் பொதுச்சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களை ஆதரித்து சுவரொட்டிகள் ஒட்டினார்கள்.

ஈ.பி.டி.பி. இன் சுவரொட்டிகளை கண்ட ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தினருக்கு பொறுக்க முடியவில்லை. தமக்கும் சேர்த்துதான் ஈ.பி.டி.பி. பிரசாரம் செய்கிறது என்பதைவிட, ஈ.பி.டி.பி. இப்படியே வளர்ச்சி காணத் தொடங்குகின்றதே என்பதுதான் ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தினருக்கு உறுத்தியது.

திருமலையில் எவ்வித பாதுகாப்பின்றியே ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் தங்கியிருந்தனர். இந்தியப் படையினருடன் அவர்களுக்குத் தொடர்புகள் இருக்கவில்லை.

இரவோடு இரவாக ஈ.பி.டி.பி. உறுப்பினர்களை கடத்திச் சென்று தமது முகாமில் வைத்து தாக்கினார்கள். ஈ.பி.டிபி. உறுப்பினர்கள் தங்கியிருந்த பகுதி மக்கள் கடத்தலுக்கு எதிராக குரல் கொடுத்தனர்.

இதனால் கடத்தப்பட்ட ஈ.பி.டி.பி. உறுப்பினர்களை எச்சரிக்கை செய்துவிட்டு விடுவித்தனர்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். “ஈ.பி.டி.பி. தலைதூக்க நாங்கள் விடமாட்டோம். இயக்கம் நடத்தும் யோசனை இருந்தால் விட்டுவிடுங்கள். ஈ.பி.டி.பி. என்று இனிமேல் எந்த நடவடிக்கையிலும் இறங்கக்கூடாது என்று எச்சரித்து விட்டே அவர்களை விடுவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கூட்டணிச் செயலணிச் செயலதிபர் அமிர்தலிங்கம் பிரசாரம் செய்வதற்கும் ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ரெலோ இயக்கங்கள் பல இடையூறு செய்தனர்.

வடக்கு-கிழக்கில் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈ.என்.டி.எல்.எஃப்., ரெலோ வேட்பாளர்கள் பொதுப்பட்டியலில் போட்டியிட்டாலும், அந்தந்த மாவட்டங்களில் யாருக்கு அதிக விருப்பு வாக்கு கிடைக்கிறதோ அவர்கள்தான் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படுவர் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமிர்தலிங்கம் தலைமையில் பொதுப்பட்டியல் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஆனால் பொதுப்பட்டியலில் உள்ள வேட்பாளர்களைவிட குறைந்த விருப்பு வாக்குகளைப் பெற்றால் பாராளமன்ற உறுப்பினராக முடியாது.

அமிர்தலிங்கத்தை தோற்கடிப்பதில் முன்னின்ற ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ரெலோ இயக்கங்கள் அவருக்கு எதிராக மறைமுகமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடத் தொடங்கினர். “யாழப்பாணத்தில் போட்டியிடப் பயந்து மட்டக்களப்பு மக்களின் பிரதிநிதித்துவத்தை அபகரிக்க வந்து விட்டார்.” என்றுகூடப் பிரச்சாரம் செய்யப்பட்டது.

யாழ்மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்வதற்கு சென்றிருந்தார் அமிர்தலிங்கம். அவரை யாழ்ப்பாணம் அசோகா ஹோட்டலில் தங்கவைத்தனர்.

பிரசாரம் செய்ய செல்வதற்கு மட்டும் அனுமதிக்கவில்லை. பாதுகாப்பு காரணங்கள் கூறப்பட்டன. புலிகள் கொல்லத் திட்மிட்டிருக்கிறார்கள் என்று பயம் காட்டினார்கள். பிரச்சாரம் செய்ய முடியாத நிலையில் மனம் உடைந்து திரும்பினார் அமிர்தலிங்கம்.

அமிர்தலிங்கத்தை பிரசாரம் செய்ய அனுமதித்தால் தங்கள் ஆட்களை விட கூட்டணியினருக்கு விருப்பு வாக்குகள் அதிகம் கிடைத்துவிடும் என்று நினைத்தே தடுத்து விட்டனர்.

யாழ் மாவட்டத்தில் மட்டு மல்ல, திருமலை, வன்னி மாவட்டங்களில் போட்டியிட்ட கூட்டணி வேட்பாளர்களையும் போதிய பிரசாரம் செய்ய விடாமல் தடுhத்து விட்டனர். பொதுப்பட்டியலுக்குள் கூட இருந்தே நடைபெற்ற இந்த இழுபறிகளினால் அமிர்தலிங்கம் மனவேதனை அடைந்தார்.

தேர்தல் முடிவு எப்படியாக அமையப் போகிறது என்பதை முன்கூட்டியே புரிந்து பொண்டனர். எனினும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனது வெற்றி உறுதி என்றே கருதினார்.

உண்மையில் மட்டக்களப்பு மக்கள் பிரதேச பேதங்கள் எதுவும் இல்லாமல் தழிழர் தலைவர் என்ற ரீதியில் அமிர்தலிங்கத்தை ஆதரிக்க முன்வந்திருந்தனர்.

1989 பெப்ரவரி 15 இல் வாக்களிப்பு தொடங்கியது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ரெலோ இயக்கங்கள் செய்த குளறுபடிகள் முடிவை மாற்றின.

அந்த குளறுபடி பற்றியும், எதிர்பாராத திருப்பங்கள் பற்றியும் வரும் வாரம் தருகிறேன்…

தொடரும்…
-அரசில் தொடர் எழுதுவது அற்புதன்-

தொடரும்… (Thanks… ILAKKIYAA Inaiyam…) -தொகுப்பு… கி.பாஸ்கரன், சுவிஸ்.
 
***** முன்னைய  தொடர்களை பார்வையிட இங்கே  அழுத்தவும்….
Comments (0)
Add Comment