மாநிலங்களவை தேர்தல் – மன்மோகன் சிங் ராஜஸ்தானில் போட்டி..!!

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், கடந்த 1991-ம் ஆண்டு முதன்முதலில் அசாம் மாநிலத்தில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதிருந்து 28 ஆண்டுகளாக அவர் அசாம் மாநிலத்தில் இருந்தே மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு வந்தார்.

அவரது மாநிலங்களவை எம்.பி. பதவிக்காலம், கடந்த ஜூன் 14-ந் தேதி முடிவடைந்தது. அவரை அசாமில் இருந்து மீண்டும் தேர்வு செய்யும் அளவுக்கு காங்கிரஸ் கட்சிக்கு போதிய எம்.எல்.ஏ. பலம் இல்லை. வேறு மாநிலங்களிலும் காலியிடம் இல்லாமல் இருந்தது.

இந்தநிலையில், மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த ராஜஸ்தான் மாநில பா.ஜனதா தலைவர் மதன்லால் சைனி சமீபத்தில் காலமானார். அதனால் அந்த காலியிடத்துக்கு ஆகஸ்டு 26-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கலுக்கு 14-ந் தேதி (நாளை) கடைசி நாள். வேட்பு மனுக்கள் 16-ந் தேதி பரிசீலிக்கப்படும். மனுக்களை வாபஸ் பெற 19-ந் தேதி கடைசி நாளாகும்.

ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்த சட்டசபை தொகுதிகள் எண்ணிக்கை 200. இவற்றில் 2 இடங்கள் காலியாக உள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு 100 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அத்துடன், 12 சுயேச்சைகள், பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 6 பேரின் ஆதரவு உள்ளது. எனவே, மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற தேவையான பலம் காங்கிரசுக்கு இருக்கிறது.

ஆகவே, மன்மோகன் சிங்கை ராஜஸ்தானில் வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது. இத்தகவலை மாநில துணை முதல்-மந்திரியும், மாநில காங்கிரஸ் தலைவருமான சச்சின் பைலட் தெரிவித்தார்.

மன்மோகன் சிங் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். அவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாவிட்டால், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார். ஒருவேளை போட்டி இருந்தால், 26-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, அன்று மாலையே முடிவு அறிவிக்கப்படும்.

மறைந்த மதன்லால் சைனி, கடந்த ஆண்டு ஏப்ரல் 4-ந் தேதி மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த பதவிக்காலம், 2024-ம் ஆண்டு ஏப்ரல் 3-ந் தேதிவரை இருக்கிறது. எனவே, மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டால், அவர் 4 ஆண்டுகளுக்கு மேல் எம்.பி.யாக இருக்கலாம்.

Comments (0)
Add Comment