தமிழ்ப் பழமொழிகள் தொகுப்பு நூல் பருத்தித்துறையில் வெளியீடு! (படங்கள்)

பீற்றர் பேர்சிவல் பாதிரியாரால் 1843, 1874 ஆம் ஆண்டுகளில் தொகுத்து வழங்கப்பட்டிருந்த தமிழ்ப் பழமொழிகள் தொகுப்பு நூலினை விருபா குமரேசன் மற்றும் அ.சிவஞானசீலன் ஆகியோரால் மீள்பதிப்பு செய்யப்பட்டு தமிழ்ப் பழமொழிகள் அகராதி தொகுப்பாக வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

யா/ஹாட்லிக் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்வு தமிழர் பாரம்பரிய முறைப்படி பிரதம விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டு காலை 10.00 மணிக்கு ஆரம்பித்திருந்தது. பிரதம விருந்தினர்களால் மங்கள விளக்கின் சுடர்கள் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து ஹாட்லிக் கல்லூரி மாணவர்களால் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டு வைபவ ரீதியாக நூல் வெளியீட்டு விழா ஆரம்பித்திருந்தது.

பேர்சிவல் பாதிரியாரால் 1843 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்து பதிப்பாகவும், 1874 ஆம் ஆண்டில் தமிழகத்துப் பதிப்பாகவும் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டிருந்த தமிழ்ப் பழமொழிகளின் தொகுப்பாக இந்நூல் தொகுக்கப்பட்டு மீள் பதிப்பு செய்து வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் திருமதி சுஜிபா சிவதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண பண்பாட்டலுவல்கள், கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்களுக்கான செயலாளர் இலட்சுமணன் இளங்கோவன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் ஆழ்வாப்பிள்ளை சிறி, யா/ஹாட்லிக் கல்லூரி முதல்வர் த.முகுந்தன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் வட மாகாண இளைஞர் விவகார அமைச்சு என்பவற்றால் இந்நூல் தொகுப்பு வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “யாழ்.தமிழன்”

Comments (0)
Add Comment