புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம் 30 நாளில் சாத்தியமில்லை – இங்கிலாந்து பிரதமரிடம் பிரான்ஸ் அதிபர் வலியுறுத்தல்..!!

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தின்படி 2019 மார்ச் 29-ம் தேதிக்குள் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து முறைப்படி விலகுவதற்கு முடிவு செய்யப்பட்டது. பிரெக்ஸிட்டை எதிர்த்து பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகியதை தொடர்ந்து தெரசா மே புதிய பிரதமராக பொறுப்பேற்றார்.

உடனடியாக அவர் பிரெக்ஸிட்டுக்கான நடவடிக்கையை தீவிரப்படுத்த தொடங்கினார். பிரெக்ஸிட்டுக்கு பின்னர் ஐரோப்பிய நாடுகளுக்கும், இங்கிலாந்துக்கும் இடையிலான வர்த்தகம், வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்பு உடன் தெரசா மே ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தினார்.

ஆனால் இந்த ஒப்பந்தத்தில் ஐரோப்பிய கூட்டமைப்புக்கு அதிக சலுகைகள் வழங்கப்பட்டிருப்பதாக கூறி இங்கிலாந்து எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக பிரெக்ஸிட் ஒப்பந்தம் 3 முறை பெருவாரியான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து தெரசா மேவின் கோரிக்கையின் பேரில், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான காலக்கெடு வரும் அக்டோபர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது.

ஆனாலும் பிரெக்ஸிட் விவகாரத்தில் எம்.பி.க்களின் ஆதரவை பெற முடியாததால் தெரசா மே, கடந்த ஜூன் 7-ம் தேதி பிரதமர் பதவியையும், கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தார்.

இதற்கிடையே, இங்கிலாந்தின் முன்னாள் வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சன் புதிய பிரதமராக பதவியேற்றார். பதவியேற்ற சில மாதங்களுக்குள்ளாக பிரெக்ஸிட்டை நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. இல்லையென்றால் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறும் முடிவை எடுக்க வேண்டும்.

இதைத்தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் வகையில் புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம் அக்டோபர் 31-ம் தேதிக்குள் மேற்கொள்ளப்படும் என்று இங்கிலாந்து புதிய பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதி அளித்துள்ளார். இதுதொடர்பாக மேற்கொள்ளப்படும் முயற்சி புதிதாகவும், சிறப்பாகவும் இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரான்ஸ் நாட்டுக்கு சென்றார். அங்கு அவர் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்துப் பேசினார். அப்போது போரிஸ் ஜான்சனிடம் பேசிய மேக்ரான், புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை 30 நாளுக்குள் ஏற்படுத்துவது சாத்தியமில்லை என தெரிவித்தார்.

Comments (0)
Add Comment