உலகக் கிண்ண வலைபந்தாட்டத்தின் ஆரம்பப் போட்டியில் ஸிம்பாப்வேயிடம் தோல்வியுற்ற இலங்கை..!!

இங்கிலாந்தின் லிவர்பூல் எம். அண்ட் எஸ். பாங்க் எரினா உள்ளக அரங்கில் இன்று ஆரம்பமான 15ஆவது உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் ஏ குழுவில் இடம்பெறும் இலங்கை அணி தனது முதல் போட்டியில் ஏகப்பட்ட தவறுகளுக்கு மத்தியில் ஸிம்பாப்வேயிடம் 30 கோல்கள் வித்தியாசத்தில் படு தோல்வி அடைந்தது.

இத் தோல்விக்கு அவ்வப்போது விட்ட தவறுகளே காரணம் என இலங்கை அணித் தலைவி சத்துரங்கி ஜயசூரிய தெரிவித்தார்.

16 நாடுகள் பங்குபற்றும் உலகக் கிண்ண வலைபந்தாட்டத்தின் இப் போட்டியில் ஸிம்பாப்வே 79 க்கு 49 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்றது. இதே குழுவில் இடம்பெறும் நடப்பு சமபியன் அவுஸ்திரேலியா தனது ஆரம்பப் போட்டியில் 88 க்கு 24 என்ற கோல்கள் அடிப்படையில் வட அயர்லாந்தை மிக இலகுவாக வெற்றிகொண்டது.

தவறுகளுக்கு மத்தியிலும் போட்டியின் முதல் மூன்று ஆட்டநேர பகுதிகளில் ஸிம்பாப்வேக்கு சவால் விடுத்து விளையாடிய இலங்கை, கடைசி ஆட்ட நேரப் பகுத்யில் தடுமாற்றத்துடன் விளையாடி படுதோல்வியைத் தழுவியது.

இப் போட்டியில் அடைந்த தோலவி குறித்து அணித் தலைவி சத்துரங்கி ஜயசூரியவிடம் கேட்டபோது, ஸிம்பாப்வே அணியுடன் சிறபபாக விளையாட முடியும் என்ற நம்பிக்கையுடனேயே நாங்கள் இப் போட்டியை எதிர்கொண்டோம். எனினும் நேருக்கு நேர் மோதும் போது கடுமையாக போராட வேண்டும். எவ்வாறாயினும் பந்து பரிமாற்றங்களில் நாங்கள் பல சந்தர்ப்பங்களில் தவறுகளை இழைத்தோம். கோல் போடுவதிலும் அவ்வப்போது தவறுகளை விட்டோம். எங்களது உயரத்தை அனுகூலமாகக் கொண்டு நாங்கள் திறமையை வெளிப்படுத்த முயற்சித்தோம். ஆனால், அவ்வப்போது விட்ட தவறுகளால் ஆட்டம் கைநழுவிப்போனது என்றார்.

வட அயர்லாந்துக்கு எதிராக நாளை நடைபெறவுள்ள இரண்;டாவது குழுநிலைப் போட்டி குறித்து அவரிடம் கேட்டபோது, முதல் போட்டியில் ஏற்பட்ட குறைகளையும் விட்ட தவறுகளையும் திருத்திக்கொண்டு வெற்றிபெறும் கங்கணத்துடன் விளையாட முயற்சிப்போம் என்றார்.

இப் போட்டியில் முதல் மூன்று ஆட்ட நேரப் பகுதிகளில் திறமையாக விளையாடியபோதிலும் கடைசி ஆட்ட நேரப் பகுதியில் ஏகப்பட்ட தவறுகளை விட்டதன் காரணமாக இலங்கை அணி படுதோல்வியைத் தழுவியது.

போட்டியின் முதலாவது ஆட்;ட நேரப் பகுதியில் 19 க்கு 14 என்ற கோல்கள்; கணக்கில் ஸிம்பாபப்வே முன்னிலை அடைந்தது. இரண்டாவது ஆட்டநேரப் பகுதியின் ஆரம்பத்தில் இலங்கை, ஒரு கட்டத்தில் 5 க்கு 1 எனவும் மற்றொரு கட்டத்தில் 8 க்கு 5 எனவும் முன்னிலையில் இருந்தபோதிலும் அதன் பின்னர் பந்து பரிமாற்றம், தடுத்தாடல், எதிர்த்தாடல் அனைத்திலும் தவறுகளை இழைத்த இலங்கை கடைசியில் 19 க்கு 15 என பின்னிலை அடைந்தது.

இடைவேளையின்போது ஸிம்பாப்வே 38 க்கு 29 என்ற கோல்கள் அடிப்படையில் முன்னிலை வகித்தது.

மூன்றாவது ஆட்ட நேரப் பகுதியில் தடுமாற்றத்தை எதிர்கொண்ட இலங்கை பின்னர் திறமையை வெளிப்படுத்தி சவால் விடுத்தபோதிலும் ஸிம்பாவ்வே 15 க்கு 13 என மீண்டும் முன்னிலை வகித்தது. மூன்றாம் ஆட்ட நேர பகுதி நிறைவில் ஸிம்பாப்வே 53 க்கு 42 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை வகித்தது.

ஆனால் கடைசி நேர ஆட்டநேர பகுதியின் ஆரம்பத்தில் இலங்கையை துவம்சம் செய்ய ஆரம்பித்த ஸிம்பாப்வே 10 க்கு 0 என முன்னிலை அடைந்தது. அதன் பின்னர் இலங்கையினால் மீண்டெழ முடியாமல் போக, நான்காவதும் கடைசியுமான ஆட்டநேரப் பகுதியை 26 க்கு 7 என்ற கோல்கள் கணக்கில் தனதாக்கிக் கொண்டு ஸிம்பாப்வே 79 க்கு 49க்கு என அமோக வெற்றிபெற்றது. இலங்கைக்கான 49 கோல்களில் 44 கோல்களை தர்ஜினி சிவலிங்கம் போட்டார்.

இப் போட்டியில் இலங்கை சார்பாக சத்துரங்கி ஜயசூரிய, தர்ஜினி சிவிலிங்கம், ஹசித்தா மெண்டிஸ்;, துலங்கி வன்னிதிலக்க, கயஞ்சலி அமரவன்ச, நௌஷாலி ராஜபக்ஷ, மாற்று வீராங்கனை தில்லின் வத்தேகெதர, கயனி திசாநாயக்க ஆகியோர் விளையாடினர்.

குழு ஏயில் இடம்பெறும் அணிகளில் உலக வலைபந்தாட்ட தரவரிசையில் அவுஸ்திரேலியா முதலாம் இடத்திலும் வட அயர்லாந்து 8ஆவது இடத்திலும் ஸிம்பாப்வே 13ஆவது இடத்திலும் இலங்கை 18ஆவது இடத்திலும் உள்ளன.

Comments (0)
Add Comment