கொலை, கொள்ளை நடத்திய “மண்டையன் குழு”..!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 147)

கொலை, கொள்ளை நடத்திய மண்டையன் குழு?!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 147)

கொலை-கொள்ளை நடத்திய மண்டையன் குழு

யாழ் குடாநாட்டில் புன்னாலைக் கட்டுவன் பகுதியில் இந்தியப் படையினரால் நடத்தப்பட்ட அத்துமீறல்கள் இந்தியப் பிரதமரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

ராஜீவ் காந்திக்கு ஒரு மனு ஒன்றும் அனுப்பி வைத்தனர். அந்த மனுவில் புன்னாலைக் கட்டுவன் பகுதியில் நடைபெற்ற சம்பவங்களை விபரித்திருந்தனர்.

கே.கே.எஸ்.வீதியில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த இந்தியப் படைச் சிப்பாய்கள் இருவருக்கு பொழுது போகவில்லை. அருகிலுள்ள சுகுமாரன் என்பவரது வீட்டுக்குள் பிரவேசித்தனர். சுகுமாரனை அடித்து உதைத்து கட்டிவைத்து விட்டு, அவரது மனைவியை பாலியல் வதைக்கு உள்ளாக்க முயன்றனர்.

மனைவியான சற்குண்தேவி அவலக்குரல் எழுப்ப முற்பட்டார். சுத்தம்போட்டால் அவரையும். அவர் கணவரையும் கொன்றுவிடப் போவதாக மிரட்டினார்கள். பின்னர் சற்குணதேவி பாலியல் வல்லுறவுக்கு உள்ளானார்.

புன்னாலைக் கட்வன் பகுதியில் வீடு வீடாக இந்தியப் படையினர் தேடுதல் நடத்தினார்கள்.

திருமதி செல்வநாயகம் என்பவர் தனியாக வீட்டில் இருந்தார். இந்தியப் படைச் சிப்பாய்கள் சிலர் ஒன்றுசேர்ந்து தமது சதைவெறியை தீர்த்துக் கொண்டனர்.

புன்னாலைக் கட்டுவன் கிராமமக்கள் அனைவரையும் அங்குள்ள கோயிலின் முன்பாக ஒன்றுகூடும்படி இந்தியப் படையினர் அறிவித்தனர்.

கோவிலில் முன்பாக கூடியிருந்த மக்களுக்குள் இளம் வயதினர் படையினரால் தாக்கப்பட்டனர்.

புன்னாலைக் கட்டுவனில் இந்தியப் படையினர் நுழையும்போது, அங்குள்ள கோயில் மணியை அடித்து புலிகளை சிலர் உஷார்படுத்தி விடுகின்றனர் என்று படையினர் அறிந்தனர்.

பொதுமக்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைத்தனர்

கோயில் முன்பாக கூடி இருந்தவர்களில் சின்னத்தம்பி மனோகரன் என்ற இளைஞரை பிடித்து, கோவில் மணியை அடிக்குமாறு கூறினர்.

அவர் மணி அடித்துக் கொண்டிருந்த போது சிப்பாய் ஒருவர் தனது துப்பாக்கி முனையை அந்த இளைஞரது காதுக்கள் வைத்து சுட்டார். சின்னத்தம்பி மனோகரன் அதே இடத்திலேயே பலியானார்.

சின்னத்தம்பி மனோகரன் புலிககளுடன் எவ்வித தொடர்பும் இல்லாதவர். தந்தை இல்லாத குடும்பத்தைத் தன் உழைப்பின் மூலம் பராமரித்து வந்தவர் என்று கிராமத்தினர் கூறினார்கள்.

மூத்ததம்பி கனகேஸ்வரி என்ற பெண்ணும் வீட்டில் தனியாக இருந்தார். மூன்று சிப்பாய்களால் அவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானார்.

நாகமுத்து சரவணை என்பவரது வீட்டில் புகுந்த சிப்பாய்கள் அவரது பெண்பிள்ளைகளை பலாகாரம் செய்ய முயற்சித்தனர். அவர்கள் அவலக்குரல் எழுப்பியதால் சிப்பாய்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர்.

இவ்வாறு வெளியே தெரிந்த சம்பவங்கள் தவிர மேலும் பல சம்பவங்கள் புன்னாலைக் கட்வனில் நடைபெற்றன. பயம் காரணமாகவும், அவமானம் என்று நினைத்தும் வெளியே சொல்லாமல் இருந்தவர்களும் உள்ளனர்.

பல வீடுகளும் இந்தியப் படையினரால் தீயிட்டு கொளுத்தப்பட்டன. ஆறுமுகம் என்பவரும், அவரது மகனும் இந்தியச் சிப்பாய்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

புன்னாலைக் கட்டுவனில் நடைபெற்ற இந்த அட்டூழியங்கள் பற்றி இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு அனுப்பப்ட்ட மனுவுக்கு என்னாயிற்று என்பதே தெரியவில்லை.

வல்வையில் தாக்குதல்
வல்வெட்டித்துறையில் 19.01.89 அன்று நடை பெற்ற தாக்குதல் பாரதூரமான பாதிப்புக்களை ஏற்படுத்தியது.

வல்வெட்டித்துறையில் இந்தியப் படை மீது புலிகள் நடத்திய தாக்குதல் ஒன்றுக்கு பழிதீர்க்கும் விதமாக மக்கள் மீதும், மக்களின் சொத்துக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

காலை 10 மணிக்கு ஆரம்பமான தாக்குதல்கள் பிற்பகல் இரண்டு மணி வரை தொடர்ந்தன. வீடுகளுக்குள் இருந்த பொதுமக்கள் ஆண,; பெண், சிறுவர்கள் என்ற பேதம் இல்லாமல் வீதிக்கு இழுத்து வரப்பட்டுத் தாக்கப்பட்டனர்.

25ற்கு மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. பிரபல சோதிடரான சண்முகம் என்பவரது வீடு முற்றாக எரிந்து சாம்பரானது.

ஆறு வயதுச் சிறுவன் ஒருவன் இந்தியப்hடை சிப்பாய் ஒருவரால் கத்தியால் குத்தப்பட்டார். நூற்றுக்கு மேற்பட்ட ஆண்களும், பெண்களும் படுகாயமடைந்தனர் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன.

இந்தியப் படையினரின் அத்துமீறல்களைக் கண்டித்து 20.01.89 அன்று வல்வெட்டித்துறையில் ஹர்த்தால் அனுஸ்ஷ்டிக்கப்பட்டது.

இந்தியப் படையினரின் வடமராட்சிப் பொறுப்பதிகாரி காயம்பட்ட மக்களை நேரில் சந்தித்தார். அவர்கள் முன்னிலையில் உரையாற்றினார்.

இந்தியப் படையினரின் இவ்வாறான செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இதற்காக நான் வெட்கப்படுகிறேன்.

இதுபோன்ற வன்செயல்கள் எதிர்காலத்தில் நடைபெறாது என உறுதி தருகிறேன். இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட சகல இராணுவத்தினரையும் இராணுவ அதிகாரிகளையும் உடனடியாக இங்கிருந்து இடம்மாற்ற நடவடிக்கை எடுப்பேன். என்று வடமராட்சிப் பொறுப்பதிகாரி கூறினார்.

கனகராயன் குளத்தில்

வன்னியில் கனகராயன் குளப் பகுதியில் ரோந்து சென்ற இந்தியப் படையினர் மீது கண்ணிவெடித் தாக்குதல் ஒன்று நடை பெற்றது.

இத் தாக்குதலில் இந்தியப் படையினர் தரப்பில் ஒன்பது பேர் பலியானார்கள். இதனால் வவுனியா, யாழ் வீதியில் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டன,

நெடுங்கேணிப் பகுதியிலும் புலிகளின் தாக்குதல்கள் இடம்பெற்றன. இத் தாக்குதல்களை அடுத்து சந்தேகத்தின் பேரில் ஒன்பது பேரை இந்தியப் படையினர் கைது செய்தனர்.

பின்னர் எட்டுப்பேர் விடுதலையாகினர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான பாடசாலை மாணவன் தேவரூபன் (வயது 19) என்பவர் இந்தியப் படையினரால் கொல்லப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

விடுதலையானவர்கள் மூலம் தகவல் அறிந்த தேவரூபனின் உறவினர்கள் சடலத்தைப் பெற முயன்றனர். சடலத்தை கையளிக்க இந்தியப் படையினர் மறுத்தனர்.

வாய் வீச்சுக்கள்

ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கம் இராணுவ நடவடிக்கைகளில் பின்னடைந்தாலும் கூட, வாய்வீச்சுக்களில் எப்போதும் முன்னணியில் நின்ற அமைப்பாகும்.

சகல இயக்கங்களும் புரிந்துணர்வுடன் செயற்பட்ட காலத்தில், ஈ.பி.ஆர்.எல்.எஃப்  இயக்க உறுப்பினர்களுடன் விவாதிப்பதற்கு ஏனைய இயக்க உறுப்பினர்கள் பின் நிற்பார்கள்.

கதை பேசுவதில் மட்டுமல்ல, தங்கள் இயலாமைக்கும் தத்துவக் காரணங்கள் கூறிப் பூசி மெழுகி விடுவார்கள் என்று ஏனைய இயக்கங்கள் மத்தியில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். பற்றி ஒரு அபிப்பிராயம் இருந்தது.

வடக்கு-கிழக்கு மாகாணசபை முதல்வராக இருந்த வரதராஜப் பெருமாள் பேச்சு மன்னன். மாகாணசபை முதல்வர் என்ற ரீதியில் மாலை மரியாதையுடன், மேள தாளங்களுடன் வரதராஜப் பெருமாளுக்கு வரவேற்பு அளிக்கப்படும்.

மலையகப் பகுதியான அட்டனில் ஒரு கூட்டத்தில் உரையாற்ற வரதராஜப் பெருமாளை அழைத்திருந்தனர்.

வடக்கு-கிழக்கில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். ஆட்சி இந்தியப் படையை நம்பியிருந்தது. இந்தியப்படை வெளியேறினால் மாகாணசபையே காணாமல் போய்விடும் என்ற நிலைதான் நிலவியது.

ஆனால் அட்டனில் உரையாற்றிய வரதராஜப் பெருமாள் என்ன சொன்னார் என்று பாருங்கள் ”நாம் வடக்கு, கிழக்கு, மலையகம் என்று பிரித்து மக்களைக் கூறுபோடமாட்டோம். அவ்வாறு பிரித்துப் பார்ப்போரையும் அனுமதிக்க மாட்டோம்.

முலையக மக்களின் பாதகாப்புக்கு எதிர்காலத்தில் அச்சுறுத்தல் ஏற்படுமானால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க எம்மால் தோற்றுவிக்கப்பட்ட தொண்டர் படை முன்வரும்”  என்றார் பெருமாள்.

இப்போது வரதராஜப் பெருமாளுக்கு உரிய பாதுகாப்பையே அவரது இயக்கத்தினரால் உறுதிப்படுத்த இயலவில்லை.

தேசியக் கவுன்சில்

1989இன் ஆரம்பத்தில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தினர் தேசிய கவுன்சில் ஒன்றை அமைக்கப் போவதாக அறிவித்தனர்.

இது தொடர்பாக அக் கட்சியின் அன்றைய செயலாளர் நாயகம் க.பத்மநாபாவால் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.

1985ல் திம்புப் பேச்சுவார்த்தை நடந்த காலகட்டத்தில் ரெலோ, எல்.ரி.ரி.ஈ., ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கங்களுக்கிடையே தேசியக் கவுன்சில் அமைக்க இணக்கம் காணப்பட்டது.

அதன் அடிப்படையில் தமிழ்பேசும் மக்கள் மத்தியில் உள்ள விடுதலை இயக்கங்களும், கட்சிகளும், பொது ஸ்தாபனங்களும் தமக்கு இடையிலான முரண்பாட்டை மறந்து ஒன்றுபட வேண்டும்.

தங்கள் இயக்கத்தினரை பரவலாக சுட்டுத்தள்ளிக் கொண்டிருக்கும் ஈ.பி.ஆர்.எல்.எஃப். யக்கத்தின் ஒற்றுமைப் பேச்சுக்கள் கபடத்தனமானவை| என்று ஈரோஸ் இயக்கத்தினர் கூறினர்.

வடக்கு-கிழக்கு மாகாண சபையைப் பலப்படுத்தி, ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கம் தான் தலைடைச் சக்தி என்று முதன்மைப்படுத்தும் முயற்சி இது என்று புளொட் கூறியது.
முயற்சி கைகூட முன்னரே தேசியக் கவுன்சில் வாழ்க என்று வீதி வீதியாக எழுதத் தொடங்கி  விட்டனர்.

அரசியல் தொடர்- அற்புதன் எழுதுவது

“வாலிபர்கள் போராடுவார்கள்” 1976இல் தந்தை செல்வா…

தமிழர் வடுதலைக் கூட்டணித் தலைவரும், மூதறிஞருமான தந்தை செல்வநாயகம் கடைசிக் காலத்தில் வெளியிட்ட கருத்துக்களை கூட்டணியினர் மறைத்தாலும் உண்மைகள் உறங்காது அல்லவா இதோ ஒரு செய்தி.

“தமிழனத்தின் விடுதலை என் சீவிய காலத்துக்குள் கைகூடிவிடும் என்ற எதிர் பார்க்கிறேன். தற்செயலாக எனது காலத்துக்குள் கைகூடாது போனால் வாலிபர்களாகிய நீங்கள் தொடர்ந்து போராடுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. அந்த உணர்வுடன் நான் கண்மூடுவேன்”.

இவ்வாறு தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் தந்தை என.ஜே.வி.செல்வநாயகம் கொழும்பு சட்டக்கல்லுரி தமிழ் மாணவரின் முத்தமிழ் விழாவில் சொற் பொழிவாற்றுகையில் குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறியதாவது: “நான் கண் மூடுவதற்கு முன் தமிழ் மக்களின் விடுதலை கைகூடவேண்டுமென விரும்புகின்றேன். உங்கள் உணர்ச்சி தமிழ் மக்களின் எதிர்காலத்தையிட்டு நம்பிக்கை தருலதாக இருக்கிறது”.

நன்றி-உதயசூரியன் 10.09.1976

***** முன்னைய  தொடர்களை பார்வையிட இங்கே  அழுத்தவும்….
Comments (0)
Add Comment