ஓடும் ஜீப்பில் அசந்து தூங்கிய தாய் – மடியில் இருந்து தவறி விழுந்த ஒரு வயது குழந்தை..!!

கேரள மாநிலம் மூணாறை அடுத்த அடிமாலி, காம்பிளி கண்டம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி சத்யபாமா.

சதீஷ்-சத்யபாமா தம்பதிக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு மொட்டை போட சதீஷ்-சத்யபாமா மற்றும் உறவினர்கள் கடந்த 8-ந்தேதி காம்பிளி கண்டத்தில் இருந்து ஒரு ஜீப்பில் பழனி முருகன் கோவிலுக்கு சென்றனர்.

அங்கு சாமி தரிசனம் முடிந்து குழந்தைக்கு மொட்டை போட்டனர். இரவில் அனைவரும் ஜீப்பில் ஊர் திரும்பினர்.

பழனியில் இருந்து காட்டுப்பாதை வழியாக ஜீப் சென்று கொண்டிருந்தது. ஜீப்பின் ஒரத்தில் உள்ள இருக்கையில் சத்யபாமா அமர்ந்திருந்தார். மடியில் குழந்தை இருந்தது. பயண களைப்பில் சத்யபாமா அசந்து தூங்கி விட்டார்.

ஜீப் இரவு 9.42 மணிக்கு மூணாறு-மரையாறு காட்டுப்பாதையில் உள்ள சோதனை சாவடியை தாண்டிச் சென்றது.

ஜீப் சோதனை சாவடியை தாண்டி சென்றதை வன ஊழியர்கள் கண்காணிப்பு காமிரா வழியாக பார்த்துக்கொண்டிருந்தனர். ஜீப் சென்ற சில நிமிடங்களில் சோதனை சாவடிக்கு அந்தப்புறத்தில் இருந்து ஒரு உருவம் சாலையை கடந்து தவழ்ந்து வருவதை வன ஊழியர்கள் கண்டனர்.

4 மீட்டர் தூரம் கடந்து கண்காணிப்பு காமிரா அருகே வந்த பின்னர்தான் சாலையில் தவழ்ந்து வருவது ஒரு குழந்தை என்பதை வன ஊழியர்கள் கண்டுபிடித்தனர்.

அதிர்ச்சி அடைந்த வன ஊழியர்கள் விரைந்து சென்று அந்த குழந்தையை மீட்டனர். குழந்தையின் முன் நெற்றியில் லேசான காயமும், உடலில் சிராய்ப்பும் இருந்தது.

வன ஊழியர்கள் இந்த தகவலை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.

மேலும் மூணாறு வன விலங்கு சரணாலய காவலர் லட்சுமி விரைந்து வந்து குழந்தையை மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். இந்த தகவலை அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கும் தெரிவித்தார்.

இதற்கிடையே சதீஷ்-சத்யபாமா குடும்பத்தினர் வீடு போய் சேர்ந்தனர். அங்கு போன பின்புதான் குழந்தை இல்லாததை உணர்ந்தனர். உடனே அவர்கள் அலறியடித்து அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தனர்.

போலீஸ் நிலையம் சென்றதும், அவர்களின் குழந்தை மூணாறு-மரையாறு சோதனை சாவடி அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தகவலை போலீசார் தெரிவித்தனர். இதைக்கேட்டதும், சதீஷ் குடும்பத்தினர் மீண்டும் மூணாறு வந்து குழந்தையை நேற்று அதிகாலை 1.30 மணிக்கு பெற்றுக் கொண்டனர்.

குழந்தை விழுந்த பகுதி காட்டு விலங்குகள் அதிகம் நடமாடும் இடமாகும். குறிப்பாக காட்டு யானைகளும், வி‌ஷ பாம்புகளும் அடிக்கடி சாலையை கடந்து செல்லும். இந்த இடத்தில்தான் குழந்தை விழுந்துள்ளது.

சாலையின் ஒரு புறத்தில் விழுந்த குழந்தை மறுபுறத்திற்கு தவழ்ந்து வந்துள்ளது. இதற்கு இடைப்பட்ட தூரம் சுமார் 4 மீட்டர் இருக்கும். அந்த நேரத்தில் வாகனங்களோ, காட்டு விலங்குகளோ சாலையில் வரவில்லை. எதேச்சையாக வன ஊழியர்கள் கண்காணிப்பு காமிராவை பார்த்ததால் குழந்தை மீட்கப்பட்டது. அதிர்ஷ்டக்கார குழந்தை என்று குழந்தையை பாராட்டிய வன ஊழியர்கள் அஜாக்கிரதையாக குழந்தையை சாலையில் விட்டு சென்ற பெற்றோரை எச்சரித்தும், அறிவுரை கூறியும் அனுப்பி வைத்தனர்.

Comments (0)
Add Comment