வன்னிக்கு.. வை.கோ.வின் இரகசியப் பயணம்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 145)

வன்னிக்கு.. வை.கோ.வின் இரகசியப் பயணம்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 145)

வை.கோ.வின் இரகசியப் பயணம்

வடக்கு-கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப் பெருமாளும், ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தினரும் அமிர்தலிங்கம் பாராளுமன்றம் செல்வதைத் தடுக்க ஒற்றைக்காலில் நின்றனர்.

தான் முதுகில் குத்துப்பட்டுவிட்டதை நினைத்து வருந்திய அமிர்தலிங்கம் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்லும் யோசனையை கைவிட்டார்.

இந்த விடயம் இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கு எட்டியது. அமிர்தலிங்கம் பாராளுமன்றம் செல்வதற்கு தடைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளுமாறு இந்தியத்தூதரகத்துக்கு உத்தரவு பறந்து வந்தது.

ராஜீவ் விருப்பத்தை வரதராஜப்பெருமாளிடம் தெரிவித்தனர் இந்திய அதிகாரிகள். வேறு வழியின்றி எதிர்ப்பைக் கைவிட்டது ஈ.பி.ஆர்.எல்.எஃப்.

பாராளுமன்ற உறுப்பினராக தேசியப் பட்டியல் மூலம் சென்றார் திரு.அமிர்தலிங்கம். தீவிரவாத இயக்கங்களை இந்தியா ஆதரித்தமை ஒரு தவிர்க்க முடியாத நிர்ப்பந்தமாக அமைந்ததேதவிர மிதவாதிகள் மீதே நம்பிக்கை கொண்டிரந்தனர்.

ஏனெனில் தாங்கள் சொல்வதை மறுக்காமல் ஏற்கக்கூடியவர்கள் மிதவாதிகள்தான் என்று அவர்கள் தெரிந்துவைத்திருந்தனர்.

கூட்டணியினரும் வெளிப்படையாக பேசும்போது இயக்கங்களின் தியாகங்களை தாங்கள் மறுக்கவில்லை என்று கூறுவர். இயக்கங்களுடன் நேரடியாக முரண்பட்டால் தாங்கள் உயிருக்கு உலை வைத்துவிடுவார்கள் என்ற அச்சமும் அதற்கு ஒரு காரணமாகும்.

ஆனால் தனியான சந்திப்புக்களின் போது இயக்கங்களுக்கு ஆயுதம் தூக்க மட்டுமே தெரியும், அரசியல் பேச்சு நடத்தவேண்டுமானால் தாம்மால் மட்டும் தான் முடியும் என்று கூறிவிடுவார்கள்.

தற்போதும் அவ்வாறான இரட்டைப்போக்கை கூட்டணியினர் கைவிடவில்லை. இலங்கைக்கு சமீபத்தில் வந்திருந்த அவுஸ்திரேலிய வெளிநாட்டமைச்சரையும், அமெரிக்க வெளிநாட்டமைச்சரையும் சந்தித்த கூட்டணி தலைவர் மு.சிவசிதம்பரம் புலிகளை பலவீனப்படுத்துவது அவசியம். புலிகளோடு பேச என்ன இருக்கிறது? என்று கேட்டிருந்தார்.

சில நாட்களுக்கு முன்னர் பத்திரிகை ஒன்றுக்கு அளித்தபேட்டியில் அரசும் புலிகளும் பேசவேண்டும் என்று சிவசிதம்பரம் கூறியிருந்தார்.

இவ்வாறான இரட்டைத்தனமான போக்கையே இயக்கங்கள் பலம்பெற்ற காலத்தின் பின்னர் கூட்டணியினர் கடைப்பிக்கத் தொடங்கியிருந்நனர்.

எனினும் தற்போது ஏனைய இயக்கங்கள் ஜனநாயகப் பாதைக்கு திரும்பியுள்ளதால், அவற்றுடன் அச்சமில்லாத போக்கையும், புலிகளோடு மட்டும் பகிரங்கமாக பகைத்துக் கொள்ளத போக்கையும் கையாண்டு வருகின்றனர்.

வை.கோ.எங்கே?
தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் வை.கோபாலசாமி சுருக்கமாக வை.கோ என்று அழைக்கப்படுபிறார்.

1989ல் இந்தியாவிலும், இலங்கையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் வை.கோ.

வை.கோ எங்கே?

வை.கோ எங்கிருக்கிருக்கிறார்?

என்று இந்தியப் பத்திரிகைகள் கேள்விக் குறியோடு செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தன.

தமிழக சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றிபெற்றிருந்த நேரம் அது.

இதற்கு முன்னர் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி புதுடில்லியில் நடைபெற்ற முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார்

அப்போது பிரதமர் ராஜீவ்காந்தியைச் சந்தித்து இலங்கைப் பிரச்சனை தொடர்பாக கருணாநிதி பேசியிருந்தார். அதரன அடுத்து புதுடில்லியில் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் தனது சாணக்கியமான பாணியில் அவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு:

தங்கள் பிரச்சனைக்கு தமிழ் ஈழம்தான் ஓரே பரிகாரம் என இலங்கைத் தமிழர்கள் நம்புகிறார்கள். அந்தப் பரிகாரம் இல்லாமலேயே அவர்களது பிரச்சனை தீர்க்கப்படுமானால் அது தி.மு.க.வுக்கும் மகிழ்ச்சிதான்.

தமிழ் ஈழம் என்பது விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் இலட்சியம். அதனை அவர் அடையமுடியுமானால் அவர்களுக்கு மகிழ்ச்சி தரும்.

இலங்கையில் வன்முறை தொடர்வதற்கு விடுதலைப்புலிகள் மட்டும் காரணம் அல்ல. புலிகளுக்கும் இந்திய அமைதிப்படையினருக்கும் இடையே நடந்து வரும் சண்டையும், வன்முறைகளுமே அதற்கு காரணம். எனவே முதலில் அந்த சண்டை ஓயவேண்டும் என்றார் கருணாநிதி.

அப்போது குறுக்கிட்ட ஒரு நிருபர்: இலங்கைப் பிரச்சனையைத் தீர்க்க யாழ்ப்பாணத்துக்கு செல்வீர்களா? என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த மு.கருணாநிதி, பிரதமருடனும், வெளிநாட்டமைச்சர்களுடனும் தொடர்ந்து நடத்தும் பேச்சைப் பொறுத்த விஷயம் அது என்று தெரிவித்தார்.

புதுடில்லியில் தி.மு.க.நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் ஒன்றையும் முதல்வர் கருணாநிதி நடத்தினார்.

அந்தக் கூட்டத்தில் தி.மு.க.எம்.பி.களில் ஒருவர் மட்டும் காணப்படவில்லை. அவர் தான் வை.கோ. அதனை எப்படியோ கண்டுபிடித்த நிருபர்கள்தான் வை.கோ எங்கே? என்ற கேள்வியை எழுப்பியிருந்தனர்.

கைவிரித்தார் கலைஞர்

இக் கேள்விகள் எழுப்பப்பட்டுக் கொண்டிருந்தபோது வை.கோ.வன்னியில் பிரபாகரனுடன் தங்கியிருந்தார். புலிகளின் படகு மூலம் வன்னிக்கு சென்றார் வை.கோ.

வன்னிக்கு புறப்பட முன்னர் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு தனது பயணம் தொடர்பாக உருக்கமான கடிதம் ஒன்றை எழுதிக்கொடுத்துவிட்டுத்தான் புறப்பட்டார்.

புதுடில்லியில் பிரதமர் ராஜீவ் காந்தியை கருணாநிதி சந்தித்துக்கொடிருந்தபோது, வை.கோபாலசாமி வன்னியில் பிரபாகரனை சந்தித்துக் கொண்டிருந்தார்.

புதுடில்லியில் இருந்து சென்னை திரும்பிய தமிழக முதல்வரை பத்திரிகைகள் எழுப்பிய கேள்விகள் திக்குமுக்காடச் செய்துவிட்டன.

அதற்கு முன்னர் நெடுமாறன் போன்றோர் படகு மூலம் வந்து புலிகளையும், பிரபாவையும் சந்தித்துச் சென்றது உண்டு.

தனது பயணம் தொடர்பாக நெடுமாறன் புத்தகம்கூட எழுதி வெளியிட்டிருந்தார்.

ஆனால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு சட்டவிரோதமாக இன்னொரு நாட்டுக்கு சென்று வர முடியுமா? அவ்வாறு சென்றவர்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? என்ற கேள்விகள் வை.கோ.விடயத்தில் எழுப்பப்பட்டன.

இதேவேளை தமிழக மக்கள் மத்தியிலும், தி.மு.க. இளைஞர்கள் மத்தியிலும் வை.கோ.வின் இரகசியப் பயணம் பெரும் ஆதரவைப்பெற்றது.

வை.கோ. ஒரு வீரராக கருதப்படலானார். அதனால் தி.மு.க.வுக்குள் வை.கோவுக்கு எதிரானவர்கள் முகம் சுளித்தனர்.

கலைஞர் கருணாநிதியின் மருமகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான முரசொலிமாறனுக்கும், வை.கோ.வுக்கும் கட்சிக்குள் பனிப்போர் இருந்தது.

முரசொலி மாறனுக்கு தொண்டர் பலம் இல்லை. வை.கோ.வுக்கு தொண்டர் பலம் ஆமோகம்.

வை.கோ. சிறந்த பேச்சாளர். மணிக்கணக்காக அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

தி.மு.க.வுக்குள் கருணாநிதியின் குடும்ப ஆதிக்கம் ஏற்படுவதற்கும் வை.கோ.தான் சவாலாக இருந்தார். கருணாநிதி தன் மருமகனை ஒரு புறமும், வை.கோ.வை மறுபுறமுமாக தட்டிக்கொடுத்து வந்தார்.

இலங்கைத் தமிழ்ர் பிரச்சனை தமிழக மக்களிடமும் உணர்ச்சிகரமான தாக்கங்களை ஏற்படுத்தி வந்தது. இலங்கைத் தமிழ்ர்களுக்காக முன்னின்று குரல் கொடுப்பது யார் என்று கட்சிகளுக்கிடையே போட்டி இருந்தது.

எனவே வை.கோ.போன்ற ஒருவர் தன்னுடன் இருப்பது அவசியம் என்றே கலைஞர் கருணாநிதி கருதினார். வை.கோ.வின் இரகசியப் பயணத்தால் தமிழக மக்களிடம் ஏற்படக்கூடிய ஆதரவையும் கலைஞர் கருணாநிதி இழக்க விரும்பவில்லை.

வை.கோ.வின் பயணத்துடன் தி.மு.க.ஆட்சிகே ஆபத்தாகவும் முடியலாம் என்பதால் வை.கோ.வின் பயணம் தமக்கு தெரிந்து நடந்ததாக கூறுவதும் விவேகமல்ல என்று கருதினார்.

எனவே தி.மு.க.வின் உத்தியோகபூர்வ பத்திரிகையான முரசொலியில் தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் பெயரில் ஒரு அறிக்கை வெளியானது.

வை.கோபாலசாமி தனது சொந்தப் பொறுப்பில்தான் இலங்கைக்கு சென்றிருக்கிறார். கட்சித் தலைவர் கலைஞர் கருணாநிதியிடமோ, கழகத்திடமோ அவர் அனுமதி எதனையும் பெறவில்லை என்று அறிவிப்பு வெளியானது.

தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியும் வை.கோ. என்னிடம் கூறிவிட்டுச் சொல்லவில்லை. அவரது விஜயம் பற்றி எனக்குத் தெரியாது என்று கைவிரித்தார்.

துபாய் போய்விட்டார்.

வை.கோ. இலங்கை செல்வற்கான விசா எதனையும் தம்மிடம் பெறவில்லை என்று இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்தது.

வை.கோ.வீட்டில் உள்ளவர்களிடம் பத்திரிகையாளர்கள் விசாரித்தனர். அவர் துபாய் உட்பட வளைகுடா நாடுகளுக்கு சென்றிருக்கிறார். எப்போது திரும்புகிறார் என்று தெரியாது என்று சொல்லிவிட்டனர்.

இந்திய அமைதிப்படை தளபதி கல்கத் தமிழக முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து வை.கோ.வின் இரகசியப் பயணம் தொடர்பாக பேசினார்.

வை.கோ.வின் பயணத்தால் ஆட்சிக்கே ஆபத்து வரப்போகிறது. அதனால் அவர்மீது நடவடிக்கை எடுப்பதுதான் நல்லது என்று வை.கோ.வின் எதிரணியினர் கருணாநிதியிடம் வலியுறுத்தத் தொடங்கிவிட்டனர்.

அரசியலில் பழுத்த இராஜதந்திரியான கலைஞர் அதற்கு இணங்கவில்லை. வை.கோ.மீது நடவடிக்கை எடுத்தால் கட்சிக்குள் மட்டுமல்லாமல் தமிழக மக்களிடமும் பலத்த அதிருப்தி உருவாகும் என்பதை அப்போது கலைஞர் நன்கு உணர்ந்திருந்தார்.

என் தம்பி வை.கோ. உணர்ச்சிவேகத்தில் அப்படிச் செய்துவிட்டார். அவர் எங்கே இருக்கிறார், அவர்மீது என்ன நடவடிக்கை எடுப்பது பற்றியெல்லாம் சிந்திப்பதைவிட, அவர் பத்திரமாக திரும்பிவரவேண்டும் என்பதைப் பற்றித்தான் நான் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறேன் என்று உருக்கமாகக் கூறிவிட்டார் கலைஞர்.

பிரபா-வை.கோ சந்திப்பு

வை.கோ.வை கட்டித் தழுவி வரவேற்றார் பிரபாகரன். இந்தியப் படையினரை எதிர்த்து போரிட்டுக்கொண்டு, சற்றும் கலங்காமல் இருந்த புலிளின் அணிகளைப் பார்த்து வியந்து நின்றார் வை.கோபாலசாமி.

கலைஞர் கருணாநிதியிடம் பிரபாகரன் தெரிவிக்கும் செய்தி என்ன. தமிழக அரசிடம் பிரபாகரன் எதிர்பாக்கும் உதவி என்ன என்பவற்றை கேட்டறிந்தார் வை.கோ.

இந்தியப் படை வெளியேற வேண்டும்

வடக்கு-கிழக்கை பிரிக்க முடியாது. ஓப்பந்தத்தின்படி தமிழர் தாயகத்தை கூறு போடும் சதியை அனுமதிக்கமாட்டோம்.

வடக்கு-கிழக்கை மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட நாம் தயாராக உள்ளோம். அதற்கு முன்னர் தற்போதுள்ள மாகாண சபை கலைக்கப்பட வேண்டும் போன்ற விடயங்களை கலைஞர் கருணாநிதியிடம் தெரிவிக்குமாறு வை.கோ.விடம் கூறினார் பிரபாகரன்.

சிங்கள அரசாங்கங்கள் ஒருபோதும் தமிழ் மக்களின் உரிமைகளை தாமாக முன் வந்து தரப்போவதில்லை. தமிழீழம் அமைவது தவிர்க்க முடியாதது. அதற்கான உத்திகள் மாறலாமே தவிர, இலட்சியம் மாறாது என்பதையும் வை.கோ.விடம் அழுத்தம் திருத்தமாக கூறினார் பிரபாகரன்.

தன்னைச் சந்தித்துவிட்டுப் புறப்பட்ட வை.கோ.விடம் தன் கழுத்தில் கிடந்த சயனைட் குப்பியை கழற்றிக் கொடுத்தார் பிரபாகரன்.

வை.கோ.படகு மூலமே தமிழ் நாட்டுக்குத் திரும்பிச் சென்றார்.

இந்திய மத்திய அரசு நினைத்திருந்தால் அவரை கைது செய்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை.

வை.கோ.வின் எழுச்சிப் பயணம் என்று தி.மு.க தொண்டர்கள் வை.கோ.வின் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவிருந்தன. வை.கோ.வை கைது செய்தால் தமிழகத்தில் நாடாளுமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்புக்கள் பாதிக்கப்படலாம் என்று நினைத் திருப்பார் ராஜீவ்காந்தி.

வை.கோ. கலைஞரைச் சந்தித்தார். புpரபாகரன் தன்னிடம் தெரிவித்த செய்திகளை கூறினார்.

வை.கோ.வின் எழுச்சிப் பயணம் என்று தி.மு.க தொண்டர்கள் வை.கோ.வின் இரகசியப் பயணத்தை கொண்டாடினார்கள்.

தொண்டர்களின் எழுச்சியைக் கண்ட கலைஞர் கருணாநிதி வை.கோ. என் போர்வாள் என்று கூறினார்.

கருத்துக் கணிப்பு

இந்தியப் படையினர் வாபஸ் பெறப்பட வேண்டும் என்று இலங்கை அரசு அறிவித்த பின்னர், வடக்கு-கிழக்கு மாகாண சபை முதல்மைச்சர் வரதராஜப் பெருமாள் அதற்கு பதிலடியாக, வடக்கு-கிழக்கில் இருந்து முதலில் சிறீலங்கா படையினர் வெளியேற வேண்டும். ஆதன் பின்னரே இந்தியப் படை வெளியேறுவது பற்றிப்பேசலாம் என்று அறிவித்தார்.

வடக்கு-கிழக்கு தொடர்ந்து இணைந்திருப்பதா இல்லையா? ஏன்பதை தீர்மானிக்க கிழக்கில் கருத்துக் கணிப்பு நடத்துவதையும் வடக்கு-கிழக்கு மாகாணசபை எதிர்த்தது.

வடக்கு-கிழக்கு இணைந்திருக்க வேண்டமா? இல்லையா? என்று கிழக்கில் வாக்கெடுப்பு நடத்த வேண்டுமானால், அதற்கு முன்னர் தமிழ் பேசும் மக்கள் தனிநாடாகப் பிரிந்துசெல்ல விரும்புகிறார்களா? இல்லையா? என்பதை கண்டறிய அவர்களிடம் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்தட்டும் என்று இந்திய தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார் வரதராஜப் பெருமாள்.

(தொடர்ந்து வரும்)

தொடரும்… (Thanks… ILAKKIYAA Inaiyam…) -தொகுப்பு… கி.பாஸ்கரன், சுவிஸ்.
 
***** முன்னைய  தொடர்களை பார்வையிட இங்கே  அழுத்தவும்….

திரைமறைவு நாடகங்கள் கூட்டணி போட்ட பிள்ளையார் சுழி

இந்திய – இலங்கை ஒப்பந்தம்தான் முதன்முதலில் வடக்கு-கிழக்கு தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுமா? இல்லையா என்பதைத் தீர்மானிக்க கிழக்கில் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடத்தப்படும் என்ற விடயத்தை கொண்டுவந்தது.

விடுதலைப் புலிகள் உட்பட சகல தமிழ்க் கட்சிகளும் ஒப்பந்தத்தின் முக்கிய குறைபாடாக அதனையே சுட்டிக்காட்டியிருந்தன.

சிங்கள மக்களைத் திருப்திப்படுத்தவே அவ்வாறான ஷரத்து இடம்பெற்றுள்ளது. அவ்வாறான கருத்துக் கணிப்பு ஒருபோதும் நடைபெற மாட்டாது. அதற்கு இந்தியா பொறுப்பு என்று அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தி தமிழ்க்கட்சிகளிடம் வாய்மூல உத்தரவாதம் வழங்கியிருந்தார்.

வாய்மூல உத்தரவாதங்களை நம்பி அடிப்படை கோட்பாடுகளை விட்டுக்கொடுப்பது எத்தனை பெரிய வரலாற்றுத் தவறாக முடியப்போகிறது என்பதை அன்றே உணர்ந்திருந்தால், தமிழ்பேசும் தரப்பு அப்போதே உறுதியாக நின்றிருக்கலாம்.

இன்று ராஜீவும் இல்லை. ஜே.ஆரும் இல்லை. அவர்கள் வாய்மூலம் கூறிய உத்தர வாதங்களுக்கு சாட்சியங்களும் இல்லை. ராஜீவ் காந்தி கூறிய உத்தரவாதத்தை நம்பிய தமிழ்பேசும் தரப்புக்காக வாதாட இந்திய அரசும் இன்று தயாராக இல்லை.

கிழக்கில் கருத்துக் கணிப்பு நடத்த அப்போது ஒப்புக்கொள்ளப்பட்டதுதானே என்று ஒரே பிடியாக பிடித்துக் கொள்கிறார்கள். துமிழ்பேசும் தரப்புக்கு பாதகமான ஒரு அம்சமாகவும், வடக்கு-கிழக்கை பிரிக்கும் திட்டத்தை நியாயப்படுத்த சாதகமாக ஒரு அம்சமாகவும் அது மாறி நிற்கிறது.

இன்னொரு முக்கிய விடயத்தையும் கவனத்தில் கொண்டாக வேண்டும்

புதிய யோசனைகள்
வடக்கு-கிழக்கை பிரிக்க கருத்துக் கணிப்பு என்பதை இன்றைய பொதுஜன முன்னணி அரசும் புதிய யோசனையாக முன்வைத்துள்ளது.

இலங்கை, இந்திய ஒப்பந்தத்தை பயன்படுத்தி ஜே.ஆர். செய்ய முடியாமல் போனதை ஜனாதிபதி சந்திரிக்கா செய்து முடிக்கப்போகிறாரா? என்று கேள்வி எழுந்துள்ளது.

அவ்வாறு கேட்பது சரியல்ல

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை அன்று கடுமையாக எதிர்த்தவர்கள் சிறீலங்கா சுதந்திரக் கட்சியினர். வடக்கு-கிழக்கு இணைந்திருப்பதையும் எதிர்த்தனர்.

இப்போது கூறப்பட்டுள்ள கருத்துக் கணிப்பு திட்டமானது இந்திய, இலங்கை ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக் கணிப்பை விட பாரதூரமானதாகும்.

இலங்கை, இந்திய ஒப்பந்தப்படி வடக்கு-கிழக்கு இணைந்திருக்க வேண்டுமா? இல்லையா? என்பதை தீர்மானிக்க கிழக்கில் ஒரு கருத்துக் கணிப்பு நடைபெறும்.

கருத்துக் கணிப்பில் ஆம் என்று முடிவு அமைந்தால் வடக்கு-கிழக்கு அப்படியே தொடர்ந்து இணைந்திருக்க அனுமதிக்கப்படும். ஒரு மாற்றமும் இருக்காது. இணைந்திருக்க விரும்பவில்லை என்று முடிவு அமையுமானால் வடக்குக்கு தனியாகவும் மாகாணசபைகள் அமைக்கப்படும்.

தற்போதைய யோசனைப்படி தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுமா? இல்லையா என்பதை தீர்மானிக்க முதலில் மட்டக்களப்பு, திருமலை மாவட்டங்களில் மட்டுமே கருத்துக் கணிப்பு நடைபெறும். இணைந்திருக்க விருப்பம் என்று அவர்கள் தெரிவித்தால் கிழக்கு மாகாணம் மூன்று துண்டுகளாக்கப்படு விடும். அது மட்டுமல்லாமல் எல்லை மீளமைப்பு என்பதின் கீழ் திருமலையிலும் வன்னி மாவட்டத்திலும் பல பகுதிகள் பிரித்தெடுக்கப்பட்டுவிடும்.

ஆக, ஜே.ஆர். செய்ய நினைத்ததைவிட பல படிகள் மேலே சென்றுவிட்டது அரசின் புதிய யோசனைகள். ஜே.ஆர். எட்டடி பாய்ந்தார். இன்று பதினாறடி பாயப்பட்டுள்ளது.

விழுந்தடிப்பு

விட்டுக் கொடுப்புக்கள், தவறான அணுகு முறைகள், ஒற்றுமையின்மை, அரசியல் உறுதிப்பாடு இன்மை போன்றவறடறால் தமிழ்பேசும் தரப்பு தன் அடிப்படைக் கோட்பாடுகளில் இருந்து இறங்கி சென்று கொண்டிருக்க, மறுபுறத்தில் தென்னிலங்கை அரசியல்வாதிகள் தமிழ் பேசும் தரப்பிடம் மேலும் மேலும் விட்டுக் கொடுப்பை எதிர்பாத்து மேலே ஏறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே வரலாறாக மாறியிருக்கிறது.

தற்போதும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் நிலைப்பாடுதான் புதிய யோசனையை முன்வைக்க அரசாங்கத்துக்கு நம்பிக்கை கொடுத்துள்ளது.

வடக்கு-கிழக்கு இணைந்த தீர்வு தொடர்பாக அரசாங்கமோ, எதிர்க்கட்சியோ திட்டவட்டமான முடிவு எதனையும் தெரிவிக்காத நிலையில், அம்பாறையை விட்டுக் கொடுக்கத் தயார், தனி முஸ்லிம் அலகுக்கும் தயார் என்று கூறிய ஒரே கட்சி கூட்டணிதான்.

விழுந்தடித்து விட்டுக் கொடுத்து, இன்னமும் இறுக்கினால் விட்டுக்கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையை தோற்றுவித்த பெருமை கூட்டணியையே சாரும். வுpட்டுக் கொடுப்புக்கு பிள்ளையார் சுழி போட்ட சாதனை கூட்டணியினருக்கே சேரும்.

கூட்டணியின் இந்த நிலைப்பாட்டை முதலில் வெளிக்கொணர்ந்ததுடன், முதலிலேயே இப்படி விட்டுக் கொடுக்கத் தொடங்கினால் தொடர் விட்டுக் கொடுப்புக்களுக்கு தமிழ் பேசும் தரப்பு நிர்ப்பந்திக்கப்படும் என்பதை அன்றே முரசு சுட்டிக்காட்டியிருந்ததை வாசகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

தீர்க்கமான விடயங்களை எல்லாம் அரசுடனும் எதிர்க்கட்சியுடனும் திரைமறைவில் பேசிமுடித்து விட்டு புலிகளும் அரசும் பேச நாம் தடையில்லை. புலிகளே ஏகப்பிரதிநிதிகளாக பேச்சு நடத்த விரும்பினால் வழிவிடுவோம். என்று கூட்டணியினர் கூறுவது மக்களையும், புலிகளையும் முட்டாள்களாக்குவது போன்றதே.

முக்கிய பங்காளி

அரசாங்கத்தின் புதிய யோசனைகள் விடயத்தில் ஒரு முக்கியமான தமிழ் அரசியல்வாதி சம்பந்தப்பட்டுள்ளதுடன், அரசாங்கததின் அமைச்சரவை கூட்ட முடிவுகள் பற்றிய ஆவணத்தையும் அவர் பத்திரிகைக்கு வழங்கியிருக்கிறார்

அப்படி இப்படி தந்திரம்பண்ணி கருத்துக் கணிப்பை எங்களுக்கு சாதகமாக்குவதாக உறுதியளித்துள்ளார்கள் என்றும் தனக்கு நெருக்கமானவர்களிடம் குறிப்பிட்ட அரசியல்வாதி கூறியிருக்கிறார்.

அரசின் முன்னைய தீர்வு யோசனைகளுக்கு பங்காளியாக இருந்தவரும் குறிப்பிட்ட அரசியல்வாதிதான்.

தனது பங்கை மூடிமறைக்க ஈ.பி.டி.பி. புளோட் கட்சிகளை அழைத்து அரசின் புதிய யோசனைகளைப் பற்றி ஆராய்வது போலவும் ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.

அரசின் புதிய யோசனைகள் பற்றி ஏனைய கட்சிகள் உடனடியாக கருத்துக் கூறியபோது, கூட்டணி மட்டும் பொதுக்குழு செயற்குழு என்று காரணம் காட்டி கருத்துக்கூற தாமதித்தமையும் தெரிந்ததே.

தாயகக் கோட்பாடு என்பதற்கு புதிய யோசனைகள் எதிராக அமைந்துள்ளன என்பது சாதாரண மக்களுக்கே உடனடியாக தெரியும்போது, முன்னாள் அரசியல் சாணக்கியர்களுக்கு மட்டும் கருத்துச் சொல்ல கால அவகாசம் தேவைப்பட்டிருக்கிறது.

Comments (0)
Add Comment