கண்ணூர் விமான நிலையத்தில் தாவூத் இப்ராகிம் சகோதரரின் கூட்டாளி கைது..!!

மும்பை குண்டுவெடிப்பு உள்பட பல்வேறு தீவிரவாத செயல்களில் தொடர்புடையவர் தாவூத் இப்ராகிம்.

தாவூத் இப்ராகிமின் சகோதரர் அனீஷ் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளி முகம்மது அல்டாப் அப்துல் லத்தீப் சையீத். இவர் மும்பையில் உள்ள ஒரு ஓட்டல் உரிமையாளரை பணம் கேட்டு மிரட்டியதாக புகார் எழுந்தது.

கடந்த 2017-2018-ம் ஆண்டு இந்த சம்பவம் நடந்தது. இதுதொடர்பாக ஓட்டல் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் தெற்கு மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்து முகம்மது அல்டாப் அப்துல்லத்தீப் சையீத் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வந்தனர்.

இதற்கிடையே முகம்மது அல்டாப் அப்துல்லத்தீப் சையீத் துபாய் நாட்டில் இருந்து அவ்வப்போது கேரளா வந்து செல்வது மும்பை போலீசாருக்கு தெரியவந்தது. எனவே அவர்கள் முகம்மது அல்டாப் அப்துல்லத்தீப் சையீத் எப்போது கேரளா வருகிறார் என்பதை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் அவர் நேற்று துபாயில் இருந்து கேரளாவின் கண்ணூர் வருவது தெரியவந்தது. இதையடுத்து கண்ணூர் விமான நிலையத்தில் போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். நேற்று காலை முகம்மது அல்டாப் அப்துல்லத்தீப் சையீத் கண்ணூர் விமான நிலையத்தில் வந்து இறங்கியதும் அவரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட முகம்மது அல்டாப் அப்துல் லத்தீப் சையீத் கண்ணூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 16-ந்தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது. இதையடுத்து மும்பை போலீசார் முகம்மது அல்டாப் அப்துல்லத்தீப் சையீத் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Comments (0)
Add Comment