வேலூரில் 110 ஆண்டுக்கு பிறகு வரலாறு காணாத மழை..!!!

தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக தென் மேற்கு பருவ மழை கொட்டி தீர்த்தது. இதனால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பலரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதே சமயம், வேலூர் மாவட்டம் முழுவதும் மழைக்கான அறிகுறிகளின்றி காணப்பட்டது.

இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் சாரலுடன் லேசான மழை பெய்யத் தொடங்கியது. படிப்படியாக அதிகரித்து இரவு முழுவதும் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அதிகாலை 3 மணியளவில் மழையின் தாக்கம் மேலும் அதிகரித்து, அதிகாலை 5 மணி வரை மழை கொட்டியது.

பின்னர், படிப்படியாக குறைந்து மிதமான மழையாகத் தொடர்ந்து பெய்தது.

இரவு முழுவதும் பெய்த கனமழையால் வேலூர் மாநகரில் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. புதிய பஸ் நிலையம், காமராஜர் சாலை, அண்ணா சாலை, ஆற்காடு சாலை, ஆரணி சாலை, கிரீன் சர்க்கிள், சேண்பாக்கம், தோட்டப் பாளையம் பகுதிகளில் உள்ள சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.

திடீர் நகர், இந்திரா நகர், கன்சால் பேட்டை உள்ளிட்ட மாநகரின் தாழ்வான பகுதிகளிலுள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததுடன், ஏராளமான வீடுகளுக்குள் 5 அடி அளவுக்கு மழை தண்ணீர் புகுந்தது. இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீடுகளைவிட்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர். வீடுகளுக்குள் இருந்த உடைமைகளும் சேதமடைந்தன.

இதேபோல், காட்பாடி வி.ஜி.ராவ் நகர், காந்தி நகர் விரிவாக்கம், சித்தூர் பஸ் நிலையம், ஓடைப்பிள்ளையார் கோவில், சில்க் மில்க் உள்ளிட்ட பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்தது. மேலும், கனமழையால் காகிதப்பட்டறை டான்சி நிறுவனத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ள மழை வெள்ளம்.

மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை, குடிநீர் திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாததால் அப்பகுதிகளில் சென்ற பல வாகனங்கள் பள்ளங்களில் சிக்கிக் கொண்டன.

கனமழையால் வேலூர் மாநகராட்சிக்கு உள்பட்ட பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக மாறின. இதேபோல், மாவட்டம் முழுவதும் பெரும்பாலான இடங்களிலும் கனமழை பெய்தது.

மாங்காய் மண்டி எதிரே உள்ள நிக்கல்சன் கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கழிவுகள் அங்குள்ள தடுப்புகளில் சிக்கியதால் மழை வெள்ளம் தொடர்ந்து செல்ல வழியின்றி மாங்காய் மண்டி, கன்சால்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள வீடுகளில் புகுந்தது. இதனால், அங்குள்ள மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.

கால்வாய் அடைப்பை சரிசெய்யாததால்தான் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்ததாகக் கூறி, அப்பகுதி மக்கள் மாங்காய் மண்டி எதிரே பெங்களூரு சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமரசம் செய்தனர்.

வேலூரில் கடந்த 110 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை இரவு ஒரே நாளில் 166 மி.மீ. மழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வாளரான பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் சனிக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர மழைப் பொழிவு கணக்கெடுப்புப்படி, வேலூரில் அதிகபட்சமாக 165.7 மி.மீ (16 செ.மீ), இதற்கு அடுத்தபடியாக காட்பாடியில் 109 மி.மீ மழை பதிவானது.

கடந்த 110 ஆண்டுகளுக்குப் பிறகு வேலூரில் வெள்ளிக்கிழமை இரவு அதிகபட்ச மழை பெய்திருப்பதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 1909ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி வேலூரில் 106 மி.மீ. பெய்ததே வேலூரில் 24 மணி நேரத்தில் பெய்த அதிகபட்ச மழை பொழிவாக இதுவரை இருந்து வந்தது. அதனை மிஞ்சும் வகையில் வெள்ளிக்கிழமை ஒரே நாள் இரவில் 166 மி.மீ. மழை பெய்துள்ளது.

வேலூர்- ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பூட்டுத்தாக்கு பாலாற்றில் வெள்ளம் சீறிப்பாய்ந்து செல்கிறது. வெள்ளத்திற்கு ஆரத்தி எடுத்தும் மலர்தூவியும் பொதுமக்கள் வரவேற்றனர்.

வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், ஆலங்காயம், பேரணாம்பட்டு, குடியாத்தம், வேலூர், காட்பாடியில் நேற்று இரவும் பலத்த மழை கொட்டியது.

இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ளாக்காடாக காட்சியளித்தது.

அதிகபட்சமாக ஆலங்காயத்தில் 150 மி.மீ, ஆம்பூர்-80.6 மி.மீ. வாணியம்பாடி-85 மி.மீ, திருப்பத்தூர்-73 மி.மீ. மழை கொட்டியது.

Comments (0)
Add Comment