பஸ்சை சிறைபிடித்து டிரைவரிடம் மன்னிப்பு கடிதம் வாங்கிய கிராம மக்கள்..!!

கடலூரில் இருந்து நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், களிஞ்சிக்குப்பம் வழியாக சிறுவந்தாடு கிராமத்துக்கு தினந்தோறும் காலையில் அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் கடலூரில் இருந்து புறப்பட்ட அரசு பஸ், களிஞ்சிக்குப்பத்துக்கு செல்லாமல் சொர்ணாவூர் வழியாக சிறுவந்தாடுக்கு சென்றது. பின்னர் அங்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் அந்த பஸ் சொர்ணாவூர் வழியாக கடலூருக்கு புறப்பட்டது.

இது பற்றி அறிந்ததும் களிஞ்சிக்குப்பம் கிராம மக்கள் ஒன்று திரண்டு 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து மெயின் ரோட்டிற்கு சென்றனர். அப்போது சொர்ணாவூரில் இருந்து வந்த அரசு பஸ்சை, களிஞ்சிக்குப்பம் கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கிராம மக்கள், எங்களது ஊருக்கு தினமும் அரசு பஸ் வந்து செல்லும் என உத்தரவாதம் அளித்தால்தான் பஸ்சை விடுவிப்போம் என்றும், கிராமத்துக்குள் பஸ் வராத காரணத்தை தெளிவாக கூறி, மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும் என்றனர். இதனை தொடர்ந்து பஸ் டிரைவர் கவியரசன் ஒரு கடிதம் எழுதி கொடுத்தார். அந்த கடிதத்தில், பள்ளிக்கூடம் விடுமுறை என்பதால் களிஞ்சிக்குப்பம் கிராமத்திற்குள் செல்லவில்லை. வரும் காலங்களில் தினமும் கிராமத்துக்குள் பஸ்சை ஓட்டிச்செல்வேன் என்று கூறியிருந்தார்.

மேலும் இந்த ஒரு முறை மட்டும் மன்னிக்குமாறு டிரைவர், கிராம மக்களிடம் கேட்டுக்கொண்டார். இதையடுத்து கிராம மக்கள் பஸ்சை விடுவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Comments (0)
Add Comment