“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார்!! – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பகுதி-2)

“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார்!! – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பகுதி-2)

அரசியல் மதியுரைஞர்

எல்.ரீ.ரீ.ஈயினால் அரசியல் மதியுரைஞர் என அழைக்கப்பட்ட பாலசிங்கம் ஒருசுவராஸ்யமான மனிதர்.

அவர் உயிர்த்துடிப்பான ஆனால் சர்ச்சசைக்குரிய மனிதர். அவர் சிலரால் போற்றப்பட்டும் சிலரால் தூற்றப்பட்டும் உள்ளார்.

இந்த எழுத்தாளருக்கு பாலசிங்கத்துடன் உள்ள உறவு கூட உயர்வுகளும் மற்றும் தாழ்வுகளையும் கொண்டது. நான் அவரை போற்றுதல் மற்றும்  விமர்சித்தல் ஆகிய இரண்டையும் செய்துள்ளேன்.

 உண்மையில் அது அப்போது இருந்த நிலமையில் தங்கியிருந்தது. எனினும் இந்த மனிதர் மற்றும் ஸ்ரீலங்கா தமிழர் விவகாரங்களில் அவரது பங்களிப்பு பற்றி அதிகம் எழுத முடியும்.

1938 மார்ச் 4ல் பிறந்த பாலசிங்கம் பல இழைகளின் கலவை.

அவரது தந்தை கிழக்கையும் மற்றும் தாய் வடக்கையும் சேர்ந்தவர்கள்.

அவரது தாய் ஒரு கிறீஸ்தவர் மற்றும் தந்தை ஒரு இந்து. அவரது பெற்றோர்கள் வித்தியாசமான சாதிகளைச் சோந்தவர்கள்.

ஒரு கத்தோலிக்கராக வளர்க்கப்பட்ட போதிலும் விரைவிலேயே பாலசிங்கம் ஒரு பகுத்தறிவுவாதியாகவும் மற்றும் யதார்த்தவாதியாகவும் மாறினார்.

இருந்தும் அவர் விரைவிலேயே புத்த பகவானின் போதனைகளில் ஆழமாகச் சென்று அதன் ஈர்ப்புக்கு உட்பட்டார்.

பாலசிங்கத்தின் முதல் மனைவி யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் புரொட்டஸ்தாந்து மத்தவராவார். அவரது இரண்டாவது மனைவி அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஆங்கிலோ – சக்ஸன் இன பெண்மணியாவர்ர்.

அவர் ஒர பிரித்தானிய பிரஜையாக இருந்தாலும் அவரது தாயகமான தமிழ் ஈழத்துக்காக ஏங்கியவர் – அது ஒருநாள் உருவாகும் என அவர் நம்பினார்.

பாலசிங்கத்தின் பாட்டனார் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மண்டூரைச் சோந்த ஒரு சைவ குருக்கள் ஆவார்.

அவரது தந்தை மட்டக்களப்ப மருத்துவமனையில் ஒரு மின்னியல் முகாரியாக கடமையாற்றினார்.

பாலா அண்ணையின் தாய் யாழ்ப்பாண பட்டினத்தை சோந்தவரும் மற்றும் மார்ட்டின் ரோட்டில் முன்பு வசித்தவரும் ஆவார்.

தொழில் முறையில் அவர் ஒரு மருத்துவ மாது ஆவார், மற்றும் அவர் மட்டக்களப்பு மருத்துவமனையில் பணிபுரிந்தபோதுதான் பாலா அண்ணையின் தகப்பனை சந்தித்து. காதலித்து,மற்றும் அவரை மணம் புரிந்தார்.

பின்னர் அவரது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து இளம் வயதிலேயே விதவையானார்.

பாலசிங்கம் ஒரு சிறு பிள்ளையாக இருந்தபோதே அவரது தாயாருடனும் மற்றும் மூத்த சகோதரியுடனும் சேர்ந்து வடக்கிற்கு சென்றார்கள்.

வடமராட்சி பிரிவிலுள்ள கரவெட்டியில் அவர்கள் குடியமாந்தார்கள். பாலா அண்ணையின் தாய் அத்துலு தண்ணீர் தாங்கியின் அருகிலுள்ள கரவெட்டி “அம்பாம் வைத்தியசாலையில்” ஒரு மருத்துவ மாதாக பணியாற்றினார்.

அந்த வைத்தியசாலையின் அருகிலுள்ள முன்னாள் பலாலி ஆசிரிய பயிற்சிக் கல்லூரி அதிபர் கந்தசாமிக்கு சொந்தமான ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அவர்கள் அதில் வசித்து வந்தார்கள்.

அவரது பிள்ளைப் பராயத்தில் மற்றும் ஆரம்ப இளமைக்காலத்தில் பாலசிங்கம் ஏ.பி.ஸ்ரனிஸ்லாஸ் என அழைக்கப்பட்டார்.

அவர் கரவெட்டி பரிசுத்த திரு இருதயக் கல்லூரி மற்றும் நெல்லியடியில் உள்ள நெல்லியடி மத்திய கல்லூரி (பின்னர் மத்திய மகா வித்தியாலயம்) என்பனவற்றில் கல்வி பயின்றார்.

அந்த நாட்களில் கரவெட்டி மற்றும் நெல்லியடி என்பன இடதுசாரி கோட்டைகளாக இருந்தன. பழம்பெரும் கம்யுனிசவாதிகளான பொன் கந்தையா மற்றும் பலர் அந்த இடத்தை சேர்ந்தவர்கள்.

ஸ்ரனி என அழைக்கப்பட்ட இளம் பாலசிங்கம் அப்போது கூட இடதுசாரி சிந்தனைகளின் அங்கத்தவராக இருந்துள்ளார். அவரது பிரியமான மற்றொரு பொழுது போக்கு நெல்லியடி சந்தியில் டீ – கடை நடத்தும் மலையாளியான சங்குண்ணியின் கடையில் அமர்ந்து டீ யை உறிஞ்சிக் குடித்தபடி சீட்டு விளையாடுவது.

அந்த நாட்களில் ஸ்ரனிஸ்லாஸ் ஆழ்ந்த ஈடுபாடு காட்டிய ஒரு மனிதர் தமிழ் கேலிச்சித்திரக் காரர்களில் அதிக அனுபவமுள்ளவரான சிவஞர்னசுந்தரமாவார், இவர் பின்னாட்களில் சிரித்திரன் என்கிற ஒரு புகழ்பெற்ற சஞ்சிகையை நடத்தினார்.

கார்ட்டூன் சுந்தர் என அழைக்கப்படும் இவரது சவாரித் தம்பர் என்கிற துணுக்கு மிகவும் புகழ்பெற்ற தாகும். அவரும் கூட கரவெட்டியை சேர்ந்தவர்.

சிவஞானசுந்தரத்தின் முயற்சி காரணமாகத்தான் 60களின் ஆரம்பத்தில் கொழும்பில் இருந்து வெளியாகும் தமிழ் பத்திரிகையான வீரகேசரியில் ஸ்ரனிஸ்லாஸ் உதவி ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.

அந்த நாட்களில் ஸ்ரனி வீரகேசரி அலுவலகத்துக்கு அருகில் உள்ள கிரான்ட்பாஸ் விடுதியில் தங்கியிருந்தார்.

வீரகேசரியில் அவருடன் பணியாற்றிய முன்னாள் சகாக்கள் அவரைப்பற்றி பேசுகையில் பெரும்பாலான நேரம் முழுவதும் வாசிப்பிலேயே கழிக்கும் ஒரு மனிதர் அவர் என்றார்கள்.

அவர் தனது தோற்றத்தைப் பற்றிக் கவலைப் படுவதில்லை அதேபோல அவரது ஆடைகளிலும் குறிப்பிட்ட கவனம் செலுத்துவதில்லை.

உணவும் கூட ஒழுங்கான நேரத்துக்கு எடுத்துக் கொள்வதில்லை. வீரகேசரியில் ஸ்ரனிஸ்லாஸை விரைவிலேயே வெளிநாட்டுச் செய்திகளுக்கு பொறுப்பாக அமர்த்தினார்கள்.

இதற்கு ராய்ட்டர் நகல்கள் மற்றும் இதர வெளிநாட்டு விவகாரம் அடங்கிய கட்டுரைகள் போன்றவற்றை மொழிமாற்றம் செய்ய வேண்டியது இன்றிமையாததாகும்.

எனினும் பாலசிங்கம் தத்தவம் மற்றும் உளவியல் என்பதிலேயே அதிக ஆர்வம் காட்டினார். அவர் வசிய சாஸ்திரத்திலும் கால் வைத்தார். அவரது முன்னாள் சகாக்கள் அவர் ஒரு ஆன்மீகவாதி ஆனால் மதத்தைச் சாரதவர் என விவரித்தார்கள்.

பிரித்தானிய உயர் ஸ்தானிகராலய மொழி பெயர்ப்பாளர்

ஸ்ரனிஸ்லாஸ் பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தில் மொழி பெயர்ப்பாளராக ஒரு வேலையை பெற்றுக்கொண்டதும் விஷயங்கள் விரைவாக மாற்றம் பெற்றன.

அவரது தோற்றத்தில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது, இப்போது அவர் கம்பீரமான தோற்றம் தரும் உடைகளை தேர்ந்தெடுக்கலானார். இது முழுவதுமே இந்த புதிய வேலைக்காக மாத்திரமல்ல.

அன்பிலும் கூட தாக்கம் ஏற்பட்டிருந்தது. அப்போது பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்துக்கு அடுத்து அமைந்திருந்த பிரிட்டிஸ் கவுன்சிலில் உள்ள ஒரு தமிழ் பெண்ணிடம் அவருக்கு ஒரு ஈர்ப்பு உண்டானது.

அங்கு ஒரு காதல் உருவானது மற்றும் அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்.

ஆனால் அவர்களது மகிழ்ச்சி ஒரு குறுகிய ஆயுள் கொண்ட சோதனையாக மாறியது, அவரது முதல் மனைவி தீவிரமான நோய்வாய்ப்பட்டு மேலதிக வெளிநாட்டு சிகிச்சை பெறவேண்டிய நிலை ஏற்பட்டது.

பிரித்தானிய அதிகாரிகள் மிகவும் அனுதாபமும் தாராள மனம் உடையவர்களாக இருந்தார்கள். இருவரும் இங்கிலாந்து செல்ல அனுமதிக்கப்பட்டார்கள்.

பாலசிங்கம் தனது உயர் கல்வியை இங்கிலாந்தில் தொடர்ந்தார். ஆனால் அவரது மனைவியின் நிலை மோசமடையத் தொடங்கியது.

அவரது மனைவிக்கு நாள்பட்ட சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டிருந்தது அதன் காரணமாக வாழ்க்கை முழுவதும் இரத்த சுத்திகரிப்பில் தங்கியிருக்கும் அவசியம் உண்டானது.

லண்டனில் வைத்து தனக்கும் நீரிழிவு நோய் இருப்பதை பாலசிங்கம் அறிந்தார்.

அது பற்றாக்குறை மற்றும் தியாகம் என்பனவற்றைக் கொண்ட கடின வாழ்க்கையாக இருந்தது, பாலசிங்கத்துக்கு வேலை செய்வது, படிப்பது, மற்றும் நோயாளியான மனைவியை கவனிப்பது போன்ற கடமைகள் ஏற்பட்டன.

ஆறு வருடங்களின் பின் அவரது மனைவி மரணமடைந்தார்.

இந்தக் காலத்தில் பாலசிங்கத்துக்கு, பிரித்தானியாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பயிற்சி பெற்ற தாதியர் அதிகாரியாக இருந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது, அந்தப் பெண் ஒரு அவுஸ்திரேலிய பிரஜையாக இருந்தபடியால் அவரும் ஒரு அந்நியராக இருந்தார்.

மனைவியை இழந்த இளைஞரான அன்ரனுக்கும் மற்றும் தாதியான அடேல் ஆன் வில்பிக்கும் இடையே ஒரு இரண்டாவது காதல் மலர்ந்தது.

தெற்கு லண்டனில் உள்ள பிரிக்ஸ்டன் நகரில் உள்ள ஒரு திருமணப் பதிவு அலுவலகத்தில் 1978 செப்ரம்பர், 1ல் அவர்கள் எளிய முறையில் மணந்து கொண்டார்கள்.

பாலசிங்கம் சவுத்பாங்க் லண்டன் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் மார்க்கசிய உளவியல் விளக்கவுரையில் எம்.ஏ பட்டம் பெற்றார்.

பின்னர் அவர் தனது கலாநிதி பட்டப்படிப்பை ஜோண் டெயிலரின் கீழ் கற்க ஆரம்பித்தார்.

ஆனால் அவர் தனது கலாநிதி பட்டப்படிப்பை ஒருபோதும் பூர்த்தி செய்யவில்லை.

ஆனால் ஊடகங்கள் அவரை பொதுவாக கலாநிதி. பாலசிங்கம் என்றே குறிப்பிட்டு வந்துள்ளன.

அவர் என் தனது கலாநிதி பட்டத்தை நிறைவு செய்யவில்லை? அவரது மனைவி அடேல் பாலசிங்கம் தனது புத்தகமான “சுதந்திரத்துக்கான விருப்பம்” என்பதில் சொல்லியிருப்பது – “ஆனால் அவரது (பாலசிங்கத்தின்) மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தின் புரட்சிகர அரசியல் கோரிக்கைகள் அவரது ஆராய்ச்சி மற்றும் போதனையில் தலையீடு செய்தது. புரட்சிகர அரசியல் மற்றும் கல்வி வாழ்க்கை இந்த இரண்டில் எதை தெரிவு செய்வது என்கிற கட்டாயமான ஒரு நேரம் அவருக்கு வந்தது.

அவர் புரட்சிகர அரசியலையே தெரிவு செய்தார் அவர் தனத மக்களின் பிரச்சினையையே பார்த்தார், வெறுமே அதற்கு சேவை செய்வதே அர்த்தமுள்ளது என அவர் நினைத்தார்” என்று.

பாலசிங்கம் லண்டனில் வைத்து அரசியலில் தலையீடு செலுத்த ஆரம்பித்தார்.

அவர் முக்கியமாக ஒரு மார்க்ஸிஸ்ட் பின்னர் முற்போக்கு பிரச்சினைகளான, நிறவெறி எதிர்ப்பு செயற்பாடு போன்றவற்றை அடையாளம் காண முற்பட்டார்.

அப்போது தமிழ் ஈழப் பிரச்சினை லண்டனில் இருந்த தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே செல்வாக்கு செலுத்த தொடங்கியிருந்தது.

ஆரம்பத்தில் பாலசிங்கம், இளையதம்பி ரத்தினசபாபதியினால் நிறுவப்பட்ட ஈழமக்கள் புரட்சிகர மாணவர் அமைப்பில் (ஈரோஸ்) ஈடுபாடு கொண்டிருந்தார்.

அப்போது லண்டனில் ஒரு மாணவராக இருந்த ஈபிஆர்எல்எப் தலைவர் பத்மநாபாவுடனும் பாலசிங்கம் தொடர்புகளைப் பேணி வந்தார்.

அப்போது லண்டனில் புலிகளின் பிரதிநிதியாக இருந்த கிருஸ்ணன் என்பவர்தான் பாலசிங்கத்தை எல்.ரீ.ரீ.ஈக்குள் சிக்க வைத்தவர்.

பிரபாகரன் – உமா மகேஸ்வரன் மோதல் எல்.ரீ.ரீ.ஈயினை பிளவடைய வழி வகுத்தது அதன் விளைவாக புளொட் அமைப்பு உருவானது.

ஆரம்பத்தில் பாலசிங்கத்துக்கு எல்.ரீ.ரீ.ஈ யிற்காக ஆங்கிலத்திலும் மற்றும் தமிழிலும் துண்டுப் பிரதிகள், பிரசுரங்கள், கையேடுகள் போன்றவற்றை எழுதும் பணி ஒப்படைக்கப் பட்டிருந்தது.

பின்னர் அவர் புலிகளுக்காக ஏராளமான மொழிபெயர்ப்புகளைச் செய்தார். பாலசிங்கம் தம்பதிகள் தமிழ்நாட்டுக்கு அடிக்கடி பயணம் செய்தார்கள் அங்கு அவர்கள் உமா மற்றும் பிரபா போன்ற தலைவர்களைச் சந்தித்தார்கள்.

பாலசிங்கம் மற்றும் பிரபாகரன் ஆகியோருக்கு இடையில் நெருக்கம் அதிகமானது.

எல்.ரீ.ரீ.ஈ யில் பிளவு ஏற்பட்டபோது, இருபிரிவையும் சமரசம் செய்யும்படி பாலசிங்கம் கேட்டுக்கொள்ளப்பட்டார். அப்படிச் செய்வதில் அவர் தோல்வி அடைந்தார்.

பிளவு நிரந்தரமானதும், உமாவின் குழுவுடன் ஒப்பிடுகையில் பிரபாவின் ஆதரவாளர்களாக மிகச் சிலரே இருந்தபோதிலும், பாலசிங்கம் தன்னை முழுதாக பிரபாகரனுடன் இணைத்துக் கொண்டார்.

மார்க்கஸிசம் ஈழத் தமிழ் தேசியவாதம் என்கிற மாற்றத்தை உருவாக்கியது.

(தொடரும்)…

“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழுஉலகமும் சேர்ந்து புலிகளை மொங்கப் போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார்!! – டி.பி.எஸ்.ஜெயராஜ்

Comments (0)
Add Comment