சதம் அடித்த புஜாரா… மற்ற பேட்ஸ்மேன்கள் ஊஹூம்… வழக்கம் போல சொதப்பல்… #4வதுடெஸ்ட்..!!

இந்தியா, இங்கிலாந்து இடையே நடந்து வரும் நான்காவது டெஸ்டில் நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. அதில் இந்தியா தன் முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங்கை தொடர்ந்து ஆடியது. அதில் முக்கியமாக புஜாரா சதம் அடித்தார். புஜாரா, கோலி தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் வழக்கம் போல சொதப்பினர். முன்னதாக இங்கிலாந்து முதல் இன்னிங்க்ஸில் 246 ரன்கள் எடுத்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 19 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருந்தது.

நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் துவங்கிய சில நிமிடங்களில் ராகுல் 19 ரன்களுக்கு நடையைக் கட்டினார். அடுத்து தவானும் 29 ரன்களில் வெளியேற இந்தியா 50 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து இருந்தது. அடுத்து புஜாரா, கோலி இணைந்து 92 ரன்கள் குவித்தனர். பின் கோலி 46 ரன்கள் இருந்த போது சாம் கர்ரன் பந்துவீச்சில் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த எந்த இந்திய பேட்ஸ்மேனும் சொல்லிக் கொள்ளும்படி ரன் எடுக்கவில்லை.

ரஹானே 11, ரிஷப் பண்ட் 0, பண்டியா 4, அஸ்வின் 1, ஷமி 0, இஷாந்த் 14, பும்ரா 6 ரன்கள் என மோசமாக வெளியேறினர். இதில் தன் முதல் டெஸ்ட் போட்டியான மூன்றாவது டெஸ்டில் 2வது பந்தில் சிக்ஸ் அடித்து தன் டெஸ்ட் ரன் கணக்கை துவக்கிய ரிஷப் பண்ட், இந்த போட்டியில் 29 பந்துகள் சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறி சோதனையான சாதனை செய்தார். புஜாரா கடைசி வரை ஆட்டமிழக்காமல், 132 ரன்கள் எடுத்தார். கோலி தவிர ஒருவரும் அவருடன் சரியான கூட்டணி அமைக்கவில்லை.

எனினும், இந்தியா 273 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்தை விட 27 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்று இந்தியா தன் இன்னிங்க்ஸை முடித்துக் கொண்டது. இங்கிலாந்தின் மொயீன் அலி 5 விக்கெட் எடுத்து அசத்தினார். ஸ்டுவர்ட் பிராட் 3, ஸ்டோக்ஸ் 1, சாம் கர்ரன் 1 என விக்கெட் எடுத்தனர். உலக சாதனைக்கு காத்திருக்கும் ஆண்டர்சன் எந்த விக்கெட்டும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து ஆடிய இங்கிலாந்து, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருக்கிறது. இந்தியா பெரிய முன்னிலை பெறாத நிலையில், இரண்டாம் இன்னிங்க்ஸில் இங்கிலாந்து குவிக்கும் ரன்களே ஆட்டத்தின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும். எனவே, இந்திய பந்துவீச்சாளர்கள் இன்று பொறுப்பாக பந்து வீச வேண்டும்.

Comments (0)
Add Comment