மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்லும் புதிய ரெயில் என்ஜின் தயாரிப்பு..!!

இந்தியாவில் தயாரிப்போம் என அழைக்கப்படும் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை பிரதமர் செப்டம்பர் 25, 2014 இல் அறிமுகப்படுத்தினார். இது தொழில் மற்றும் வர்த்தக வளர்ச்சியை அதிகரிக்கவும், உலக அளவில் இந்தியாவை மாபெரும் உற்பத்தி மையமாக்கும் நோக்கிலும் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் ரெயில்வே, ராணுவம் போன்ற பல்வேறு துறைகளில் இந்தியா உற்பத்தி செய்து வருகிறது.

இந்நிலையில், “மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் இதற்கு முன்பு இருந்த ரெயில்களை விட அதிவேக ரெயில் என்ஜின் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது” என மத்திய ரெயில்வே மந்திரி பியுஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் தெரிவிக்கையில், “வாப் – 7 எச்எஸ் 30750 ஜீஇசட்பி (WAP-7HS 30750 GZB) வகை புதிய ரெயில் என்ஜின் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. நேற்று ராஜஸ்தானின் ரவதா சாலை – லாபான் பாதையில் இந்த என்ஜின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. சோதனை ஓட்டத்தின்போது மணிக்கு 180 கிமீ வரை வேகத்தில் சென்றது. 24 பெட்டிகளுடன் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியது. தற்போதைய அதிவேக என்ஜினான வாப்-7 என்ஜினை விட (மணிக்கு 140 கிமீ வேகம்) இந்த புதிய என்ஜின் அதிக செயல் திறன் கொண்டது ” என்றனர்.

இந்த புதிய ரெயில் என்ஜின்களை ராஜ்தானி, சதாப்தி மற்றும் தூரந்தோ போன்ற அதிவேக ரெயில்களில் பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments (0)
Add Comment