தடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..! பாணுக்குள் இருந்த ஆயுதம்..! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 143)

தடபுடலான உபசரிப்பும் கெடுபிடியான கொலைகளும்!! பாணுக்குள் இருந்த ஆயுதம்! அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 143)

1989 பெப்ரவரியில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தவர்களில் ஒருவர் முன்னாள் கற்குடா பா.உ.வும் முன்னாள் அமைச்சருமான கே.டபிள்யூ தேவநாயகம்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் துரோகிகள் பட்டியலில் இடம்பெற்று, மேடைகளில் தரக்குறைவாக வசைபாடப்பட்டவர்களில் அவரும் ஒருவர்.

முன்னாள் மட்டக்களப்பு தொகுதி எம்.பி.யும் முன்னாள் அமைச்சருமான செ.இராசதுரை கொழும்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

வடக்கு-கிழக்கில் துரோகிகளுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது. அவர்களை மக்கள் நிராகரித்துவிட்டனர். இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்கு எதிராக மக்கள் தீர்ப்பளித்துள்ளனர் என்று புலிகள் இயக்கத்தினர் கருத்து வெளியிட்டனர்.

அமிர் தலைமையில் போட்டியிட்ட துரோகக் குழுக்களுக்கும், கூட்டணியினருக்கும் சாவுமணியடிக்கப்பட்டு விட்டது என்று புலிகள் தெரிவித்திருந்தனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால் கூட்டணியினரை புலிகள் மட்டுமல்ல கூட்டணிப்பட்டியலில் போட்டியிட்ட ஈ.பி.ஆர்.எஃப். இயக்கத்தினரும் குறி வைத்துத் தாக்கிக் கொண்டிருந்தார்கள். இருபுறமும் இடி வாங்கிக்கொண்டிருந்தது கூட்டணி.

பெருமாள் அறிக்கை

கூட்டுச்சேர்ந்து மட்டுமல்லாமல், பொதுப்பட்டியலிலும் இணைந்து போட்டியிட்ட நிலையில் வெற்றி, தோல்விகளுக்கு கூட்டுச்சேர்ந்திருந்த அனைவருமே பொறுப்பேற்பதுதான் நியாயம்.

ஆனால் ஈ.பி.ஆர்.எஃப். இயக்கமும், வடக்கு-கிழக்கு மாகாண முதல்வரான வரதராஜப்பெருமாளும் தோல்விகளுக்கான பொறுப்பை கூட்டணியினர்மீது சுமத்தினர். பொதுப்பட்டியலில் போட்டியிட்டதால் கிடைத்த வெற்றிகளுக்கு தாமே காரணம் என்று உரிமை கொண்டாடினார்கள்.

தேர்தல்முடிவுகளை அடுத்து மட்டக்களப்பிபில் பத்திரிகையாளர் மாநாடு ஒன்றை நடத்தினார் வரதராஜப் பெருமாள் கூறியது இதுதான்:

மாகாண சபையைக் கலைத்து ஈ.பி.ஆர்.எஃப். இயக்கத்தை தொலைத்து விடவேண்டும் என்ற நோக்கத்துடன் செயற்பட்டமையால்தான் தமிழர் விடுதலைக் கூட்டணி படுதோல்வி அடைந்தது. கூட்டணி மட்டுமல்ல, வேறு பல கட்சிகளும், குழுக்களும்கூட இந்த நோக்கத்துடன்தான் செயற்பட்டன.

தமிழர் விடுதலைக் கூட்டணி பொதுத்தேர்தலில் நிராகரிக்கப்பட்டுள்ளதால், தேசிய பட்டியல் ஊடாக பதவிக்கு வர முனைவது அரசிpயல் ஒழுங்கீனமாகும். தேர்தல் மூலமே பதவிக்கு வர முனைய வேண்டும்.

கூட்டணியில் ஒருவராவது வெற்றி வென்றிருந்தால் ~~போனஸ் உறுப்பினர் பதவியை அவர்களுக்கு விட்டுக்கொடுப்பது நியாயம். ஆனால் இந்த நிலையில் மக்களின் தீர்ப்புக்கு மதிப்புக் கொடுப்பதுதான் அரசியல் நாகரிகமாகும்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஈ.பி.ஆர்.எஃப். உறுப்பினர்கள் அனைவரும் ஈ.பி.ஆர்.எஃப். உறுப்பினர்களாவர் என்று கூட்டணியின் செயலாளர் நாயகம் தேர்தல் ஆணையாளருக்கு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கிறோம் என்று கூறினார் பெருமாள்.

ஆறுமாத வரையறை

இலங்கையில் இருந்து இந்தியப்படை வெளியேறுவதற்கு ஆறுமாதகால வரையறை விதிக்கப்பட்டுள்ளது என்று அறிவித்தார் ரஞ்சன் விஜயரத்ன. இலங்கையின் வெளிநாட்டமைச்சராகவும் ஜனாதிபதி பிரேமதாசாவால் நியமிக்கப்பட்டிருந்தார் ரஞ்சன் விஜயரத்ன.

“இந்திய அமைதிப்படை வெளியேறுவதற்கு காலவரையறை எதனையும் விதிக்க முடியாது. இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாணத்தில் அமைதி நிலை ஏற்படுவதையும், இந்திய-இலங்கை உடன்படிக்கை படிப்படியாக நடைமுறைக்கு உள்ளாவதையும் பொறுத்தே இந்தியப் படை வாபஸ் பெறப்படும்’‘ என்று இந்திய வெளியுறவுத்துறை  இணை அமைச்சர் கே.திவாரி தொிவித்தார்.

ரஞ்சன் விஜயரத்ன கூறியதற்கு பதிலடி கொடுப்பதுபோலவே திவாரியின் கருத்து வெளியானது.

இலங்கை மத்திய அரசுக்கும், வடக்கு-கிழக்கு மாகாண அரசுக்கும் இடையே ஆரம்பத்தில் உறவுகள் சுமுகமாக இருப்பதுபோலத் தோறினாலும், பனிப்போர் இருக்கவே செய்தது.

 வடக்கு-கிழக்கு மாகாண சபை தம்மை மாகாண அரசாங்கம் என்று மட்டுமே குறிப்பிட வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியது.

மாகாண அரசாங்கம் என்று குறிப்பிடப்பட்டால் கிட்டத்தட்ட ஒரு கூட்டாச்சித்தன்மை கொண்டதாக கருதப்பட்டுவிடும். அதிகாரங்களும் கூடியதாக இருக்கும். அதனால் அவ்வாறு அழைக்கப்படுவதை பிரேமதாசா அரசு விரும்பவில்லை.

இந்த விடயத்தில் வடக்கு-கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் உறுதியாக நின்றார் என்பதை குறிப்பிட்டேயாகவேண்டும். மாகாண அரசாங்கம் என்றுதான் குறிப்பிடுவோம் என்று விடாப்பிடியாக கூறிக்கொண்டிருந்தார்.

இந்திய-இலங்கை  ஒப்பந்தப்படியும், அரசியலமைப்புப் படியும் மாகாண சபைகள் என்றே கூறப்பட்டுள்ளது. மாகாண அரசாங்கம் என்று எங்கும’ குறிப்பிடப்டவில்லை என்று பிரேமதாசா அரசு கூறியது.

{தற்போது சந்திரிகா அரசு முன்வைத்துள்ள தீர்வு யோசனைகளிலும் பிராந்திய சபைகள் என்ற பதமே உள்ளது. பிராந்திய அரசாங்கங்கள் என்றே குறிப்பிடப்படவேண்டும் என்று ஐந்து தமிழ் கட்சிகள் கூட்டாக முன்வைத்த யோசனையில் தொிவித்துள்ளன}

உளவு வேலைகள்

இந்திய படை முகாம்கள், இந்தியப் படையினரின் நடமாட்டங்கள் என்பவற்றை கண்காணிக்க புலிகள் பல்வேறு வேடங்களில் திரிந்தார்கள்.

யுhழ்ப்பாணத்தில் உள்ள உணவு விடுதியில் இருந்து குருநகரில் இருந்த இந்தியப்படை அதிகாரிகளுக்கு உணவு கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

ஒருமுறை அவ்வாறு உணவு கொண்டு சென்ற வேளை முகாமுக்கு அருகில் ஒரு சீவல் தொழிலாளி வழிமறித்தார்.

நீர் இந்தியப் படை முகாமுக்கு அடிக்கடி சென்று வருகிறீர், என்ன விடயமாகப் போகிறீர்? என்று கேட்டார் சீவல் தொழிலாளி, வேனில் இருந்தவர்களுக்கு, அவர் சீவல் தொழிலாளி போல வந்திருக்கும் புலிகள் இயக்க உறுப்பினர் என்பது விளங்கிவிட்டது.

“அவர்கள் உணவுக்கு பணம் கட்டிவிட்டுப் போகிறார்கள் நாங்கள் கொண்டு சென்று கொடுக்கிறோம்” என்றார் வேனில் இருந்தவர்.

“உணவு கொடுப்பதோடு நிறுத்திக் கொள்ளும். வேறு ஏதாவது தகவல் கொடுத்தால் என்ன நடக்கும் தெரியும்தானே” என்று எச்சரித்துவிட்டுப் போய்விட்டார் புலிகள் இயக்க உறுப்பினர்.

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் ஒரு சம்பவம் நடந்தது. ஹர்த்தால் அனுஷ்டிக்கும் படி புலிகள் அறிவித்திருந்தார்கள். ஈ.பி.ஆர்.எஃப். இயக்கத்தினர் ஒவ்வொரு கடையாகச் சென்று “கடைகளை மூடக்கூடாது. மூடினால் நிரந்தநமாக மூடவேண்டியதுதான்” என்று எச்சரித்துக் கொண்டு சென்றனர்.

அவ்வாறு கடை கடையாக அவர்கள் சென்று கொண்டிருந்தபோது மக்களோடு மக்களாக நின்று கவனித்துக் கொண்டிருந்தார் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர்.

அவரதுகையில் ஒரு சொப்பிங் பை இருந்தது. அதற்குள் ஒரு இறாத்தல் பாண் இருந்தது.

ஈ.பி.ஆர்.எஃப். உறுப்பினர்கள் தன் அருகில் வந்ததும் பாணுக்குள் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து அவர்களில் ஒருவரை சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டார் அந்தப் புலிகள் இயக்க உறுப்பினர்

தேடுதல் வேட்டை

நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோஸ் வடக்கில் அமோக வெற்றிபெற்றதை ஈ.பி.ஆர்.எஃப். இயக்கத்தினரால் ஜீரணிக்க முடியவில்லை.

யாழ் குடாநாட்டில் ஈரோஸ் முக்கியஸ்தர்கள் மற்றும் உறுப்பினர்களின் வீடுகளுக்கு இரவிரவாகச் சென்று தேடுதல் நடத்தினார்கள்.

ஈரோஸ் முக்கியஸ்தரான கரன் என்பவரது வீட்டுக்கும் அவ்வாறு சென்றனர். அப்போது வீட்டில் கரன் இருக்கவில்லை. கரனது மைத்துனரும், ஈரோஸ் முக்கியஸ்தருமான சுதா மாஸ்டர் வீட்டில் இருந்தார்.

தேடிவந்தவர்களுக்கு சுதா மாஸ்டரைத் தெரியாது. கரனின் வீட்டாரிடம், கரன் எங்கே, சுதா மாஸ்டர் எங்கே? ஏன்று விசாரித்தார்கள்.

இருவரும் இங்கே இல்லை. எப்போதாவதுதான் வருவார்கள் என்றர். சுதா மாஸ்டரைக் காட்டி ”இவர் யார்?’ என்று கேட்டார்கள்.

”எங்கள் மருமகன்” உண்மையைத்தான் சொல்லுகிறீர்களா?; என்று கேட்டனர். வீட்டில் இருந்த திருமணப் போட்டோவைக் காண்பித்தார்கள்.

தேடி வந்தவர்களுக்கு அதனால் நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. வீட்டுக்குள் ஒளிந்திளிந்திக்கிறார்களா எனறு பார்த்து வீட்டு.

”எங்கள் கண்ணில்பட்டால் அவர்கள் தொலைந்தார்கள். அவர்களது நல்ல நேரம் இங்கே இல்லாமல் போய்விட்டார்கள்” என்று கூறிவிட்டு சென்றுவிட்டனர்.

தாங்கள் தேடிச் செல்பவர்கள் பற்றிய போதிய தகவல்கள் இல்லாமல் அவர்கள் வந்தது போனதால் சுதா மாஸ்டர் உயிர்தப்பினார். அவர் வேறுயாருமல்ல தற்போது ஈரோஸ் இயக்க பொதுச் செயலாளராக இருக்கும் சுதாகரன்தான் அவர்.

யாரையோ தேடிச்சென்று வேறு ஒருவரை சுட்டுவிட்டுப் போவது, தங்கள் உறுப்பினர்களைக்கூட யார் என்று தெரியாமல் தவறுதலாகச் சுட்டுத்தள்ளியது என்று ஈ.பி.ஆர்.எஃப். இயக்கத்தினர் நடத்திய கூத்துக்கள் பல இருக்கின்றன.

ஈரோஸ் தலைவர் பாலகுமார்

பேச்சும்-கொலையும்

வன்னிப் பிராந்தியத்தில் நெடுங்கேணியில் ஈரோஸ் உறுப்பினர் ஒருவர் இந்திய அமைதிப் படையினரால் கைதுசெய்யப்பட்டார்.

ஈரோஸ் தலைவர் பாலகுமார் கடிதம் ஒன்றைக் கொடுத்து தமது உறுப்பினர்கள் சிலரை நெடுங்கேணியில் இருந்த இந்தியப்படை முகாமுக்கு அனுப்பிவைத்தார்.

இந்தியப் படை அதிகாரியுடன் தமது உறுப்பினரின் விடுதலை பற்றிப் பேசிவிட்டு ஈரோஸ் உறுப்பினரின் விடுதலை பற்றிப் பேசிவிட்டு ஈரோஸ் உறுப்பினர்கள் ஆறுபேரும் திரும்பினார்கள்.

அவர்களுடன் பேசிய இந்தியப்படை அதிகாரி வவுனியாவில் உள்ள ஈ.பி.ஆர்.எஃப். முகாமுக்கு சென்று கதைக்குமாறும், குறிப்பிட்ட உறுப்பினர் தொடர்பாக தகவல் தந்தது அவர்கள்தான் என்றும் கூறியிருந்தார்

அதனால் வவுனியாவில் இருந்த ஈ.பி.ஆர்.எஃப். இயக்க முகாமுக்கு அவர்கள் ஆறுபேரும் சென்றனர்.

ஈ.பி.ஆர்.எஃப். முகாமில் தடபுடலான வரவேற்புக் கிடைத்தது. ”வாருங்கள் தோழர்கள்” என்று குளிர் பானங்கள் எல்லாம் கொடுத்து உபசரித்தனர்.

கைதுசெய்யப்பட்ட உறுப்பினரை விடுவிப்பது முதல், இயக்கப் பிரச்சனைகள் வரை பேசிமுடித்துவிட்டு பிற்பகல் 2 மணிக்கு ஈரோஸ் உறுப்பினர்கள் ஆறுபேரும் புறப்பட்டனர்.

அடிக்கடி இந்தப் பக்கம் வாருங்கள் என்று அன்பாக வழியனுப்பி வைத்தனர் ஈ.பி.ஆர்.எஃப். இயக்கத்தினர்.

வவுனியாவில் தமது இயக்க உறுப்பினர்களைச் சந்தித்து ஈ.பி.ஆர்.எஃப். இயக்க உபசரிப்புப் பற்றிய கதை கதையாக கூறிவிட்டு ஆறுபேரும் நெடுங்கேணிக்கு புறப்பட்டனர்.

வவுனியாவில் ஒதுக்குப் புறமான இடமொன்றில்  வைத்தது அர்களை வழிமறித்தனர் ஈ.பி.ஆர்.எஃப். இயக்கத்தினர் .

உங்களோடு பேசவேண்டும் பொறுப்பாளர் வரச் சொன்னார்  பேசியபின்னர் உங்களை உரிய இடத்திற்கு கொண்டுபோய் சேர்க்கிறோம் என்றார்கள்.

இப்போது அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டது வேறு ஒரு இடத்தில் இருந்த ஈ.பி.ஆர்.எஃப்.  முகாமுக்கு.

அந்த முகாமுக்குள் சென்றதுமே ஈரோஸ் உறுப்பினர்கள் ஆறுபேரும் செமத்தியபக தாக்கப்பட்டனர். பின்னர் அறுபேரையும் கட்டிப்போட்டு சித்திரவதை செய்தனர்.

இறுதியாக ஆறுபேரையும் சுட்டுக் கொன்றார்கள். உடல்களை உமிக் குவியுலுக்குள் போட்டு தீயிட்டனர். பாதி எரிக்கப்பட்ட நிலையில் இருந்த ஆறுஉடல்களும் இந்திய படையினரால் கண்டெடுக்கப்பட்டது.

தமது ஆறு உறுப்பினர்கள்  ஈ.பி.ஆர்.எஃப்.  இயக்கத்தால் கடத்தப்பட்டதாக இந்தியப் படையிடம் ஈரோஸ் புகார் செய்திருந்தது.

அதனால் ஈரோஸ் தலைவர் பாலகுமார் சென்று தனது உறுப்பினர்கள்தான் அவர்கள் என்று சடலங்களை இனம் காட்டினார்.

முதலலில் அந்த ஈரோஸ் உறுப்பினர்களை  ஈ.பி.ஆர்.எஃப்.  உபசரித்தமைக்கு காரணம் இல்லால் இல்லை.

இந்தியபடை அதிகாரி ஒருவரே ஈ.பி.ஆர்.எஃப்.  புடன் பேசுமாறு குறிப்பிட்ட முகாமுக்கு அனுப்பிவைத்தார்.  அதனால் அந்த முகாமுக்கு வந்தவர்கள்  அங்கேயே வைத்து காணாமல் போனால் குறிப்பிட்ட அதிகாரிக்கு விஷயம்  தொிந்துவிடுமே, அதனால்தான் விட்டுப்பிடித்தார்கள்.

நாகரத்தினம்(மாமா), குணபால், அருச்சுனன்(ஐயா) ராமத்சந்தினை்(சாம்) சிவபாலன் (செல்லம்) வன்னி ஆகிய ஆறுபேரே கொல்லப்பட்டனர்.

இச்சம்பம் பற்றி வெளியே தொிந்ததும் ஈ.பி.ஆர்.எஃப்.  இயக்கத்தினர் முந்திக் கொண்டு ஒரு அனுதாப அறிக்கை வெளியிட்டனர். கொலைக்கு காரணமானவர்களை கண்டிப்பதாகவும் தொிவிக்கப்பட்டது.

இதற்கு முன்பாக வன்னியில் ஈரோஸ் உறுப்பினர்களான ஹரன், மஹிந்தர், விஜி, வரன், அஜித், சில்வா ஆகியோர்  ஈ.என்.டி.எல்.எஃப். இயக்கத்தினரால் கொல’லப’பட்டனர்.

ஐக்கியத்துக்கு அழைப்பு

புலிகள் உட்பட சகல சத்திகளும் ஐக்கியப்படுவதையே ஈ.பி.ஆர்.எஃப். விரும்புகிறது. பேச்சுக்கள் மூலமாக பிரச்சனைகளை தீர்க்க விரும்பும் ஜனநாயகவாதிகள் நாங்கள். ஈரோஸ் இயக்கத்தினரையும் பேச வருமாறு அழைக்கிறோம் என்று வரதராஜப் பெருமாள் அழைப்பு விடுத்தார்.

அவர் அழைப்பு விடுத்த சில நாட்களுக்குள் ஈரோஸ் உறுப்பினர்கள் மூன்றுபேர் இரவோடு இரவாகக் கடத்திச் செல்லப்பட்டனர்.

ஜோசப், சந்திரன், ஜோன்சன் ஆகியோரே அவ்வாறு கடத்திச் செல்லப்பட்டனர். மூவரும் சுட்டுக்கொல்லப்பட்டதோடு அவர்களது உடல்களும் கிடைக்காமல் செய்துவிட்டனர்.

இது தொடர்பாக ஈரோஸ் விடுத்த அறிக்கையில் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மக்கள் கொடுத்த தீர்ப்புக்கு முகம் கொடுக்க முடியாத நிலையில் எம்மை அழித்தொழிக்க திரைமறைவில் தீட்டிய சதியின் விளைவுகளே இவையாகும்.

தேனொழுகப் பேசியபடி நெஞ்சிலே வஞ்சனையை சுமந்து திரிகிறார்கள். எமது அமைப்புடன் இருக்கக்கூடிய முரண்பாடுகளை பேசித் தீர்த்துக் கொள்ளலாம் ஈனத்தனத்தை செயற்படுத்தி வருகின்றனர்.
தமது திட்டமிட்ட படுகொலைகளுக்கு ஈ.பி.ஆர்.எஃப். இயக்கத்தினர் என்ன நியாயம் கூறப்போகிறனர்? என்று ஈரோஸ் கேள்வி எழுப்பியிருந்தது.

மற்றொரு பேச்சுவார்த்தை

வந்தாறு மூலையில் இருந்து மட்டக்களப்பை நோக்கி மோட்டார் சைக்கிள் ஒன்றில் ஈரோஸ் உறுப்பினர்கள் இருவர் சென்று கொண்டிருந்தனர்.

ஏறாவூர் சந்தியில் வைத்து அவர்களை ஈ.பி.ஆர்.எஃப். இயக்கத்தினர் வழிமறித்தனர்.
உங்களுடன் சில விஷயங்களைப் பேசவேண்டும் வாருங்கள் என்று கூறி அவர்களை தமது முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.

அழைத்துச் செல்லப்பட்ட இரவே இருவரும் கொல்லப்பட்டனர். ஈரோஸ் உறுப்பினர்களான முருகன், கஜன் ஆகியோரே அவ்வாறு கொல்லப்பட்டனர்.

கஜனின் சொந்தப் பெயர் மார்க்கண்டு நிஷாகரன். (அன்புவழிபுரம்-திருமலை) ஈரோஸ் இயக்க மட்டக்களப்பு பிரதேச இராணுவப் பொறுப்பாளாராக செயற்பட்டவர்.

1983 முதல் ஈரோஸ் இயக்க உறுப்பினராக இருந்தவர். மட்டக்களப்பில் இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக தாக்குதல்களுக்கு தலைமை தாங்கியவர்.

புலியான மற்றொவரான முருகனின் சொந்தப் பெயர் கைலாசபதி அன்பழகன் யாழ்பாணம் நாயன்மார்க்கட்டை பிறப்பிடமாகக் கொண்டவர். 1983 முதல் ஈரோஸ் இயக்க உறுப்பினர்.

வைக்கப்பட்ட குறி

யாழ் நகரில் இந்தியப் படையினர் மீது தாக்குதல் ஒன்று நடத்தத் திட்டமிட்டனர் புலிகள். அதற்காக லான்ட் மாஸ்டர் (மூன்று சில்லு ட்ராக்டர்) ஒன்றில் வெடி மருந்தை நிரப்பி எடுத்துச் சென்றனர். வண்டியின் மேல் யாழ்பாணம் சந்தைக்கு கொண்டு செல்வதுபோல் மரக்கறிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததன.

பலாலி வீதிவழியாக யாழ் நகர் நோக்கி லான்ட் மாஸ்டர்  சென்றுகொண்டிருந்தது. கந்தர் மடம் பகுதியை கடந்து கொண்டிருந்தபோது ஏதோ ஒரு கோளாறு காரணமாக லான்ட் மாஸ்டர்  வெடித்துச் சிதறியது.

மேஜர் சுபாஸ் (நவாலி) உட்பட புலிகள் இயக்க உறுப்பினர்கள் மூன்றுபேரும் அப் பகுதியால் சென்றுகொண்டிருந்த பொது மக்கள் சிலரும் பலியாகினர்.

காட்டிலிருந்து

வன்னிக் காட்டில் இருந்து வெளிநாட்டில் உள்ள தனது நண்பன் ஒருவருக்கு புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் எழுதிய கடிதம் புலிகளின் வெளிநாட்டு பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

அக்கடிதத்தில் இருந்து ஒருபகுதி:

”தமிழீழம் என்பது அமிர்தலிங்கம் சொன்னது போல் ஐந்தாயிரம் இளைஞர்கள் இருந்தால் ஆறுமாதத்தில் கிடைக்கும் என்பது போல் அல்ல. எங்களுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கை முடிய பல வருடங்கள் செல்லாம்.

அதன்பின்னர் சிறீலங்காவுக்கு எதிராக போராடவேண்டி வரும். எங்கள் இலச்சியம் தமிழீழம்தான். அதற்கு குறைந்ததீர்வை ஏற்க மாட்டோம்.

இடையிடையே மாகாணசபை போன்ற  இடைக்காலத்தீாவுகள்  தீர்வுகள் வரலாம். ஆனால் தமிழீழம் கிடைக்கும் வரை கழுத்தில் உள்ள சயனைட்டை கழற்ற மாட்டோம்’‘ என்று எழுதியிருந்தார்.

(தொடர்ந்து வரும்)

 அரசியல் கட்டுரை எழுதுவது அற்புதன்

தொடரும்… (Thanks… ILAKKIYAA Inaiyam…) -தொகுப்பு… கி.பாஸ்கரன், சுவிஸ்.
 
***** முன்னைய  தொடர்களை பார்வையிட இங்கே  அழுத்தவும்….
Comments (0)
Add Comment