தென்னிந்தியாவில் காங்கிரசுக்கு ஒரே ஒரு முதல் மந்திரிதான் மிஞ்சுவார் – மோடி ஆரூடம்..!!

ஆரோவில் வெள்ளிவிழா நிகழ்ச்சியில் பங்கேற்க புதுச்சேரி மாநிலத்துக்கு இன்று வந்த பிரதமர் நரேந்திர மோடி பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

நீண்ட காலத்துக்கு பிறகு நான் புதுச்சேரிக்கு வந்துள்ளேன். 1947-ம் ஆண்டில் நாம் சுதந்திரம் பெற்றோம். நமக்கு பின்னால் சுதந்திரம் அடைந்த பல நாடுகள் நம்மை கடந்து வெகுதூரம் வளர்ச்சி அடைந்துள்ளன.

நமது நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு 17 ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவரது மகள் இந்திரா காந்தி 14 ஆண்டுகள் நாட்டை ஆண்டார். பின்னர், அவரது மகன் ராஜீவ் காந்தி 5 ஆண்டுகள் ஆட்சி செய்தார். அதன்பிறகு 2004 முதல் 2014 வரை ரிமோட் கண்ட்ரோல் ஆட்சியின் மூலம் நாட்டை காங்கிரஸ் கட்சி ஆண்டது. இப்படி ஒரே குடும்பம் நேரிடையாகவும், மறைமுகமாகவும் 48 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்துள்ளது.

மத்தியில் நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்று வரும் மே மாதத்துடன் 48 மாதங்கள் நிறைவடைகிறது. ஒரு குடும்பத்தின்கீழ் 48 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சியிலும், எங்கள் தலைமையின்கீழ் 48 மாதங்கள் நடைபெறும் ஆட்சியிலும் நீங்கள் இழந்தது என்ன? அடைந்தது என்ன? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

அனைத்து வளங்களையும், தன்னம்பிக்கையும் கொண்ட புதுச்சேரி இன்னும் குறிப்பிடத்தக்க வகையில் வளர்ச்சி அடையாதது ஏன்? இங்குள்ள தொழிற்சாலைகள் வளமாக இருக்கின்றனவா?,இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படாதது ஏன்? மக்களின் சக்தியை பயன்படுத்திகொள்ள இந்த மாநிலத்தை ஆண்ட கட்சிகள் தவறி விட்டன. அவர்கள் மக்களுக்கு அநீதி இழைத்து விட்டனர்.

நடந்து முடிந்த திரிபுரா மற்றும் எதிர்வரும் மேகாலயா, நாகலாந்து சட்டசபை தேர்தல் மற்றும் கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்திக்கும். எனவே, வரும் ஜூன் மாதத்துக்கு பிறகு தென்னிந்தியாவில் காங்கிரசுக்கு இருக்கும் ஒரே ஒரு முதல் மந்திரியாக மிஞ்சப்போகும் புதுவை முதல் மந்திரி நாராயணசாமிக்கு எனது நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments (0)
Add Comment