3வது டெஸ்டில் இங்கிலாந்தை 203 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா…தொடரை 1-2 என தக்க வைத்தது..!!

இந்திய அணி இங்கிலாந்து அணியை 203 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தொடரை தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-2 என்ற நிலையை எட்டியுள்ளது இந்தியா. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து மோசமான விமர்சனங்களை சந்தித்த இந்திய அணி, இந்த வெற்றியின் மூலம், தோல்விகளில் இருந்தும், விமர்சனங்களில் இருந்தும் மீண்டுள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்க்ஸில் இந்திய அணி 329 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் கோஹ்லி 97, ரஹானே 81 ரன்கள் அடித்தனர். ஆண்டர்சன், பிராட், வோக்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். அதில் ரஷித் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

இங்கிலாந்து தன் முதல் இன்னிங்க்ஸில் 161 ரன்களுக்கு பரிதாபமாக ஆட்டமிழந்தது. அந்த அணியின் பட்லர் கடைசி நேரத்தில் அதிரடியாக 32 பந்துகளில் 39 ரன்கள் குவித்து ரன் வித்தியாசத்தை குறைத்தார். இந்திய அணியில் பாண்டியா ஐந்து விக்கெட்கள் எடுத்தார். இஷாந்த், பும்ரா தலா இரண்டு விக்கெட்கள் வீழ்த்தினர். ஷமி ஒரு விக்கெட் வீழ்த்தினார். இந்தியா 168 ரன்கள் முன்னிலையோடு இரண்டாவது இன்னிங்க்சை துவக்கியது. பொறுப்பாக ஆடிய இந்திய பேட்ஸ்மேன்கள் ரன்களை நிதானமான வேகத்தில் எடுத்தனர். தவான் 44, ராகுல் 36, புஜாரா 72 ரன்களை எடுத்தனர்.

முதல் இன்னிங்க்ஸில் சதத்தை 3 ரன்களில் தவற விட்ட கோஹ்லி, இந்த வாய்ப்பில் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இது இவரது 23வது டெஸ்ட் சதம். பாண்டியா 52 ரன்கள் எடுத்த பின், ஏழு விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் என்ற நிலையில் இந்தியா டிக்ளர் செய்தது. மூன்றாவது நாள் முடிய சிறிது நேரம் இருந்த நிலையில், 521 என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடத்துவங்கியது இங்கிலாந்து. நான்காம் நாள் ஆட்டத்தில் வரிசையாக விக்கெட்கள் இழந்து 86-4 என தவித்தது.

இதனால், இந்தியா சில மணி நேரங்களில் வென்று விடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. எனினும், ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் இணைந்து பந்துகளை தடுப்பதில் கவனம் செலுத்தினர். இடையே, பட்லர் தன் அதிரடியை காட்டி சதம் அடித்தார். பின் பும்ராவின் அருமையான பந்துவீச்சில் பட்லர் 106 ரன்களில் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி தோல்வியை நோக்கி பயணித்தது. நான்காம் நாள் ஆட்ட நேர இறுதியில் 311 ரன்களுக்கு 9 விக்கெட்கள் இழந்து, தோல்வியின் விளிம்பில் நின்றது.

இன்று ஐந்தாம் நாள் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் அஸ்வின் பந்தில் ஆண்டர்சன் ஆட்டமிழக்க, இங்கிலாந்து 317 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியில் பட்லர் 106, ஸ்டோக்ஸ் 62, அதில் ரஷித் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்ற இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி சார்பில் பும்ரா 5, இஷாந்த் சர்மா 2, அஸ்வின், ஷமி, பாண்டியா தலா 1 விக்கெட்களும் வீழ்த்தினர்.

Comments (0)
Add Comment