பிக் பாஸ் 3 : ஆங்கிலத்தில் அசத்திய பாத்திமா.. கலக்கிய லாஸ்லியா..!! (வீடியோ, படங்கள்)

இதோ வழக்கம் போல் கோலாகலமாக தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி விட்டது பிக் பாஸ். கடந்த இரண்டு சீசன்களில் பார்த்த அதே துறுதுறு பேச்சு, துள்ளல் நடையோடு கமல். இன்னும் பத்து சீசன்கள் போனாலும் கமல் இப்படியே தான் இருப்பார் போல. வழக்கமாக பிக் பாஸ் வீட்டைச் சுற்றிக் காண்பிப்பதோடு தான் கமல் நிகழ்ச்சியை ஆரம்பிப்பார். ஆனால் இம்முறை சற்று வித்தியாசமாக தனது வீட்டை சுற்றிக் காண்பித்தார்.

ஒருவேளை ஏற்கனவே பிக் பாஸ் செட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி விட்டதால், திரும்பவும் மக்களை போரடிக்க வேண்டாமே என நினைத்து விட்டார் போலும். ஆனாலும், கிடைத்த சந்து கேப்பில் சிந்து பாடுவதில் வல்லவராயிற்றே நம்ம நம்மவர். மாலை போட வைத்து, ஆரத்தி எடுக்க வைத்து, அனைத்திற்கும் ‘அன்பு’ என்று தன்னிலை விளக்கம் கொடுத்து ஆரம்பத்திலேயே தனது கெத்தை நிரூபித்தார்.

கடந்த சீசன்கள் போல் இல்லாமல் இம்முறை போட்டியாளர்களை அதிகம் எதிர்பார்க்க வைக்காமல், சட்சட்டென பெயரைக் கூறி அறிமுகப் படுத்தினார் கமல். ஏற்கனவே போட்டியாளர்களின் பெயர்கள் இணையத்தில் லீக் ஆனதால், சலிப்பில் செயற்கையாக எதற்கு நடிக்க வேண்டும் என அப்படி நினைத்து விட்டார் போலும் கமல்.

முதல் போட்டியாளரை வித்தியாசமாக அறிமுகப் படுத்துவதாகக் கூறி, பாத்திமா பாபுவை பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தே அறிமுகப்படுத்தி வைத்தார். நல்லவேளை அவரை ஆட வைத்து, ஆரம்பத்திலேயே நம்மை அதிர்ச்சியில் தள்ளவில்லை என பிக் பாஸ். ஆனால், தமிழ் உச்சரிப்புக்கு பேர் போன பாத்திமா, தன்னைப் பற்றிய அறிமுகத்தை ஆங்கிலத்தில் தந்து நம்மை லைட்டாக ஜெர்க் ஆக வைத்தார். பிக் பாஸ் வீட்டில் ஆங்கிலம் பேசக்கூடாது என்ற ரூல்சை மறந்துவிட்டார் போல. அவரது பேச்சில் அவ்வப்போது அரசியல்வாதி எட்டிப் பார்த்தை தவிர்க்க இயலவில்லை அவரால். அடிக்கடி அவர் காலில் விழுந்து கஞ்சா கருப்பு வேறு சோதித்தார்.

இரண்டாவது போட்டியாளரும் செய்தி வாசிப்பாளர் தான். ஆனால், இலங்கைக்காரர். இவரை வைத்து லேசாக தனது அரசியல் செய்தார் கமல். லாஸ்லியா (சரியாத் தான் சொல்றேனா..?) என்ற அவரது பெயரை திணறாமல் தெளிவாக சொன்னது கமல் மட்டும் தான். மற்ற போட்டியாளர்கள் அனைவருமே அவரது பேரை சரியாக சொல்ல முடியாமல் திணறினார்கள். பாத்திமா ஸ்பெல்லிங் கேட்டதெல்லாம் வேற லெவல்.

அடுத்து நடிகை சாக்‌ஷி அகர்வால் எண்ட்ரி. ஏனோ அவரது டான்ஸை முழுமையாகக் காட்டவில்லை. நறுக்கென்று பேச்சைக் குறைத்து அவரை வீட்டிற்குள்ளும் அனுப்பி விட்டார்கள். 4வது போட்டியாளராக ஜாங்கிரி மதுமிதா. நிச்சயம் இவரை வைத்து தான் பிக் பாஸ் வீட்டில் நமக்கு எண்டர்டெயின்மெண்ட் இருக்கும் என நினைக்கிறேன். அறிமுகப் படலத்திலேயே அது நன்றாக தெரிந்தது. ஜாங்கிரி அடிக்கடி கார மிளகாயாக மாறுவேன் என சொல்லாமல் சொன்னார். சைடு கேப்பில் தான் அடுத்த கோவை சரளா என்றும் மக்கள் மத்தியில் சொன்ன மதுமிதா, வார்த்தை வித்தகர் கமலேயே மேடையில் சான்ஸ் கேட்டு திணற வைத்தது ரசிக்கும்படி இருந்தது.

என்னடா அடுத்தடுத்து பெண் போட்டியாளர்களாகவே வருகிறார்களே என நம் மைண்ட் வாய்ஸ் பிக் பாஸுக்கு கேட்டு விட்டது போல. அடுத்த போட்டியாளராக நடிகர் கவினை அறிமுகப் படுத்தினார்கள். நட்புன்னா என்னானு தெரியுமா என அவர் ஹீரோவாக நடித்த படம் கடந்த சில நாட்களுக்கு முன் தான் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால், அதற்குள் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து விட்டாரே என லேசாக ஒரு ஆச்சர்யம் தந்தார் கவின். ஒரு ஹீரோ மெட்டீரியலை டான்ஸ் கூட ஆடவைக்காம, பிக் பாஸ் வீட்டுக்குள்ள அனுப்பிட்டீங்களே பிக் பாஸ். இதெல்லாம் சாமிக்குத்தம் பார்த்துக்கங்க.

அடுத்து அபிராமி. நேர்கொண்ட பார்வை ரிலீசுக்குள் வெளியில் போய் விடுவீர்களா, இல்லை தாக்குப் பிடிப்பீர்களா என நாசுக்காக நலம் விசாரித்தார் கமல். இவரைத் தொடர்ந்து வனிதா விஜயகுமார், சரவணன், சேரன் என அடுத்தடுத்து மூத்த நடிகர்கள் எண்ட்ரி கொடுத்தனர். இதில் சரவணனும், சேரனும், கடந்த சீசனில் கலந்து கொண்ட பொன்னம்பலத்தை பிச்சுப் போட்ட மாதிரி இருந்தார்கள். ஒருவர் உடல் மொழியிலும், மற்றவர் பேச்சிலும் பொன்னம்பலத்தை பிரதிபலித்தனர். நிச்சயம் இம்முறை இவர்கள் தான் வீட்டில் கலாச்சார காவலர்களாக இருப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

show வனிதா விஜயகுமார் நிஜத்தில் நைட்டியோடு ரோட்டில் இறங்கி சண்டை போட்ட காட்சிகளைக் கூட நாம் டிவிக்களில் பார்த்திருக்குறோம். அவரது அறிமுகத்தைத் தொடர்ந்து நெட்டிசன்களே அவர் தான் இந்த சீசன் காயத்ரி, மும்தாஜ் என சொல்ல ஆரம்பித்து விட்டனர். இப்டியா பப்ளிக்கா கொண்டை தெரியற மாதிரி போட்டியாளர்களைத் தேர்வு செய்வீங்க பிக் பாஸ்.

இவர்களைத் தொடர்ந்து துள்ளுவதோ இளமை ஷெரீன் வயதான தோற்றத்தில் வந்து அதிர்ச்சி கொடுத்தார். விசில் படத்தில் எவ்வளவு அழகாக, ‘அழகிய அசுரா’வுக்கு ஆடி இருந்தார். அதே பாடலை இப்போது திரும்பவும் ஷெரீனை வைத்தே ஆட வைத்து, அப்பாடல் ரசிகர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டார் பிக்பாஸ். இனி, அந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம் இந்த குண்டு ஷெரீன் ஆடுறது தான பாஸ் கண்ணுக்கு முன்னாடி வந்துட்டு போகும்..

பிக் பாஸ் வீட்டிலேயே சரவணனைத் தவிர பலருக்கும் அவரை அடையாளம் தெரியவில்லை. ‘ஷெரீனைப் பார்த்து குண்டாயிட்டீங்க போல’, என சரவணன் கமெண்ட் கொடுக்க, ‘வந்தவுடனேயே உடம்பைப் பத்தி பேசறாரே’ என ஷெரீனும் பதிலடி கொடுத்தார். வந்தன்னைக்கே வம்பு எதுக்கு என ஜகா வாங்கிய சரவணன், அதுக்கு அடுத்து வந்த போட்டியாளர்களிடமும் அதே ஸ்ரேடஜியைப் பாலோ பண்ணினார். தூக்கம் வருது என சாக்கு வேறு சொல்லிக் கொண்டார்.

ஷெரீனைத் தொடர்ந்து மோகன் வைத்யா வந்தார். அவர் ஆடலுடன் பாடல் என மேடையை கலர்புல் ஆக்கினார். கமலின் பாடலுக்கே நடனம் ஆடியது, ‘ப்பா.. இது உலகமகா ஐஸ்டா’ எனச் சொல்ல வைத்தது. போன சீசன் அனந்த் வைத்தியநாதன் போல், ‘இவருக்கும் அறுபது வயசாகுது. வீட்டுக்குள் போய் என்ன செய்யப் போகிறார்’ என்ற நெட்டிசன்களின் கிண்டலுக்கு மேடையிலேயே பதில் சொல்ல வைத்தார் கமல். மோகன் வைத்யாவின் மகனை மேடைக்கு வர வைத்தது, அவர் மீது சிம்பதி உருவாக்குவது போல் இருந்தது.

அடுத்து இலங்கையைச் சேர்ந்த தர்ஷன், மலேசியாவைச் சேர்ந்த முகென் என துள்ளுவதோ இளமையுடன் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர்.

பதிமூன்றாவது போட்டியாளராக வந்தார் டான்ஸ் மாஸ்டர் சாண்டி. ‘எல்லாம் நீ செஞ்ச பாவம்’ என்ற ரேஞ்சுக்கு அவருக்கு எண்ட்ரி சாங் கொடுத்தது ரசிக்கும்படி இருந்தது. கடைசி போட்டியாளராக அறிமுகமானார் ரேஷ்மா. அவரை வீட்டிற்குள் அனுப்பி வைத்ததோடு, போட்டியாளர்கள் அறிமுகம் முடிந்தது. ஆனால், தன் கையில் 17 கார்டுகள் இருப்பதாகவும், இப்போது வீட்டிற்குள் 15 போட்டியாளர்கள் சென்றுள்ளதாகவும், எதிர்பார்க்காததை பிக் பாஸ் செய்வார் எனவும் சின்னதாக ஒரு சர்ப்பிரைஸ் வைத்தார் கமல்.

சொல்ல மறந்துட்டேனே.. இம்முறை கமலோடு சக்ரியும் கூடவே வருகிறது. சக்ரி என்பது அங்குள்ள புதிய ரக கேமராவுக்கு கமல் வைத்த பெயர். முழுப்பெயர் சக்ரவர்த்தியாம். கமல் பின்னாடியே ஹட்ச் டாக் மாதிரி சுற்றிச் சுற்றி வருகிறது சக்ரி.

வீட்டிற்குள் சென்றவர்கள் தனிப்படுக்கையைப் பிடிக்க போட்டி போட்டனர். முந்தியவர்களுக்கு தனிப் படுக்கை கிடைத்தது. மீதமுள்ளவர்களுக்கு இரண்டு பேர் படுக்கும் கட்டிலில் ஷேர் செய்து கொள்ளும் நிலை. ஒரே கட்டிலில் வனிதா விஜயகுமார், ஷெரீன் படுத்தால் எப்படி இடம் பத்தும் என்ற கவலை இப்போதே நமக்கு வந்து விட்டது. நிகழ்ச்சிக்கு வந்த போட்டியாளர்கள் அனைவரும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதைவிட, கமலுடன் ஒரே மேடையில் நிற்பதைத்தான் பெரும் பாக்கியமாக கருதினர். கமல் கூறியது போல, முதல் நாள் ஆரம்பம் சுமூகமாக மகிழ்ச்சியாக தொடங்கியது. இது அப்படியே நீடிக்குமா என்பது இனி போக போகத் தான் தெரியும்.

ஆனால் முதல்நாளே நமது தூக்கத்தை கெடுத்து விட்டார் பிக் பாஸ் என்றுதான் கூற வேண்டும். இரவு 8 மணிக்கு ஆரம்பமாக நிகழ்ச்சி முடிய 12 மணிக்கு மேலாகி விட்டது. இன்னும் என்னவெல்லாம் செய்யக் காத்திருக்கிறாரோ பிக் பாஸ். நிச்சயம் 2வது சீசனை விட இந்த சீசன் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். போட்டியாளர்களின் தேர்வைப் பார்க்கும் போதே, அது தெரிகிறது.


Comments (0)
Add Comment