தண்டவாளத்தை கடக்க முயன்றவர்கள் மீது ரெயில் எஞ்சின் மோதி 6 வாலிபர்கள் பலி..!!

உத்தரப்பிரதேசத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றவர்கள் மீது ரெயில் எஞ்சின் மோதிய விபத்தில் 6 வாலிபர்கள் பரிதாபமாக பலியாகினர்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹபூர் மாவட்டத்தில் பில்குவா ரெயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரெயில் நிலையம் அருகிலுள்ள சர்வோதயா நகர் பகுதியை சேர்ந்த 7 வாலிபர்கள் நேற்று தண்டவாளத்தை கடக்க முயன்றனர்.

அப்போது அதில் வந்த லோகோமோடிவ் ரெயிலை கண்டு அதிர்ச்சி அடைந்து நின்றனர். தண்டவாளத்தில் நின்ற அவர்கள் மீது ரெயில் எஞ்சின் வேகமாக மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஆரிப் (18), சலீம் (20), சமீர் (15), விஜய் (18) மற்றும் ஆகாஷ் ஆகியோர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர்.

மேலும், படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராகுல் என்பவரும் உயிரிழந்தார். மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.

தண்டவாளத்தை கடக்க முயன்றவர்கள் மீது ரெயில் எஞ்சின் மோதிய விபத்தில் 6 வாலிபர்கள் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)
Add Comment