கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய வெற்றியை சமர்ப்பித்த கோஹ்லி..!!

இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா இன்று பெற்ற வெற்றியை, கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமர்ப்பிப்பதாக இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்தார். இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் தோற்ற நிலையில், இது இந்தியாவுக்கு சிறப்பான ‘பவுன்ஸ் பேக்’ வெற்றியாகும். 5 போட்டிகள் கொண்ட தொடரை உயிர்ப்புடன் வைத்துள்ளது இந்தியா.

போட்டி முடிந்ததும், பரிசளிப்பு நிகழ்ச்சியின்போது, இது சிறப்பான வெற்றி தானே என வர்ணணையாளர் கோஹ்லியிடம் கேள்வி எழுப்பினார். அப்போது கோஹ்லி கூறியதாவது: இந்த வெற்றியை, கேரளாவில் வெள்ளத்தால், பாதிக்கப்பட்டவர்களுக்கு சமர்ப்பிக்க விரும்புகிறோம். அவர்கள் மிகுந்த கஷ்டத்தை எதிர்கொண்டுள்ளனர் என்றார் கோஹ்லி. மேலும், தனது சதத்தை மனைவி அனுஷ்காவிற்கு சமர்ப்பிப்பதாகவும், அவர்தான் தன்னை ஊக்குவித்து வருவதாகவும் கோஹ்லி தெரிவித்தார்.

இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 97 ரன்களும், இரண்டாவது இன்னிங்சிலும் 103 ரன்களும் குவித்தார் கோஹ்லி. மேன் ஆப் தி மேட்ச் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. மேலும், இந்த போட்டித் தொடரை வெல்வதும் இந்திய அணிக்கு சாத்தியம் என கூறிய கோஹ்லி, தோல்வியால் துவண்டிருந்தால் 2 தோல்விகளுக்கு பிறகு இந்த வெற்றியை ஈட்டியிருக்க முடியாது என்றும், இந்திய அணி வீரர்கள் இந்த சாதனையை நிகழ்த்த திறன் படைத்தவர்கள் என்றும், கோஹ்லி தெரிவித்தார்.

Comments (0)
Add Comment