கல்லீரல் அழற்சியை தடுப்பது சுலபம்! (மருத்துவம்)

கல்லீரலில் வைரஸ் கிருமித்தொற்றால் உண்டாகும் அழற்சியை கல்லீரலழற்சி என்று சொல்கிறோம். இப்பிரச்னை தானாகவே குணமடைய கூடியதாகவோ, நீடித்த கல்லீரலழற்சியாகவோ, வடுவாகவோ, கல்லீரல் புற்றாகவோ மாறவும் வாய்ப்புள்ளது. கல்லீரலில் நோயுண்டாக்கும் வைரஸில் Hepatitis A virus, B,C,D மற்றும் E என்று 5 வகைகள் உள்ளது. இதைத் தடுக்க சில வழிமுறைகள் இருக்கின்றன.

அனைத்து வகை கல்லீரலழற்சி பற்றிய விழிப்புணர்வை அதிகப்படுத்துவதன் மூலம் இந்நோய் பரவலைத் தடுக்க முடியும். ஆரம்ப கட்ட நோயறிதலும், சிகிச்சையும் நோய் பிறருக்குப் பரவுவதைத் தடுக்க உதவும். பிறப்புக்கு முன்னான சோதனை, ஆன்டி வைரஸ் மருந்துகள், பிறந்த குழந்தைக்கு கல்லீரலழற்சி B தடுப்பூசி ஆகியவற்றின் மூலம் தாயிடமிருந்து சேய்க்குப் பரவும் HBV தொற்றைத் தடுக்க முடியும். கல்லீரலழற்சி A, B மற்றும் E தொற்றைத் தடுக்க தடுப்பூசிகள் உள்ளன.

கல்லீரலழற்சி B தடுப்பு

கல்லீரலழற்சி D-யையும் தடுக்க உதவும். ஊசி, ரத்தம் மற்றும் அறுவை சிகிச்சையில் பாதுகாப்பு மற்றும் போதை ஊசி தடுப்பு மூலம் கல்லீரல் அழற்சி B மற்றும் C-யைத் தடுக்கலாம். ரத்ததானம் செய்வோரின் ரத்தத்தை பரிசோதிக்கையில் நோய்த்தொற்று இருப்பது உறுதியானால், அவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கி ஆதரவு அளிப்பது நோயைக் குணமாக்கவும், பரவுவதைத் தடுக்கவும் உதவும்.

பாதுகாப்பான குடிநீர், உணவு, மேம்பட்ட சுத்தம், கைகழுவல் மூலம் கல்லீரலழற்சி A மற்றும் E-யைத் தடுக்கலாம். மது, புகை போன்ற கல்லீரலைப் பாதிக்கும் பழக்கங்களைத் தவிர்க்க உரிய ஆலோசனை வழங்க வேண்டும். சுகாதாரப் பணியாளர்களுக்கு பணியிடங்களில் நோய்த் தொற்று ஏற்படாமலிருக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சரியான நேரத்தில் பரிசோதனை செய்வதன் மூலம் உங்கள் தொற்றின் நிலையை அறிந்து உரிய சிகிச்சையளித்தால் அனைத்து வகை கல்லீரலழற்சி நோய்களையும் குணப்படுத்துவதோடு உயிரிழப்பையும் குறைக்க முடியும்.

Comments (0)
Add Comment