புற்று நோய் பாதித்த பெண்ணை காப்பாற்றிய கோவை வாலிபர்..!!

டெல்லியை சேர்ந்தவர் கரிமா சரஸ்வத் (37). இவர் ஒரு அலுவலகத்தில் தலைமை அதிகாரியாக பணிபுரிகிறார். இவருக்கு 6 வயதில் ஒரு குழந்தை உள்ளது.

இவரது வாழ்க்கை பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டில் இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே ஆஸ்பத்திரியில் அனுமதித்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் நடத்திய பரிசோதனையில் இவருக்கு ரத்த புற்றுநோய் தாக்கி இருப்பதும் அது பயங்கரமாக வளர்ச்சி அடைந்து உயிரை பறிக்கும் நிலையில் இருப்பதும் தெரியவந்தது.

இருந்தாலும் உறவினர்கள் அல்லாதவரின் ரத்த ஸ்டெம்செல்கள் மூலம் உயிரை காப்பாற்ற முடியும் என்றும் தெரிவித்தனர். இதனால் கரிமாவின் குடும்பம் கவலையில் தவித்தது.

இதற்கிடையே, ரத்த ஸ்டெம்செல் தானம் பெறுவதற்கு தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது தாத்ரி என்ற உடல் உறுப்பு தான அமைப்பை தொடர்பு கொண்டனர்.

அங்கு பதிவு செய்திருந்த குருமூர்த்தி (27). என்பவரின் ரத்த ஸ்டெம் செல் கரிமாவின் உடலுக்கு ஒத்துப்போனது தெரிய வந்தது. எனவே அவரிடம் இருந்து ரத்த ஸ்டெம்செல்கள் தானமாக பெற்று கரிமாவுக்கு செலுத்தப்பட்டது. இதனால் அவர் மரணத்தில் இருந்து மீண்டு உயிர் பிழைத்தார்.

கரிமாவுக்கு ரத்த ஸ்டெம்செல்கள் தானம் செய்த வாலிபர் குருமூர்த்தி கோவையை சேர்ந்தவர். இவர் மெக்கானிக் ஆக பணிபுரிகிறார். கோவையில் உள்ள மசானிக் ஆஸ்பத்திரியில் கடந்த 2016-ம் ஆண்டில் ரத்த ஸ்டெம்செல் தான உறுப்பினராக பதிவு செய்திருந்தார்.

குருமூர்த்தியின் தங்கை 3 வயதில் ரத்த புற்று நோயால் மரணம் அடைந்து விட்டார். தற்போது கரிமாவுக்கு ரத்த ஸ்டெம் செல்கள் தானம் வழங்கி காப்பாற்றியதன் மூலம் அவரை தங்களது மகளாகவே குருமூர்த்தியின் குடும்பத்தினர் கருதுகின்றனர்.

இதற்கிடையே ஸ்டெம் செல் சிகிச்சை பெற்ற கரிமா ரத்த புற்று நோயில் இருந்து மீண்டு முற்றிலும் குணமாகி விட்டார். அவர் குருமூர்த்தியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

Comments (0)
Add Comment