ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு..!! (வீடியோ)

புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற வேண்டும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 21 மாத ஊதிய மாற்ற நிலுவை தொகையை வழங்க வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ சார்பில் 21-ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

மக்களுக்கு இடையூறாக நடைபெறும் இந்த போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், போராட்டத்திற்கு தடை விதிக்க மறுத்ததுடன், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதேசமயம் போராட்டம் நடத்தும் ஆசிரியர்களுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுரைகளை வழங்கி உள்ளார்.

“மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஆசிரியர்கள் தங்கள் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும். இனி நீங்கள் மக்களுக்கு இடையூறு இன்றி போராட்டம் நடத்துவீர்கள் என நம்புகிறேன். தங்கள் அலுவலக வளாகம் மற்றும் தனியார் இடங்களில் போராட்டம் நடத்தினால் அதில் நீதிமன்றம் தலையிடாது” என்றார் தலைமை நீதிபதி.

Comments (0)
Add Comment