வெல்வது தான் முக்கியம்…. வீரர்கள் எதிர்காலம் பற்றி யோசிக்கவில்லை… வினோதமான கோஹ்லி..!!

நாட்டிங்காம்: இந்திய அணியில் சமீப காலமாக, ஒவ்வொரு போட்டிக்கும் வீரர்கள் மாற்றப்பட்டு வருகிறார்கள். வீரர்களை ஒவ்வொரு போட்டிக்கும் மாற்றி வருவதால் அவர்கள் மனதளவில் அச்சுறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. அது போன்ற விமர்சனங்கள் “மிகவும் வினோதமான எண்ணம்” என கூறியுள்ளார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி.

கோஹ்லியின் தலைமையில் இந்தியா 37 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளது. அதே சமயம், டெஸ்ட் போட்டி அணியில் 37 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. நிலையான வீரர்கள் என்ற பேச்சுக்கே இடமில்லாமல், ஒவ்வொரு போட்டியிலும் வீரர்கள் மாற்றப்பட்டு வருகிறார்கள். கோஹ்லியின் தலைமையில் ஆடிய போட்டிகள் அனைத்திலும் பங்கேற்ற ஒரே வீரர் கோஹ்லிதான் என சொல்லும் அளவுக்கு இருப்பதால், இந்த நடைமுறை விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.

இது பற்றி கோஹ்லி கூறுகையில், “யாரும் அப்படி சிந்திக்கவில்லை என நான் நினைக்கிறேன். இதெல்லாம், வெளியே இருப்பவர்கள் உருவாக்குவது. எங்களுக்கு கிரிக்கெட் விளையாட்டில் வெல்வது தான் முக்கியம். நாங்கள் ஒருவருடைய வேலை பாதிக்கப்பட உள்ளது என்றோ, அவர்கள் எதிர்காலம் பற்றியோ யோசிக்கவில்லை. இது போல யோசிப்பது மிகவும் வினோதமான எண்ணம்” என கூறினார்.

இந்திய அணி தற்போது 0-2 என டெஸ்ட் தொடரில் பின் தங்கி உள்ளது. மூன்றாவது போட்டியில் தோற்றால், தொடரை இழக்கும் அபாயமும் உள்ளது. இதை எப்படி இந்திய அணி எதிர்கொள்ள உள்ளது என்பதை குறித்து கோஹ்லி பேசினார். “எல்லாவற்றுக்கும் முதலில் நேர்மறையான சிந்தனை இருக்க வேண்டும். கடந்த சில தினங்களாக நாங்கள் அதை குறித்துதான் பேசினோம். தானே முன்வந்து, நான் களத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவேன் என முடிவு செய்வது ஒரு தனிநபரிடம் தான் உள்ளது” என தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து ஆடுகளங்களின் சூழ்நிலைகள் குறித்து பேசிய கோஹ்லி, “இந்த ஆடுகளங்களில் சதமடித்து நீங்கள் களத்தில் இருந்தாலும், நீங்கள் நிலையாக இருக்க முடியாது. எப்போது வேண்டுமானாலும் நீங்கள் ஒரு நல்ல பந்தை எதிர்கொள்வீர்கள்” என தெரிவித்தார்.

Comments (0)
Add Comment