முள்ளிவாய்க்கால்: “கடன்காரனின் பிணத்துக்கு கொள்ளி வைக்க; வங்கிக்காரன் வந்த கதையாகிப் போனது”! -ப. தெய்வீகன்

முள்ளிவாய்க்காலின் எதிரொலி அன்றும் இன்றும் (அங்கம் -02)    

கடன்காரனின் பிணத்துக்கு  கொள்ளிவைக்க;  வங்கிக்காரன்  வந்த கதையாகிப் போனது! –ப. தெய்வீகன்

மனிதப்பேரவலம் ஒன்றை நினைவு கூரும் இடத்தில் இன்னொரு பேரவலத்தை அரங்கேற்றும் “வல்லமை” தமிழர்களுக்கு மாத்திரம்தான் உண்டு என்பதை உலகெங்கும் பறை சாற்றும் வகையில் முள்ளிவாய்க்காலில் சென்று களமாடிவிட்டு வந்திருக்கிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்.

அவருக்கு பெரியதொரு ஒளிவட்டத்தை கீறி – நினைவு மேடையில் ஏற்றிவைத்தது மாத்திரமல்லாமல் – அவரது சாவு வீட்டு அரசியலுக்கு சாமரம் வீசிவிட்டு வந்திருக்கிறார்கள் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள். 

இந்தப்பேரவல நினைவுநாளுக்கு திரளும் மக்களின் ஆதரவை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக விக்னேஸ்வரன் அடுத்த வருடம் அரசாங்கம் கொடுத்த – தனது முதலமைச்சர் – வாகனத்துக்கு முன்பாக துலா ஒன்றைக்கட்டி தூக்குக்காவடி எடுத்துக் கொண்டால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை போலிருக்கிறது.

இவ்வளவு துரிதமாக தமிழர்களின் அரசியல் தறிகெட்டு பயணிக்கும் என்று யாரும் நம்பவில்லைத்தான். ஆனாலும் வரலாறு அதனை சாத்தியமாக்கிக்கொண்டு செல்கிறது என்பதை கண் முன்னே பார்க்கும்போது விரக்தியும் கோபமும் தான் எஞ்சுகிறது.

அன்று மாவீரர்களுக்கு விளக்கேற்றவேண்டும் என்று சிறிதரன் ஏறிநின்றது போல இறந்த பொதுமக்களுக்கு விளக்கேற்றுவதற்கு தனக்கு கிடைத்த ஒரு லட்சம் வாக்குகளை அத்தாட்சியாக காண்பித்துக் கொண்டு வந்து நிற்கிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்.

இந்த விளக்கேற்றும் நிகழ்வுகள் எல்லாம் தனது அரசியலுக்கு மிகவும் முக்கியமானது என்றும் அதனை குழப்பிவிட வேண்டாம் என்று கையெடுத்து கும்பிடாத குறையாகவும் அவர் முள்ளிவாய்க்காலில் போய் நின்ற கோலம் பரிதாபத்திலும் பரிதாபமாக கிடந்தது.

போர் முடிந்து ஒன்பதாண்டுகளில் அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்கள் அனைத்தையும் உச்ச நிலைக்கு கொண்டு சென்று விட்டது போலவும் அந்த முழுச்சாதனையையும் செய்து முடித்துவிட்ட பெருமை மிக்க அரசியல்புள்ளி தான்தான் என்பது போலவும் இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்க வேண்டும் என்று எந்த கூச்ச நாச்சமும் இல்லாமல் வந்து நிற்கின்ற முதலமைச்சர் விக்னேஸ்வரனின் மனசாட்சியை எண்ணும் போது பயங்கர வியப்பாக இருந்தது.

அப்படியே அவர் நினைப்பதுபோல மாகாணசபைதான் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவது என்று முடிவெடுத்துக் கொண்டாலும் இறுதிக்கட்டப் போர் தொடங்கிய கிழக்கு மாகாணம் பற்றி விக்னேஸ்வரனுக்கு ஏதாவது தெரியுமா?

அங்குள்ளவர்கள் எவரையாவது இந்த நினைவேந்தல் நிகழ்வில் வந்து நிற்க அனுமதித்தாரா? அல்லது அவர்களையும் துரத்திவிட்டுத்தான் தான் மட்டும் உள்ளே வந்து நின்றாரா?  

கடன்காரன் இறந்து விட்டதால் அவனுக்கு கடன் கொடுத்த வங்கிக்காரன் வந்து பிணத்துக்கு கொள்ளி வைக்க உரிமை கோருவது போலிருந்தது விக்னேஸ்வரன் போட்ட கூத்து.

தான்தான் மக்களின் பிரதிநிதி என்று கூறிக்கொண்டு வணக்கம் செலுத்தவதற்கு வந்து தீபத்தோடு நின்றது, இவ்வளவு காலத்தில் தமிழினம் கண்ட மிகப்பெரிய சாபக்கேடான காட்சி அன்றி வேறொன்றுமில்லை. 

பாவம் பல்கலைக்கழக மாணவர்கள். இந்த அற்ப அரசியல் மேடைக்கும் அரசியல்வாதிக்கும் துதிபாடுகின்ற துர்பாக்கிய நிலைக்குள் தங்களை தாங்களே தள்ளி விட்டிருக்கிறார்கள்.

இம்மியும் கூச்சமில்லாமல் ஒரு நினைவேந்தல் நிகழ்வினை அரசியல் மேடையாக்கிச்சென்ற சம்பந்தன் ஐயாவின் “க்ளோனிங்” அரசியல்வாதியை பார்த்து புளகாங்கிதமடைந்துபோயிருக்கிறார்கள். அவரை அணைக்க வேண்டும் என்பதற்காக முன்னாள் போராளி துளசியைக்கூட முட்டி தள்ளி விடுகிறார்கள்.

கறுப்பு உடை தரித்து காமடி படைகளாக எழுந்தருளுகிறார்கள். முப்பதாண்டு கால ஆயுதப்போராட்டத்தை நடத்திய புலிகளே காண்பிக்காத வீரத்தை தாங்கள் புதிதாக காண்பித்து விடப்போவது போல விக்னேஸ்வரனை சூழ விறைத்தபடி நின்று சிரிப்பு காட்டுகிறார்கள்.

புலத்திலிருந்து பல கோஷ்டிகள் இந்த புதிய போர் பரணியை பார்த்து கண்ணில் ஒற்றிக் கொள்கிறார்கள். விடுதலைப்புலிகளின் அடுத்த படையணி தயார் என்று உள்ளங்கையில் குத்திக் கொள்கிறார்கள்.

அங்கு பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தியது மோட்டார் சைக்கிள் பேரணி என்றாலும் அதனை இங்கிருந்து குட்டிசிறி மோட்டார் படையணி போல பயபக்தியோடு பார்த்து பரவசம் கொள்கிறார்கள்.

போராட்ட காலத்திலும் அதற்கு பின்னரும் நூற்றுக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் அவர்களது போராட்ட பங்களிப்புக்களுக்காக வீதி வீதியாக சுட்டும் வெட்டியும் கொலை செய்யப்பட்டு எறியப்படும் போது இரண்டு கால்களுக்கும் இடையில் கைகளை வைத்துக் கொண்டு நடுங்கிக் கொண்டிருந்த இந்த புலம்பெயர்ந்த புடுங்கிகளுக்கு பல்கலைக் கழக மாணவர்களின் தற்போதைய திரட்சி போதையேற்றி விட்டிருக்கிறது. 

எப்படியாவது, இவர்களை துருப்புச்சீட்டாக வைத்து தாங்கள் விரும்புகின்ற ஒரு அரசியலை நடத்திவிடவேண்டும் என்று பர பரத்துக் கொண்டு நிற்கிறார்கள்.

காலம் எவ்வளவு வேகமாக சுழன்று வந்து ஒரு சூனியத்தில் குத்திக்கொண்டு நிற்கிறது என்பதை பார்க்கும்போது விரக்தி மட்டுமே எஞ்சுகிறது.

முள்ளிவாய்க்கால் நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நடந்து கொண்ட முறையும் அவர்களை முதலமைச்சர் தலைமை தாங்கி நடத்திய செயற்பாடுகளும் பாரிய விமர்சனதுக்குரியவை தான். மக்களின் உணர்வுகளை அரசியலுக்காக பயன்படுத்திய அந்த செயல் கேவலமானது தான்.

ஆனால், விழுந்த மாட்டுக்கு குறி சுடுவதைப்போல யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் மீது திட்டமிட்ட பெரும் இணைய வன்முறையொன்று தொடர்ச்சியாக பிரயோகிக்கப்பட்டு வருவது வேறு பல சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. அதிலிருந்து யாழ். பல்கலைக்கழக சமூகம் எவ்வாறு தன்னை மீள்நிறுத்தப் போகிறது என்பது பெரும் கேள்வியாக எழுந்திருக்கிறது. 

பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த 18 ஆம் திகதி நிகழ்வில் எவ்வாறு தவறாக நடந்து கொண்டார்கள் அல்லது வழி நடத்தப்பட்டார்கள் என்பதிலிருந்து – அந்த தவறிலிருந்து – தங்களை உடனடியாக மீட்டெடுத்துக் கொள்ள வேண்டியது காலத்தின் தேவை.

விமர்சன கீதங்களை தங்களை சுற்றி தொடர்ந்து ஒலிக்க விடுவதா அல்லது அதிலிருந்து துரிதமாக எழுந்து தங்களது ஆளுமை பண்புகளை எதிர்காலத்தில் நிரூபிப்பதா என்பதை அவர்கள் முடிவு செய்ய வேண்டும்.

யாழ். பல்கலைக்கழகத்தின் பங்களிப்பானது வட மாகாணத்தின் அரசியல் – சமூக தளங்களில் கடந்த காலங்களில் ஏற்படுத்திய தாக்கங்கள் மிகவும் கனதியானவை என்பதை யாரும் மறந்துவிடமுடியாது. 

யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னைய வரலாறு

யுத்த காலத்துக்கு முன்னர் சற்று பின்னோக்கிய வரலாற்றை ஆழமாக சென்று பார்த்தால் 77 கலவரங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தோளோடு தோள் நின்று உதவியளித்தது முதல் எண்பதுகளில் சாதிய ஒடுக்குமுறைகளினால் தாழ்த்தப்பட்ட மக்கள், மேல் சாதியினரின் கிணறுகளில் தண்ணீர் அள்ளுவதற்கு அண்டக்கூடாது என்று துரத்தியடிக்கப்பட்ட நிகழ்வுகளின் போது அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்காக களத்தில் நின்றது முதற்கொண்டு பல செறிவான பங்களிப்புக்களை வழங்கியவர்கள் யாழ். பல்லைக்கழகத்தினர். அந்த மக்களுக்காக தாங்களே கிணறு வெட்டி கொடுக்குமளவுக்கு தங்களது பங்களிப்பினை ஆழமாக வழங்கியவர்கள் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்.

அதற்கு பின்னர், ஆயுதப்போராட்டம் முகிழ்ச்சியுற்ற காலப்பகுதியில் எல்லா போராளிக்குழுக்களதும் பொதுத்தளமாக யாழ். பல்கலைக்கழகம் விளங்கியதும் அங்கிருந்து பல இளைஞர்கள் ஒப்பற்ற பல தியாகங்களை புரிந்து தங்கள் உயிரை போராட்டத்துக்கு வழங்கியதும் இந்த ஒரு பதிவில் எழுதி முடித்துவிடக்கூடிய கதைகள் அல்ல.

யாழ். பல்கலைக்கழக சமூகத்தில் கைலாசபதி தொடங்கி பின்னர் வித்தியானந்தன் வழியாக நகர்ந்த ஆரோக்கியமான வளர்ச்சிகள் அங்கிருந்து எத்தனை ஆளுமைகளை உருவாக்கியது என்பதை இன்று சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் பார்க்கலாம். அவ்வாறு உருவாகியவர்கள் இன்றுவரை அரசியல் – நிர்வாகம் – மருத்துவம் – கலை – இலக்கியம் போன்ற எல்லா துறைகளிலும் ஆளுமை மிக்கவர்களாக உலகமெல்லாம் கோலோச்சிக்கொண்டிருக்கிறார்கள். ஏன், யாழ்ப்பாணத்தில்கூட தங்களது அடையாளங்களை ஆழப்பொறித்திருக்கிறார்கள். 

ஆனால், கடந்த இருபது வருடங்களில் யாழ்.பல்கலைக்கழகத்திலிருந்து இவ்வாறு குறிப்பிடத்தக்களவில் வெளிவந்த ஆளுமைகள் யார்? என்று கேட்டால் அதற்கான பதில் ஏமாற்றத்துடன் பார்க்கப்படவேண்டியதாகவே உள்ளது. 

பல்கலைக்கழக கல்வியை மிகச்சிறப்பாக நிறைவுசெய்துகொண்டு உத்தியோகத்திறனோடு – பல லட்சங்களை வருமானமாக பெற்றுக்கொள்ளக்கூடியவர்கள் சமூகத்தில் நிறைந்திருக்கிறார்கள். உண்மை!

ஆனால், சமூக வளர்ச்சியில், அரசியல் பங்களிப்பில் பல்துறை பண்புகள் நிறைந்த ஆளுமைகளாக – மேலும் பல ஆளுமைகளை உருவாக்க வல்லவர்களாக – வியாபித்தவர்களை எங்கே காட்டுங்கள் பார்க்கலாம்? 

முதலாவது மாணவர் அமைப்பின் தலைவர் வ.ஐ.ச. ஜெயபாலன், மு.திருநாவுக்கரசு, ஜெயராஜ், சேரன், ஜோதிலிங்கம், சிவ.ரஞ்சித், சிதம்பரநாதன் போன்றவர்கள் ஒரு தளத்தில் என்றால் – மறுபுறத்தில் ஆயுதமேந்திய ஆளுமைகள் என்ற வீர சுவர்க்கங்ளையெல்லாம் உருவாக்கிய யாழ். பல்கலைக்கழக சமூகம் இன்று எங்கே?

இந்த வரிசையில், யாழ். பல்லைக்கழக சமூகம் இன்று அடைந்திருக்கும் புள்ளி எது?

யாழ். பல்கலைக்கழகத்தில் இப்பேற்பட்டதொரு ஆளுமைப்பற்றாக்குறை ஏன் என்றுமில்லாதவாறு அதல பாதாளத்தில் கிடக்கிறது? 

இவ்வாறு கிடப்பதினால்தான் இந்த பல்கலைக்கழக சமூகத்தினை மோட்டார் சைக்கிளில் ஏற்றி சவாரி விடுவதற்கு “வெளிச்சக்திகள்” உன்னிக்கொண்டு நிற்கின்றன என்றாவது புரியவேண்டாமா?

கொஞ்சம் விரிவாக பார்ப்போம்!

போர் முடிந்த பின்னர் யாழ். பல்லைக்கழக சமூகம் சமூக – அரசியல் மாற்றங்களில் ஏற்படுத்தியிருக்கும் ஆக்கபூர்வமான பங்களிப்பு எவ்வாறு அமைந்திருக்கவேண்டும். 

உதாரணத்துக்கு – 

போரினால் சின்னாபின்னமாகிய மக்களை மீள்நிலைப்படுத்துவதற்கு தங்களாலான சகல வளங்களையும் பயன்படுத்துவதற்கு களத்துக்கு வந்திருக்கவேண்டும்.

அதன் பின்னர், அவ்வாறு மீள்நிலைப்படுத்தப்பட்ட சமூகத்தின் இழப்புக்களை கணக்கெடுக்கும் பணியில் துரிதமாக இறங்கியிருக்கவேண்டும். அந்தப்பணியில் நாட்டின் ஏனைய பல்கலைக்கழக சமூகத்தினரையும் உள்வாங்கியிருக்கவேண்டும். அவர்களுடன் இணைந்து போரினால் வடக்கு – கிழக்கில் காணமல்போனவர்கள் – இறந்தவர்கள் – ஊனமுற்றவர்கள் – அநாதைகளானவர்கள் என்ற பெரும் கணக்கெடுப்பை மேற்கொண்டிருக்க வேண்டும்.

இப்படியான பணியை முன்னெடுக்கும்போது எமது மக்களுக்கான தேவைகளுக்கு அப்பால் இனத்தின் ஒட்டுமொத்த வலி புள்ளிவிவரங்களுடன் எங்களின் கைகளில் கிடைத்திருக்கும்.

அந்த விவரங்கள் இணைந்து பணியாற்றிய ஏனைய பல்கலைக்கழக மாணவர்களின் ஊடாக தென்னிலங்கைக்கும் சென்று சேர்ந்திருக்கும். போரினால் ஏற்பட்ட இழப்புக்கள் தொடர்பான தெளிவான பார்வை தமிழ் மக்கள் மற்றும் சிங்கள மக்கள் மாத்திரமல்லாமல் சர்வதேச சமூகத்துக்கும்கூட சென்று சேர்ந்திருக்கும். சுருங்கக்கூறினால், எமது இனத்திற்கு ஏற்பட்ட பேரவலத்தை இலகுவாக – இலசவசமாக – நாங்கள் உலகமெல்லாம் பிரச்சாரம் செய்திருக்கமுடியும்.

உலகளாவிய ரீதியில் இயங்கும் பெரிய பெரிய அமைப்புக்கள் அனைத்தும் இதுபோன்ற ஆய்வுகளுக்கும் களப்பணிகளுக்கும் பல லட்சக்கணக்கான நிதியை பல்கலைக்கழகங்களுக்கு வழங்குகின்றன.

பல்கலைக்கழக மாணவர்கள் தங்களது கல்வி நோக்கத்துக்காக பெற்றுக் கொள்கின்ற இந்த ஆய்வுகளை தங்களது ஆய்வுகளுக்கும் பயன்படுத்துவதற்கு அவை விரும்புகின்றன.

இது சிறிலங்காவில் மாத்திரமல்ல, எல்லா நாடுகளிலும் இந்த அமைப்புக்கள் மேற்கொள்கின்ற பணி என்பது அனைவரும் அறிந்ததே. அதன்பிரகாரம், இந்த சர்வதேச அமைப்புக்கள் அரசியல் சாராத பல முக்கிய முடிவுகளை மேற்கொள்கின்றன.

இது ஒரு உதாரணத்துக்காக கூறப்பட்டதொரு ஆலோசனை மாத்திரமே!

இப்படியான காரியங்கள் எதையாவது யாழ். பல்கலைக்கழக சமூகம் இதுவரை முன்னெடுத்திருக்கிறதா? இது நடைபெற்றிருந்தால் இன்று அரசியல் கைதிகளினதும் – முன்னாள் போராளிகளதும் – காணாமல் போனவர்களினதும் விவரங்களுக்காக அரசியல் கட்சிகளிடம் கையேந்தி நிற்கின்ற நிலை ஏற்பட்டிருக்குமா? காணமால் போனவர்களின் எண்ணிக்கை தொடர்பான தமிழ் மக்கள் வைத்திருக்கும் விவரத்தைவிட அரசாங்கம் கணக்கெடுத்து வைத்திருக்கும் விவரம் அதிகம், அது தெரியுமா?

இவ்வாறு குருடன் யானை பார்த்த கதையாக போர் முடிந்து ஒன்பது வருடங்களுக்கு பின்னரும் கோமாவில் கிடக்கின்ற தமிழ் சமூகத்தினை மீட்சியை நோக்கி கைபிடித்து அழைத்து செல்வதற்கு யாழ். பல்லைக்கழக சமூகம்கூட ஒன்றுமே செய்யவில்லைத் தானே?

இன்றுவரைக்கும், மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான பெருவெளி – அந்த சிவில் இடைவெளி – பரந்த சூனியமாகத்தானே கிடக்கிறது. மக்களுக்கு தீர்வு கொடுக்கப்போகிறோம் என்று தொடை தட்டிக் கொண்டு வருகின்ற எவரும் தேர்தலில் வெல்ல வேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்கிறார்களே தவிர, அந்த சிவில் இடைவெளியில் இறங்கி நின்று வேலை செய்வதற்கு தயார் இல்லையே? அது கஜேந்திரகுமாராக இருக்கட்டும் – சுரேஷாக இருக்கட்டும் – தேர்தலில் தோற்றுப்போன எவராகவும் இருக்கட்டும். எல்லோரும் தங்களுக்கு அதிகாரம் தந்தால்தான் சேவை செய்வோம் என்றல்லவா ஒற்றைக்காலில் நிற்கிறார்கள்.

போர் முடிந்த பின்னர், இதுவரை எட்டு தேர்தல்கள் நடைபெற்றிருக்கின்றன. அவை அனைத்திலும் யாழ். பல்கலைக்கழக சமூகத்திடம் அரசியல் கட்சிகள் வந்து கேட்டு நின்றது என்ன? சின்னதாக ஒரு அறிக்கை. அவ்வளவுதான்.

ஏனெனில், அவர்களுக்கு தெரியும். யாழ். பல்கலைக்கழக சமூகத்தின் இன்றைய இருப்பு அவ்வளவுதான். அதன் வகிபாகம், ஈழத்தமிழர்களின் அரசியலில் சுருங்கி சுருங்கி வந்து சுண்டைக்காயளவில் நிற்கிறது.

சமூக மாற்றத்தையும் பெரும் புரட்சிகளின் தீர்மானிக்கும் சக்தியாகவும் பிராந்திய மக்களின் ஒன்றுபட்ட வழிகாட்டியாகவும் நேர்மையுடன் நிமிர்ந்து நின்ற யாழ். பல்கலைக்கழகத்தினை இன்று புலம்பெயர்ந்துள்ள சில “ரிமோர்ட் கொண்ட்ரோல் தளபதிகள்” உருட்டி விளையாடும்வகையில் வந்து நிற்பதற்கும்கூட –  இதுதான் காரணம்.

இதிலிருந்து மீண்டால் – மீள் நினைத்தால் – வழி உண்டு.

இல்லையேல், வெளிநாட்டு பணத்தில், சிறிலங்காவின் லோனில் வாங்கிய இந்திய தயாரிப்பு மோட்டார் சைக்கிள்களில் அடுத்த வருடமும் தங்களை ஏவல் நாய்கள் போல ஏய்ப்பதற்கு வரவுள்ள இன்னொரு விக்னேஸ்வரனுக்கோ அல்லது இதே விக்னேஸ்வரனுக்கோ சவாரி செய்து முள்ளிவாய்க்கால் போகலாம். முழங்கிப் போட்டு வரலாம்.

மறந்து விடாதீர்கள்!

அப்போதும் காணமாலாக்கப்பட்டவர்களின் போராட்டம் கிளிநொச்சியிலும் வவுனியாவிலும் நடைபெற்றுக் கொண்டு தானிருக்கும். அதனை உங்கள் புகை கக்கும் மோட்டார் சைக்கிள்கள் கடந்து போகலாம்.

நீங்கள் கெத்தாக ஓடிப்போகும் ஸ்டைலை வீடியோவில் எடுத்து முள்ளிவாய்க்கால் நினைவு மண்டபத்தில் போட்டு காண்பிக்க வெளிநாட்டில் சில மறை கழன்ற கோஷ்டி இருந்துv கொண்டு தானிருக்கும்….!!

“முள்ளிவாய்க்காலின் எதிரொலி” அன்றும் இன்றும்.. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஓலமிட்ட பெருந்துயர்.. -ப. தெய்வீகன்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்குச் சென்ற, கிழக்கு மாகாண மக்களுக்கு நடந்தது என்ன?..!! (வீடியோ)

Comments (0)
Add Comment