கொசுன்னா அவ்வளவு இளக்காரமா? (மருத்துவம்)

*கோடை காலம் நமக்கெல்லாம் விடுமுறைக் காலம். ஆனால், அது கொசுக்கள் நம் இடத்தைப் பங்கு போட்டுக் கொள்ளும் முக்கியமான காலம். ‘ஐந்து பேரில் ஒருவரை குறிப்பாகத் தேர்ந்தெடுத்து தங்கள் பசியைப் போக்க நாடி வருகின்றன இந்த ரத்த உறிஞ்சிகள்’ என்கிறார்கள் விஞ்ஞானிகள். அவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்… ஜாக்கிரதை!

*ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுக்க10 லட்சத்திலிருந்து 20 லட்சம் பேர் கொசுக்களால் பரவும் நோய்களால் பாதிக்கப்பட்டு இறக்கிறார்கள் என்று கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அதில் அதிகம் பேர் பாதிக்கப்படுவது மலேரியாவால்!

* ‘கொசுவை ஒழிக்கலாம்’ என்று விளம்பரப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வரும் பல பொருட்களில் DEET என்ற கெமிக்கல் கலக்கப்படு
கிறது. அது எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டிய ஒரு கெமிக்கல். DEET பல தீய பக்க விளைவுகளை நம் உடலுக்கு ஏற்படுத்துவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

* உலகில் 3,000 கொசு இனங்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. அவற்றில் 200 இனங்கள் குடியிருப்பது அமெரிக்காவில்! கடிக்கும் பழக்கங்கள், நோயைக் கடத்தும் திறன், அளவு இவற்றால் ஒன்றுக்கொன்று அவை வித்தியாசப்படுகின்றன.

*பொதுவாக ஆண் கொசுக்களுக்கு நம் ரத்தத்தின் மேல் விருப்பம் இருப்பதில்லை. பெண் கொசு தன் முட்டை உற்பத்திக்காக நம் ரத்தத்தில் இருக்கும் புரதம் மற்றும் இரும்புச் சத்தின்பால் ஈர்க்கப்பட்டு தேடி வருகிறது. நம்மைக் கடிப்பது பெண் கொசுக்களே!

* மனித உடலில் இருக்கும் லேக்டிக் ஆசிட், அம்மோனியா, கார்போக்ஸிலிக் ஆசிட் மற்றும் ஆக்டினால் (octenol) (மனிதர்களின் மூச்சிலும் வியர்வையிலும் காணப்படுகிறது) ஆகியவை கொசுக்களுக்கு விருப்பமானவை.

*கொசுக்கடியிலிருந்து காப்பாற்றிக் கொள்வதென்பது லேசான கடி, அரிப்பு, இம்சையிலிருந்து தடுத்துக் கொள்வது மட்டுமல்ல! மூளைக் காய்ச்சல், மஞ்சள் ஜுரம், மலேரியா, டெங்கு போன்ற கொசுக்களால் பரவும் பல நோய்களுக்கான வாய்ப்பைக் குறைப்பதும் ஆகும்.

*மிதமான சூடு, இயக்கம் இந்த இரண்டிலும் தீவிரமாக செயல்படக் கூடியவை கொசுக்கள். மிதமான வெயில் இருக்கும் காலைப் பொழுதிலோ, மாலைப் பொழுதிலோ உடற்பயிற்சி செய்பவர்கள் மிகச் சரியான இலக்கு கொசுக்களுக்கு!

*மனிதர்களின் உடலில் சுரக்கும்வியர்வையால் ஈர்க்கப்பட்டு கொசுக்கள் வருகின்றன என்ற நம்பிக்கை பரவலாக இருக்கிறது. ஆனால், அறிவியல் பூர்வமாக இது நிரூபிக்கப்படவில்லை. ஆனால், நம் வியர்வையில் பாக்டீரியா மூலம் உற்பத்தியாகும் ரசாயன மாற்றங்களால் ஈர்க்கப்பட்டு வருகின்றன.

* சில கொசுக்கள் மனிதர்களைக் கடிப்பதில்லை. பல்லி, தவளை, பாம்பு போன்ற உயிரினங்களையும் பறவைகளையும் கடிப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. உதாரணமாக, ‘கலிசெட் மெலனுரா’ (Culiset melanura) என்ற கொசு இனம் இந்த வகையில் ஸ்பெஷலிஸ்ட்!

*பறந்து வரும் போது அதிகமானசத்தத்தை ஏற்படுத்தினாலும் பூச்சி இனங்களில் கொசு இனத்தின் பறக்கும் வேகம் குறைவு. வண்ணத்துப்பூச்சி, தேனீ, வெட்டுக்கிளி இவற்றோடு பறப்பதில் போட்டி வைத்தால் நிச்சயம் கொசு தோற்றுப் போகும். ஒரு மணி நேரத்துக்கு ஒன்றிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் பறக்கும் ஒரு சாதாரண கொசு.

*முக்கியமாக கார்பன் டைஆக்சைடு என்றால் அவ்வளவு இஷ்டம் கொசுக்களுக்கு. அதிகமாக கார்பன் டைஆக்சைடை வெளியிடுபவர்களைத் தேடி ஓடி வருகிறது கொசு. சிறியவர்களைவிட பெரியவர்கள்தான் அதிகம் கார்பன் டைஆக்சைடை வெளியிடுகிறார்கள். பெரியவர்கள்கொசுக்களிடம் அதிகமாகக் கடிபட இதுவும் ஒரு காரணம்.

*எல்லா கொசுக்களுக்கும் இனப்பெருக்கம் செய்யத் தேவைப்படுவது தண்ணீர். சில வகைக் கொசுக்
களுக்கு மழைக்குப் பிறகு தேங்கியிருக்கும் குட்டைகள் போதும் இனப்பெருக்கம் செய்ய! சில இஞ்ச் அளவு தண்ணீர் தேங்கியிருந்தாலே அவை அதில் முட்டை இட்டு, கொசுக்களை உற்பத்தி செய்துவிடும்.

*ஒரு சாதாரண கொசு ஐந்திலிருந்து ஆறு மாதம் வரை உயிர் வாழும். சில வாசனைகள் கொசுக்களைக் குழப்பி நம்மிடம் வராமல் தடுத்துவிடும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள் சில ஆராய்ச்சியாளர்கள். புதினா, சாக்லெட் ஆகிய வாசனைகள் கொசுவை நம்மை நெருங்கவிடாமல் தடுத்து விடுமாம்.

* மாவீரர் அலெக்ஸாண்டர் போரிலோ அல்லது எதிரிகளால் கொல்லப்பட்டோ இறக்கவில்லை. கொசுக்கடியால் ஏற்படும் ‘வெஸ்ட் நைல் வைரஸால் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்தார் என்கிறது வரலாறு. அவர் மரணம் குறித்து 2003ல் ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையே வெளியாகி, உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆக, அலெக்ஸாண்டரின் உயிரே ஒரு கொசுவின் கையில்தான் இருந்திருக்கிறது!

*ஒரு சராசரி கொசுவின் எடை இரண்டிலிருந்து இரண்டரை மில்லி கிராம் இருக்கும். எளிதில் அழிக்க முடியாத ஓர் உயிரினம் கொசு. உலகில் வேறு எந்த மிருகத்தாலும் மனிதனுக்கு ஏற்படும் மரணங்களைவிட கொசுக்களால் ஏற்படும் மரணங்கள் மிக அதிகம். டெங்கு, மலேரியா, மஞ்சள் ஜுரம், மூளைக்காய்ச்சல் என்று ஏற்படுத்தி மொத்த மொத்தமாக மனித உயிரை வாங்கிவிடுகிறது. ஒரு கொசுவால் நூறு பேருக்கு மேல் நோய்த்தொற்றை ஏற்படுத்த முடியும். உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி, ஆப்பிரிக்காவில் ஒவ்வொரு நாற்பத்தைந்து வினாடிகளுக்கும் ஒரு குழந்தை மலேரியாவால் இறக்கிறதாம்.

கொசுக்கடியை தவிர்க்க எளிய வழிகள்!

*அதிகாலையும் அந்தியும் கொசுக்கள் மனிதர்களைத் தேடி உற்சாகமாக வரும் பொழுதுகள். இந்த நேரங்களில் கதவு, ஜன்னல்களை அடைத்துவிட்டு வீட்டுக்குள் இருப்பது நலம். கொசுக்கள் வளர தண்ணீர் அவசியம் தேவை… வீட்டைச் சுற்றியுள்ள இடத்தில், முற்றத்தில், செல்லப் பிராணிகளுக்கு தண்ணீர் வைக்கும் பாத்திரங்களில், சாக்கடையில், குழாயடியில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும்.

*கொசுக்கடியிலிருந்து தப்ப தொளதொள வென்றிருக்கும், வெளிர் நிறம் கொண்ட ஆடைகளை அணியலாம். முழுக்கை சட்டை, பேன்ட் அணிந்திருப்பது நலம். கொசுக்கடிக்கு பயந்து, சிலர் சாக்ஸ்களையும் கையுறைகளையும் அணிந்து கொள்வதும் உண்டு.

*கொசுக்கடியிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ரசாயனம் கலந்த பொருட்களைப் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. மாற்றாக, கொசு விரட்டி மட்டைகளைப் பயன்படுத்தலாம். உறங்கும்போது கொசுவலை பயன்படுத்தலாம். ஜன்னல் வழியே கொசு வராமல் இருக்க, ஜன்னல் வலைகளை பொருத்திக் கொள்ளலாம்.

*வீட்டுக்கு அருகே சாமந்திப்பூ செடியை வளர்ப்பது நல்ல பலன் தரும். இந்தப் பூவின் வாசனை கொசுக்களுக்குப் பிடிப்பதில்லை… அதனால் நம்மை நெருங்காது.

*உங்களுக்குப் பின்னால் டேபிள் ஃபேனை நெருக்கமாக வைத்து முழு வேகத்தில் ஓடவிட்டால் கொசுக்கள் அண்டாது.

*வீட்டுத் தோட்டத்தில் தும்பி வளர்த்தால் கொசுக்கள் வராது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

*உடலில் லவங்கப்பட்டை எண்ணெய் அல்லது யூகலிப்டஸ் எனப்படும் நீலகிரித் தைலத்தைத் தடவிக் கொண்டாலும் கொசுக்கள் விலகும்… பக்க விளைவுகள் இல்லை.

Comments (0)
Add Comment