வெற்றி பெறும் வேட்பாளர் நியமிக்கும் பட்சத்தில் ஆதரவு – திகாம்பரம்!! (படங்கள்)

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் வெற்றி பெறும் வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கும் பட்சத்தில் அவருக்கு எமது ஆதரவு வழங்கப்படும் என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

மலையகத்தில் முதன்முறையாக மலையக அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் நிதி ஒதுக்கிட்டில் மனிதவள பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் நுவரெலியா பீட்று ஸ்கிராப் தோட்டத்தில் 50 தனி வீட்டுத்திட்டத்திற்கான அடிகல் நாட்டு விழா 09.09.2019 அன்று அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் நாட்டி வைக்கபட்டது.

இதேவேளை கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் இருபது இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஸ்கிராப் தோட்டத்திற்கு செல்லும் வீதியும் திறந்து வைக்கபட்டது.

அமைச்சர் திகாம்பரம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் வீ. புத்திரசிகாமணி, முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான எம். உதயகுமார், எம். ராம், நுவரெலியா மாநாகர சபையின் பிரதி மேயர் யதர்சனா புத்திரசிகாமணி, அமைச்சின் ஆலோசகர் வாமதேவன், மலையக அபிவிருத்தி நிலையத்தின் தலைவர் சந்ராசாப்ட், நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

ஏழு பேர்ச் காணியில் இந்த வீடமைப்பு திட்டம் முன்னெடுக்கபடவுள்ளதோடு, குடிநீர் வசதி, மின்சாரம், போக்குவரத்து வசதி என்பன அமைத்து கொடுக்கபடவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

எதிர்காலத்தில் மூன்று தேர்தல்கள் இடம்பெறும், முதலாவதாக ஜனாதிபதி தேர்தல், இரண்டவதாக பாராளுமன்ற தேர்தல், மூன்றாவதாக மாகாண சபை தேர்தல் போன்ற இடம்பெறும்.

இதன்போது மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். அவ்வாறு வாக்களிக்கும் போது மீண்டும் இந்த அரசாங்கம் ஆட்சியமைக்கும். அவ்வாறு ஆட்சியமைக்கும் பட்சத்தில் இன்னும் பல அபிவிருத்திகளை மேற்கொள்ளலாம். வீடமைப்பு திட்டம் என பல அபிவிருத்திகளை மேற்கொள்ளலாம்.

நாங்கள் 2015ம் ஆண்டு வாக்குறுதி வழங்கியதை போல் அபிவிருத்திகளை முன்னெடுத்து செல்கின்றோம். நமது மக்கள் இன்று எனது அமைச்சுக்கு வருகை தந்து வீடு வேண்டும் என கேட்கின்றமை பாரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

மலையகத்தில் மேலும் அபிவிருத்திகள் முன்னெடுக்கும் மக்களின் ஆதரவு தேவை. நான் எதை செய்தாலும் அதை விமர்சனம் செய்ய ஒரு கூட்டம் ஒன்று உள்ளது.

இவ்வாறான விமர்சனங்களை நான் கண்டுக்கொள்வதில்லை. 80 வருடம் அரசியல் செய்தவர்கள் என்ன செய்தார்கள். நுவரெலியா நகருக்கு அருகில் ஏழு பேர்ச் நிலம் பெற்று கொடுக்க முடியாத தலைவர்கள் இருந்தார்கள். கொஞ்சம் காலம் போனாலும் இன்று நான் சொன்னதை செய்துள்ளேன்.

வீடுகள் அமைப்பதற்காக தேயிலை மரத்தை பிடிங்கினால் இதை பாராளுமன்றத்தில் கருப்பாக ஒருவர் வீ .பி.தேயிலையை பிடுங்குவதாக காட்டி கொடுக்கிறார். நான் என்ன செய்வது.

தேயிலை பிடுங்காமல் நமக்கு வீடு கட்ட முடியுமா மாறாக தேயிலையை பிடிங்கிதான் வீடுகட்ட முடியும் . இதை செய்யப்போனால் பாராளுமன்றத்தில் எதிராக கதைக்கின்றார். என்னை பார்த்து சொல்ல முடியாத அவர். அமைச்சர் நவீனிடம் இவ்வாறு சொல்கிறார்.

நான் லயத்தில் பிறந்ததால் என் மக்கள் லயத்தில் வாழக்கூடாது, கிராமத்தில் வாழ வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்தது. அந்தவகையில் நுவரெலியா நகருக்கு அருகில் ஸ்கிராப் தோட்ட மக்கள் கிராமத்தில் வாழவேண்டும் என்பதற்காகவே இந்த ஐம்பது வீடுகள் கட்டப்படவுள்ளது.

தோட்டம் என்ற சொல் ஒழிக்கப்பட வேண்டும். அதற்காகவே எனது அமைச்சையும் புதிய கிராமங்கள் அமைச்சாக மாற்றினோம். ஐந்து வருட காலத்தில் உரிமை தொடர்பான அபிவிருத்தி பணிகளே முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தேர்தல் காலம் என்பதால் சிலர் பொய் சொல்லுவார்கள். ஒரு பொய்யாவது சொல்லி உங்கள் வாக்குகளை பெற்று செல்வார்கள்.

எதிர் காலத்தில் மூன்று தேர்தல்கள் இடம்பெறவுள்ளது. முதலாவது ஜனாதிபதி தேர்தல், பின் பாராளுமன்ற தேர்தல், அதன் பின் மாகாண சபை தேர்தல் இடம்பெறவுள்ளது. நாம் ஐ.தே.கட்சி தலைவருக்கு கூறியுள்ளோம். வெற்றி பெறும் வேட்பாளரை வேட்பாளராக நிறுத்தும் படி. வெற்றியீட்டும் வேட்பாளரை நிறுத்தினால் நாம் ஆதரவை வழங்குவோம்.

மறுபடியும் இந்த அரசு ஆட்சிக்கு வந்தால் மேலும் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படும் திகாம்பரம் சொன்னதை செய்வார் யாருக்கும் பயந்து கொண்டு அரசியல் செய்யவில்லை. மக்களை காப்பாற்ற கூடிய தன்மை எனக்கு உள்ளது. சிலர் இருந்தால் மாத்திரம் இம்மக்களை காப்பாற்ற முடியுமென சொன்னார்கள். கடந்த ஐந்தாண்டில் பொலிஸார் உங்களிடம் நெருங்கினார்களா இல்லை. நான் பார்த்து கொண்டேன்.

திகாம்பரம் வீதியில் அமரமாட்டார் என்ற அவர், அனைவருக்கும் வீடுகள் அமைத்து கொடுக்க எதிர்காலத்தில் நடவடிக்கைகளை முன்னெடுப்பேன் சந்தோஷமாக இருங்கள் என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

Comments (0)
Add Comment