காவேரிப்பட்டணம் அருகே தனியார் பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி..!!

காவேரிப்பட்டணம் சந்தை பாளையம் பகுதியை சேர்ந்தவர் சலாவுதீன் (வயது 36). பெங்களூரில் உள்ள பிரியாணி கடையில் வேலைசெய்து வந்தார். இவர் பக்ரீத் விடுமுறைக்காக காவேரிப்பட்டணம் வந்திருந்தார்.

இந்நிலையில் இன்று காலை சொந்தவேலை காரணமாக கிருஷ்ணகிரிக்கு செல்ல முடிவுசெய்தார். பின்னர், கிருஷ்ணகிரி நோக்கி புறப்பட்டார். அப்போது காவேரிப்பட்டணம் அடுத்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகே வந்தபோது இருசக்கர மோட்டார் சைக்கிள் முன்பு சென்றுகொண்டிருந்த லாரியை முந்த முயன்றார். அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து சேலம்நோக்கி எதிரேவந்த தனியார் பஸ் மீது இருசக்கர மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சலாவுதீனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவேரிப்பட்டணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சலாவுதீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான சலாவுதீனுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் குறித்து பொதுமக்கள் கூறுகையில், இப்பகுதியில் தனியார் திருமண மண்டபம் அருகே வேகத்தடை இல்லாததே இத்தகைய விபத்து ஏற்படுவதற்கு காரணமாகும்.

இதுகுறித்து உரிய நிர்வாகத்தினருக்கு வேகத்தடை வேண்டி கோரிக்கை விடுத்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை. எனவே, இப்பகுதியில் விரைவில் வேகத்தடை அமைத்துதர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments (0)
Add Comment