எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதத்தை பார்த்து ஐ.எஸ் பயங்கரவாதத்தை நாம் எதிர்க்கொள்ள முடியாது!!

எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதத்தை பார்த்து ஐ.எஸ் பயங்கரவாதத்தை நாம் எதிர்க்கொள்ள முடியாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மாத்தறை – சனத் ஜயசூரிய மைதானத்தில் நேற்று இடம்பெற்ற தேசிய கூட்டுறவு தின வைபவத்தில், உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புலனாய்வு பிரிவை மேலும் வலுப்படுத்தி மறுசீரமைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கான புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். புலனாய்வுச் சேவையும் மீள கட்டமைக்கப்படவிருக்கின்றது.

நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலுடன் தொடர்புபட்டவர்களுக்கு உறுதியாக தண்டனை வழங்கப்படுமென்று பிரதமர் கூறினார்.

இது வரையில் நாம் எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதத்தை எதிர்க்கொண்டிருந்தோம். இவ்வறான ஒரு வலைப்பின்னல் அல்ல. இந்த குழு முடிவுற்றது என்று எமது நடவடிக்கைகளை நாம் நிறுத்திவிட முடியாது.

இதனை முற்றாக நிறுத்துவதே எமது கடமையாகும். எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதத்தை எதிர்க்கொண்டது போன்று ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதத்தை எதிர்க்கொள்ள முடியாது. நாம் புதிதாக சிந்திக்க வேண்டும். எமக்கென சட்டங்கள் தேவை என்றும் பிரதமர் தெரிவித்தார்.

இந்த சட்டங்களை அடிக்கடி மாற்றம் செய்ய வேண்டி உள்ளது. 2000, 2002, 2019 ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்தில் மாத்திரம் பயங்கரவாத சட்டத்தில் 15 முறை திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

சிலர் கூறுகின்றார்கள் தற்போதைய சட்டம் போதுமானது என்று. ஆனால் இப்பொழுது சட்டங்கள் போதுமானவை அல்ல. எத்தகைய பயங்கரவாதத்திற்கும் அனுசரனை வழங்குதல் குற்றச்செயலாக கணிக்கப்பட்டுள்ளது.

சில நாடுகளில் சுங்கப்பகுதி, குடிவரவு, குடியகல்வு திணைக்களம், வாகன அனுமதிப் பத்திரம் வழங்கப்படும் திணைக்களம் ஆகியன ஒன்றாக செயற்பட வேண்டும் என்று சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இவற்றை ஒன்றிணைப்பதற்கு சட்டம் கொண்டு வரப்படும்.

இவற்றை தான் நாம் பரிசோதனை செய்து இலங்கைக்கு தேவையான சட்டத்தை நிறைவேற்றவுள்ளோம். இதே போன்று புலனாய்வு பிரிவு இந்த தகவல்களை ஒன்று திரட்டுவதற்கு வலுப்படுத்த வேண்டி உள்ளது. புலனாய்வு பிரிவை விரிவுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

Comments (0)
Add Comment