இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை கைது செய்ய உத்தரவு!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவருக்கு ஹசின் ஜகான் என்ற மனைவியும், மகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஆண்டு ஹசின் ஜகான் தனது பேஸ்புக்கில் ஷமி பல பெண்களுடன் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் வாயிலாக மிகவும் அந்தரங்க விஷயங்கள் பற்றி சாட் செய்துள்ள விவரங்களை ஷேர் செய்திருந்தார்.

இதற்கிடையில், முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜகான் அளித்த பேட்டியில், தனது கணவர் முகமது ஷமியும் அவரது சகோதரன் ஹசித் அகமதுவும் தன்னை துன்புறுத்தி வருவதாகவும், கணவரின் குடும்பத்தார், தன்னை கொலை செய்ய கூட முயற்சித்ததாகவும் கூறியிருந்தார்.

இதையடுத்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொல்கத்தாவில் உள்ள லால்பசார் பொலிஸ் நிலையத்தில் ஷமி மற்றும் அவரது சகோதரன் ஹசித் அகமது மீது ஹசின் ஜகான் முறைப்பாடு செய்துள்ளார். இந்த முறைப்பாடு தொடர்பான வழக்கு கொல்கத்தாவில் உள்ள அலிப்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இது தொடர்பாக முகமது ஷமி மற்றும் அவரது சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி பலமுறை உத்தரவிட்ட போதும் இருவரும் ஆஜராகவில்லை.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று நீதிமன்றத்திற்கு வந்த போது வழக்கில் ஆஜராகாதா இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மற்றும் அவரது சகோதர் ஹசித் அகமது இருவருக்கும் கைது பிடியாணை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், அடுத்த 15 நாட்களுக்குள் முகமது ஷமி மற்றும் அவரது சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால் அவர்களை கைது செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் இடம் பெற்றுள்ள முகமது ஷமி தற்போது அந்த அணிக்கு எதிராக நடைபெற்றுவரும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment