மத்திய அரசு எப்போது கண்களை திறக்கும்? – பிரியங்கா பாய்ச்சல்..!!

இந்திய வாகன சந்தையின் அனைத்துப் பிரிவுகளும் கடந்த மாதம் கடும் சரிவை சந்தித்துள்ளன.

இதுதொடர்பாக இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த 2018-ம் ஆண்டு நிலவரத்துடன் ஒப்பிடுகையில், கடந்த மாதம் கார்கள் விற்பனை மிக அதிகமாக சரிந்துள்ளது. 2018-ல் 1 லட்சத்து 96 ஆயிரத்து 847 கார்கள் விற்ற நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 1 லட்சத்து 15 ஆயிரத்து 957 கார்களே விற்பனையாகி உள்ளன. இது 41.09 சதவீதம் வீழ்ச்சியாகும்.

இரு சக்கர வாகனங்கள் விற்பனை ஆகஸ்டில் 22.24 சதவீதமும், மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை 6.93 சதவீதமும் சரிந்துள்ளது. மொத்தத்தில் பயணிகள் வாகனங்கள் விற்பனை 31.57 சதவீதம் வீழ்ச்சியை எட்டியுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விற்பனை வீழ்ச்சி ஏற்பட்டு இருப்பதாக இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் கூறியுள்ளது.

இந்த நிலையில் வாகன விற்பனை வீழ்ச்சியால் இந்தியாவின் பொருளாதார சீர்கேடு மேலும் அதிகரித்து இருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு வருமாறு:-

மந்த நிலை காரணமாக இந்திய பொருளாதாரம் படுபாதாளத்துக்கு சென்று விட்டது. இதனால் லட்சக்கணக்கான இந்தியர்களின் தலைக்கு மேல் கத்தி தொங்கிக்கொண்டிருக்கும் அபாயகரமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

வாகனங்கள் விற்பனையில் ஏற்பட்டிருக்கும் சரிவு, அதன் உற்பத்தியில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையை உருவாக்கி இருக்கிறது. அது மட்டுமின்றி வாகன சந்தையில் நம்பிக்கை குறைவையும் ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் மத்திய அரசு கண்டும், காணாததும் போல உள்ளது. அரசு எப்போது கண்களைத் திறக்கும்?

இவ்வாறு பிரியங்கா டுவிட்டரில் கூறியுள்ளார்

Comments (0)
Add Comment