திருப்பத்தூரில் பெண் தூக்கிட்டு தற்கொலை – பிணத்தை யாரையும் தொடவிடாமல் பாதுகாத்த வளர்ப்பு நாய்..!!

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரத்தை சேர்ந்தவர் தனசேகர் (வயது 40). வாட்டர் கேன் சப்ளை செய்து வருகிறார். இவரது மனைவி ராதா (34). இவர்களுக்கு 1 மகனும், 1 மகளும் உள்ளனர்.

தனசேகர் தொழில் காரணமாக பல இடங்களில் கடன் வாங்கி இருந்தார். அதை திருப்பி கொடுக்க முடியாமல் அவதிபட்டு வந்தார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு வந்தனர். இதனால் கடந்த 6 மாதத்திற்கு முன்பு தனசேகர் மனைவி மற்றும் பிள்ளைகளை விட்டு திடீரென தலைமறைவானார்.

இதனால் கடன் கொடுத்தவர்கள் ராதவிடம் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்தனர். நேற்று கடன் கொடுத்தவர்கள் மீண்டும் பணத்தை கேட்டு ராதாவிடம் நச்சரித்தனர். இதனால் மனவேதனை அடைந்த ராதா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்க முயன்றனர். அப்போது ராதா பாசமாக வளர்த்த நாய் ராதாவின் உடலை எடுக்கவிடாமல் சடலத்தின் மீது படுத்து கண்ணீர் வடிந்தபடி போலீசாரை பார்த்து குரைத்தது.

பின்னர் ஒரு வழியாக நாயை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தன்னை வளர்த்த எஜமானர் இறந்துவிட்டதை அறிந்த நாய் கண்ணீர்விட்டு அழுது யாரையும் பிணத்தை எடுக்கவிடாமல் செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Comments (0)
Add Comment