‘ஸ்விகி கோ’ சேவை பெயரில் பெண்ணிடம் ரூ.95 ஆயிரம் மோசடி..!!

உணவினை ஆர்டர் செய்தால் நாம் இருக்கும் இடத்திற்கே கொண்டு வந்து சேர்க்கும் நிறுவனம்தான் ஸ்விகி. இந்த நிறுவனம் சமீபத்தில் ‘ஸ்விகி கோ’ எனும் வாடிக்கையாளர் சேவையை தொடங்கியது.

இதன் மூலம் ஒரு இடத்திலிருந்து வாடிக்கையாளர்களின் பொருட்களை மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல முடியும். இந்த சேவை தொடங்கிய நாளிலேயே பெண் ஒருவர் ஏமாற்றப்பட்டுள்ளார்.

பெங்களூருவைச் சேர்ந்தவர் அபர்ணா தாக்கர் சூரி(47). இவர் கைப்பேசியை விற்க ஓ.எல்.எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை கண்டு பிலால் என்பவர் அபர்ணாவை தொடர்பு கொண்டுள்ளார். இந்த கைப்பேசியை பிலாலிடம் ஒப்படைக்க ஸ்விகி கோவினை நாடியுள்ளார் அபர்ணா.

இந்த சேவைமைய எண்ணை தேடுபொறியில் தேடி எடுத்துள்ளார். அவருக்கு கிடைத்த அந்த கைப்பேசிக்கு தொடர்பு கொண்டுள்ளார். அழைப்பை எடுத்த அந்த நபர், உங்கள் போனுக்கு ஒரு லிங்க் வரும். அதில் கேட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்யுங்கள் என கூறியுள்ளார்.

அதில் அபர்ணாவின் வங்கி கணக்கு விவரங்களும் கேட்கப்பட்டுள்ளது. இந்த லிங்கினை பூர்த்தி செய்து அனுப்பிய சிறிது நேரத்திலேயே, அபர்ணாவின் கணக்கில் இருந்து ரூ.96 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பெண் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

இது குறித்து பேசிய ஸ்விகி நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘அபர்ணா ஸ்விகியின் சேவை மையத்தை தொடர்பு கொள்ளவில்லை. வேறு ஏதோ ஒரு எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளார். அவரிடம் முழு விவரங்களை வாங்க எங்கள் தரப்பில் முயற்சித்தோம்.

வேறு எண்ணை அவர் பயன்படுத்தியதால் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஸ்விகி நிறுவனம் எப்போதும் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு விவரங்களை கேட்பதில்லை என்பதை மீண்டும் கூறிக் கொள்கிறேன்’ என கூறியுள்ளார்.

Comments (0)
Add Comment