தேசத்துரோக வழக்கு: நவம்பர் 5-ம் தேதி வரை ஷேலா ரஷிதை கைது செய்ய டெல்லி கோர்ட் தடை..!!

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த மாதம் 5-ந்தேதி ரத்து செய்தது. அதோடு மாநில அங்கீகாரத்தை நீக்கும் வகையில் 2 யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது.

இதையொட்டி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு போடப்பட்டது. மாநில முழுவதும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன.

இந்த நிலையில் காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், ராணுவத்தினர் அத்துமீறி சோதனையிடுவதாகவும் விசாரணை என்ற பெயரில் ஆண்கள் அலைக்கழிக்கப்படுவதாகவும், சமூக ஆர்வலரும், காஷ்மீர் மக்கள் இயக்க நிர்வாகியுமான ஷேலா ரஷீத் குற்றம் சாட்டியுள்ளார். மக்கள் அதிக அளவில் துன்புறுத்தலுக்கு ஆளாவதாகவும் புகார் கூறினார். இதை ராணுவம் மறுத்து இருந்தது.

டெல்லி ஜெ.என்.யூ. பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் துணை தலைவரான ஷேலா ரஷீத், அடிப்படை ஆதாரமின்றி ராணுவத்தின் நன்மதிப்பை சீர்குலைக்கும் வகையில் பொய்யான தகவல்களை பரப்புகிறார் என்று அவர் மீது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஸ்ரீவத்சா டெல்லி போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து ஷேலா ரஷீத் மீது தேச துரோகம், கலவரத்தை தூண்டுவது, நாட்டின் அமைதியை சீர்குலைப்பது உள்பட பல்வேறு பிரிவுகளில் டெல்லி போலீசின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பவன் குமார் ஜெயின் முன்னர் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அரசுதரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஷேலா ரஷித் மீது ராணுவம் தரப்பில் இருந்து இதுவரை எந்த புகாரும் வரவில்லை. எனவே, இதுதொடர்பாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க 6 வாரம் அவகாசம் தேவை என்று கேட்டுக் கொண்டார்.

போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க தனது கட்சிக்காரர் தயாராக இருப்பதாக ஷேலா ரஷிதின் வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கவனித்த நீதிபதி மறுவிசாரணையை நவம்பர் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக தெரிவித்தார். அதுவரை ஷேலா ரஷிதை போலீசார் கைது செய்ய கூடாது. எனினும், விசாரணை அதிகாரி அழைக்கும்போது அவர் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Comments (0)
Add Comment