திகாம்பரம் பாடசாலைகளுக்குச் செல்வது சிலருக்கு அச்சம்!! (படங்கள்)

நான் பாடசாலைகளுக்கு தேவையான நிதிகளை ஒதுக்கிக் கொடுப்பதில் பின்வாங்கியதில்லை. அட்டன் கல்வி வலயத்தைச் சேர்ந்த போடைஸ் த.ம.வி., கில்லார்னி த,ம.வி. கவரவில த.ம.வி பொஸ்கோ கல்லூரி ஆகியவற்றுக்கு கோடிக் கணக்கான நிதியை ஒதுக்கிக் கொடுத்திருந்தேன். ஆனால், மாகாண அதிகாரத்தை வைத்துக் கொண்டு அந்த நிதியைப் பயன்படுத்த முடியாமல் செய்து விட்டார்கள். அதிபர் ஆசிரியர்களை பயமுறுத்திய காரணத்தால் அவர்களும் பயந்து விட்டார்கள். திகாம்பரம் பாடசாலைகளுக்குச் செல்வது சிலருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி. திகாம்பரம் தெரிவித்தார்.

கல்வியமைச்சின் “அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” வேலைத் திட்டத்தின் கீழ் நானுஓயா நாவலர் கல்லூரியில் 60 இலட்ச ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நான்கு வகுப்பறைகளைக் கொண்ட ஆரம்ப பிரிவுக்கான வள நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பி. திகாம்பரம், மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள் எம். உதயகுமார், எம். ராம் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர் அமரசிரி பியதாஸ, மேலதிகக் கல்விப் பணிப்பாளர் எஸ். மோகன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

அமைச்சர் திகாம்பரம் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இன்று இந்தப் பாடசாலைக்கு கணனிகள் தேவை என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. விரைவில் மூன்று கணணிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளேன்.அதேபோல், தேவையான வளங்களைப் பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நுவரெலியா மாவட்டத்தில் தேசிய பாடசாலைகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொண்ட போது சில அரசியல்வாதிகள் அதிபர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு தேசியப் பாடசாலைகள் தேவை இல்லை என்று கூறி விட்டார்கள். அவ்வாறு தேசிய பாடசாலைகள் கிடைத்திருந்தால் நாம் மாகாண அமைச்சை எதிர்நோக்காமல் மத்திய அரசாங்கத்தின் உதவியை நேரடியாகப் பெற்றுக் கொள்ளக் கூடிதாக இருந்திருக்கும். அவ்வாறு தேசியப் பாடசாலை தேவையில்லை என்று கூறிய அதிபர்கள் ஓய்வு பெற்று விட்டாலும் அவர்கள் சமூகத்துக்கு துரோகம் செய்தவர்களாகவே இருக்கின்றார்கள். ஹைலண்ட்ஸ் கலலூரி போன்றவற்றில் சிறந்த பெறுபேறுகள் கிடைப்பது சாதனை அல்ல. இத்தகைய பின்தங்கிய பாடசாலைகளில் கிடைக்கும் பெறுபேறுகள் தான் உணமையான சாதனை ஆகும்.

நான் சமூகம சாந்த அரசியலையே முன்னெடுத்து வருகின்றேன். எமது மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் தனி வீட்டுத் திட்டம், அதற்கான காணி அவற்றுக்கான உறுதிப் பத்திரங்கள், பிரதேச சபைகள் அதிகரிப்பு, பிரதேச செயலகங்கள், மலையகத்துக்கான தனியான அபிவிருத்தி அதிகார சபை என பல்வேறு வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வந்தாலும் என்மீது விமர்சனம் செய்கின்றவர்கள் இல்லாமல் இல்லை. எனினும் அவற்றை ஒரு பொருட்டாகக் கொள்ளாமல் எனது சேவைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றேன்.

ஆசிரிய சமூகம் தன்மானம் மிக்க சமூகமாக திகழ வேண்டும். அவர்கள் பின்னால் அரசியல்வாதிகள் வர வேண்டுமேயொழிய அரசியலாவதிகள் பின்னால் படித்தவர்கள் செல்லக் கூடாது. கண்டவர்களுக்கு எல்லாம் “சேர்” பட்டம் கொடுத்து தமது மதிப்பை குறைத்துக் கொள்ளக் கூடாது. அதிபர், ஆசிரியர்களை அரசியல்வாதிகள் தேடி வருகின்ற நிலைமையை உருவாக்க வேண்டும். அந்தப் பொறுப்பை தகுந்த முறையில் பேணிப் பாதுகாக்க வேண்டும்.

இந்திய அரசாங்கம் 40 பஸ்களை யார் வசமாக கொடுத்திருந்தது. எமது மாணவர்களின் நலன்கருதி வழங்கப்பட்ட பஸ்களுக்கு என்ன நேர்ந்தது என்று தெரியவில்லை. அவற்றை விற்று விட்டதாகக் கூறப்படுகின்றது. இந்திய அரசாங்கம் எதனையும் இலவசமாகக் கொடுக்கவில்லை. எமது மக்களுக்கு கிடைத்த் வரப்பிரசதங்களை விற்று ஏப்பமிட நாம் இடம் கொட்க்கக் கூடாது

அட்டன் பூல்பேங்க் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் மாதாந்தம் 1500 ரூபா வசூல் செய்ப்பட்டு வந்துள்ளது. அவர்களுக்கு இலவசமாக கற்கை நெறிகளை மேற்கொள்ள அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் உதவிகளை வளங்கி வரும் நேரத்தில் அவர்களின் ஏழ்மையையும் பொருட்படுத்தாது அவ்வாறு வசூல் செய்வது முறையற்ற செய்யல என்று கூறி நான் பதவிக்கு வந்த பிறகு வசூல் ராஜாக்களின் நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளேன்.

மலையகத்தில் சகல வசதிகளையும் கொண்ட ரோயல் கல்லூரி ஒன்றை அமைப்பதுவே எனது குறிக்கோள் ஆகும். இந்த அரசாங்கத்தின் காலத்தில் முடியாவிட்டாலும் நிச்சயம் அமைத்துக் கொடுக்கும் முயற்சியை கிவிட மாட்டேன். எமது மத்தியில் ஒற்றுமையும், சமூக உணர்வும் இருந்தால் நாம் நிச்சியமாக இலக்கை அடைந்து விட முடியும் என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

Comments (0)
Add Comment