காஷ்மீருக்கு வாருங்கள்: ராகுல் காந்திக்கு ஆளுநர் அழைப்பு..!!

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அதிகாரத்தை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.

இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்றுமுன்தினம் (ஆகஸ்ட் 10) டெல்லியில் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘‘காஷ்மீரில் வன்முறை நடைபெறுவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அங்கு என்ன நடக்கிறது என பிரதமர் தெளிவுப் படுத்தவேண்டும்’’ என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஆளுநர் சத்ய பால் மாலில்

இந்நிலையில், ராகுல் காந்தியின் பேச்சுக்கு காஷ்மீர் மாநில ஆளுநர் சத்ய பால் மாலில் பதில் அளித்துள்ளார். இது குறித்து ஆளுநர் கூறியதாவது:-

ராகுல் காந்தி நாட்டின் மிகப்பெரிய கட்சியின் இளம் தலைவர். அவரிடம் இருந்து மிகவும் முதிர்ச்சியடைந்த அறிக்கையை எதிர்பார்க்கிறேன். மேலும், அவர் நாடாளுமன்றத்தில் காஷ்மீர் தொடர்பான விவாதத்தில் பேசுவார் என எதிர்பாத்தேன். ஆனால் ராகுல் காந்தி தனது கட்சி கூட்டத்தை முடித்து விட்டு நேரடியாக வெளியே வந்து காஷ்மீரில் நிலைமை மோசமாக உள்ளது என குற்றச்சாட்டுகிறார்.

நான் ராகுல் காந்தி காஷ்மீர் வர அழைப்பு விடுக்கிறேன். ஜம்மு-காஷ்மீருக்கு சொந்தமான விமானத்தை அனுப்புகிறோம். அதில் பயணித்து காஷ்மீருக்கு வாருங்கள். மேலும், காஷ்மீரில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பாருங்கள், இன்று ஒரு நபர் கூட போலீஸ் தாக்குதலில் காயம் அடைந்ததாக அனுமதிக்கப்படவில்லை. இங்கு நிலைமை மிகவும் சீராகத்தான் உள்ளது. சில வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள்தான் வேண்டுமென்றே தவறான தகவலை பரப்புகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments (0)
Add Comment