சின்னம்: முற்றுப்புள்ளி வைத்த கமல்..!!

தன் கட்சிக் கொடியிலுள்ள சின்னம் தொடர்பான சர்ச்சைக்குச் சென்னை விமான நிலையத்தில் நடிகர் கமல்ஹாசனும் மும்பை தமிழ்ச் சங்க நிர்வாகிகளும் விளக்கம் அளித்தனர்.

நடிகை ஸ்ரீதேவி நேற்று முன்தினம் துபாயில் காலமானார். அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காகப் பல்வேறு நடிகர்களும் மும்பை விரைந்த வண்ணம் உள்ளனர். ஸ்ரீதேவியுடன் அதிகப் படங்களில் நடித்தவரான நடிகர் கமல்ஹாசன், இன்று (பிப்ரவரி 26) விமானம் மூலம் மும்பை புறப்பட்டுச் சென்றார்.

முன்னதாகச் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், கட்சியின் சின்னம் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். “என் மீது வைத்துள்ள அன்பின் காரணமாக மும்பை தமிழ் சங்கத்தின் சின்னத்தை எங்களுக்கு எழுதிக் கொடுத்துவிட்டனர். பின்னாட்களில் எவரும் எங்கள் சின்னம் என்று உரிமை கொண்டாடக் கூடாது என்று அதனை அவர்களே மனமுவந்து முடித்து வைத்துவிட்டனர்” என்று விளக்கம் அளித்தார்.

தற்போது ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்குக்கு மும்பை செல்வதாக கூறிய அவரிடம், புகழ் பெற்றவர்களுடைய இறுதி நிகழ்சிகளில் பங்கேற்பதில்லை என்று கூறியுள்ளீர்களே என்ற கேள்விக்கு, “இறுதி ஊர்வலங்களில்தான் பங்கேற்க மாட்டேன். இறுதிச் சடங்குகளில் பங்கேற்பேன். முன்பு வேண்டாம் என்று முடிவு செய்தேன். ஆர்.சி.சக்தி அவர்களின் இறுதி ஊர்வலத்தில்தான் இறுதியாகக் கலந்துகொண்டேன். அவர்கள் எனக்கு குடும்பம் மாதிரி” என்றும் கூறினார்.

ஸ்ரீதேவி இறப்பில் சந்தேகம் உள்ளது என்று நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு, “அவர்களின் குடும்பத்திடம் துக்கம் விசாரிக்கச் செல்கிறேன். இதைப் போய் அவர்களிடம் கேட்க முடியுமா?. நீங்கள் அவர்களிடம் கேளுங்கள். நான் அவர்களிடம் கேட்க முடியாது” என்றும் கூறிய அவர், சின்னமும் கட்சிப் பெயரும் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் மாற்றியமைக்கப்படும் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளதே என்ற கேள்விக்கு, இல்லை என்று ஒரே வார்த்தையில் பதிலளித்தார்.

அடுத்துப் பேசிய மும்பை செம்பூர் தமிழர் பாசறை நிர்வாகி ராஜேந்திர சுவாமி,”கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்தவுடன் அவருடைய சின்னமும், எங்களுடைய சின்னமும் ஒரே மாதிரி இருந்ததால் நாங்களே மனமுவந்து அவருக்குச் சின்னத்தை விட்டுக்கொடுத்தோம். கமல்ஹாசன் கட்டும் ஜனநாயகக் கோயிலில் எங்கள் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காக இருவரும் அந்தச் சின்னத்தை உபயோகிக்கப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளோம். கமல்ஹாசன் தமிழக மக்களுக்குச் சிறப்பான சேவை செய்ய வேண்டும் என்று மும்பை தமிழர்கள் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறோம்” என்றும் கூறினார்.

கடந்த 21ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்த நடிகர் கமல்ஹாசன் கட்சிக் கொடியில், ஆறு கைகள் இணைந்த வடிவத்தில் சின்னம் வடிவமைக்கப்பட்டிருந்தது. 3 கைகள் வெள்ளை நிறத்திலும், 3 கைகள் சிவப்பு நிறத்திலும் உள்ளன. அந்தக் கைகளின் மையத்தில் வெள்ளை நட்சத்திரமும் அதைச் சுற்றிக் கறுப்பு நிற வளையம் இருப்பதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, சின்னம் காப்பியடிக்கப்பட்டிருப்பதாகச் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதாவது மற்ற சங்கங்களின் முத்திரையை ஒத்திருப்பதாகவும், மும்பை

செம்பூர் தமிழ்ச் சங்கத்தின் சின்னம் போல இருப்பதாகவும் கூறினார்கள். இந்நிலையில் இந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment