லண்டனை பின்னுக்குத்தள்ளி உலகின் மிகப்பெரிய பொருளாதார மையமாக மாறிய நியூயார்க்..!!

ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்துவிட்ட பிரிட்டன் தனிநாடாகவே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் இணைந்திருக்கும் நாடுகளுடன் முன்னர் இருந்ததுபோல் இனி வர்த்தக உறவுகளை இனி பிரிட்டன் தொடர முடியாது என கருதப்படுகிறது. எனவே, உலகின் தலைசிறந்த பொருளாதார மையமாக விளங்கிய லண்டன் நகரில் இருந்து பல்வேறு நிதி நிறுவனங்கள் வேறு நாட்டின் முக்கிய நகரங்களுக்கு நகரத் தொடங்கியுள்ளன.

அவ்வகையில், முதலீடுகளை ஈர்ப்பதில் உலகின் மிகப்பெரிய பொருளாதார மையமாக இருந்த லண்டன் தற்போது அந்த சிறப்பை நியூயார்க் நகரிடம் இழந்துள்ளது.

இதுதொடர்பாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவு இன்று வெளியாகியுள்ளது. பொருளாதார ரீதியாக சிறப்பிடம் பிடித்துள்ள 100 நகரங்களில் முதலாம் இடத்தில் நியூயார்க், இரண்டாம் இடத்தில் லண்டன் மற்றும் அடுத்தடுத்த இடங்களில் ஹாங்காங், சிங்கப்பூர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

மிகப்பெரிய நிதி நிறுவனங்களின் அலுவலகங்கள், உள்கட்டமைப்பு, அதிகமான பணியாளர்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment