சரவணபெலகோலா மகா கும்பாபிஷேக விழா நிறைவு – அகிம்சை தலமாக அறிவிக்க சாதுக்கள் கோரிக்கை..!!

கர்நாடகத்தில் சரவணபெலகோலாவில் அமைந்துள்ள பாகுபலி சுவாமிக்கு நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா நேற்றுடன் நிறைவடைந்தது என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

கர்நாடகம் மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சரவண பெலகோலா புண்ணிய தலம் அமைந்துள்ளது. இங்கு அருள்பாலித்து வரும் 57 அடி உயரத்தில் புகழ்பெற்று விளங்கும் பாகுபலி சுவாமிக்கு 88-வது ஆண்டாக மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இந்த ஆண்டு கும்பாபிஷேக விழா கடந்த 7-ம் தேதி தொடங்கியது. தொடக்க விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு பாகுபலியின் அருளை பெற்றுச் சென்றார்.

இதற்கிடையே, முக்கிய நிகழ்ச்சியான பாகுபலி சுவாமிக்கு மகா கும்பாபிஷேக விழா கடந்த 17-ம் தேதி வெகு விமர்சையாக நடைபெற்றது. நாட்டின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் சாதுக்கள், குருமார்கள், ஆச்சாரியர்கள், சமண தியாகிகள் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து பாகுபலி சுவாமியை தரிசித்து மகிழ்ந்தனர்.

இந்த விழாவில் பல லட்சம் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். கும்பாபிஷேக நீரை 1,008 இயந்திரங்கள் மூலம் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. மேலும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டன.

இந்நிலையில், சரவணபெலகோலாவில் அமைந்துள்ள பாகுபலி சுவாமிக்கு நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த நிறைவு விழாவில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பாகுபலி சுவாமியை தரிசனம் செய்தார்.

இதுதொடர்பாக ராஜ்நாத் சிங் கூறுகையில், இதுபோன்ற மகா மஸ்தாபிஷேக விழாவில் பங்கேற்பது மிகவும் அரிதானது. இந்த விழாவில் கலந்து கொண்டது மன நிறைவை தருகிறது. பாகுபலி சுவாமி மற்றும் அவரது பரிவார சிலைகள் ஜெயின் சமூகத்துக்கு மட்டுமே உரித்தல்ல. வன்முறையை கைவிட்டு அமைதியை நாடும் அனைவருக்கும் உரித்தானது ஆகும் என்றார்.

அப்போது அங்கு கூடியிருந்த ஜைன துறவிகள், மத்திய அரசு சரவணபெலகோலா தலத்தை அகிம்சை தலமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

நிறைவு விழாவின் போது பாகுபலி சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிரப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. மேலும் பல்வேறு வண்ண மலர்களால் அர்ச்சனையும் செய்யப்பட்டது.

பாகுபலி சுவாமியின் மகா கும்பாபிஷேக விழாவுக்காக நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் மாநில அரசு ரூ.175 கோடி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது

Comments (0)
Add Comment