பங்களாதேஷை வீழ்த்தி தொடரை தன்வசப்படுத்திய இலங்கை! (படங்கள்)

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்ற இலங்கை அணி தொடரை தன்வசப்படுத்தியுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகை தந்துள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணியானது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

இதில் முதலாவதாக நேற்றுமுன்தினம் இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி 91 ஓட்டத்தினால் வெற்றிபெற்று தொடரில் 3 : 1 என்ற கணக்கில் முன்னிலையிலிருந்தது.

இந் நிலையில் தொடரின் இரண்டாவது போட்டி இன்று பிற்பகல் 2:30 க்கு கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 238 ஓட்டங்களை குவித்தது.

339 ஓட்டம் என்ற பெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணி 44.4 ஓவரில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து பங்களாதேஷ் அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது.

இலங்கை அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய அவிஷ்க பெர்னாண்டோ 75 பந்துகளை எதிர்கொண்டு 9 நான்கு ஓட்டங்கள், 2 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்களாக 82 ஓட்டத்தையும், அணித் தலைவர் திமுத் கருணாரத்ன 15 ஓட்டத்தையும், குசல் பெரேரா 30 ஓட்டத்தையும் பெற்று ஆட்டமிழந்ததுடன், அஞ்சலோ மெத்தியூஸ் 52 ஓட்டத்துடனும், குசல் மெண்டீஸ் 41 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பங்களாதேஷ் அணி சார்பில் பந்து வீச்சில் முஷ்தபிசுர் ரஹ்மான் 2 விக்கெட்டுக்களையும், மெய்டி ஹசான் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2:0 என்ற கணக்கில் தன்வசப்படுத்தயுள்ளது. தொடரின் இறுதியும் மூன்றாவது போட்டியும் எதிர்வரும் 31 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment