முப்படைகளை நவீனப்படுத்த ரூ.9¼ லட்சம் கோடி செலவிடுகிறது இந்தியா..!!

இந்தியாவின் அண்டை நாடுகளான சீனாவும், பாகிஸ்தானும் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் விடுத்து வருகின்றன. பாகிஸ்தான் ராணுவம், எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று மிரட்டல் விடும் வகையில் பேசி வருகிறது.

சீனா, எல்லை பகுதிகளை ஆக்கிரமிக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நாடுகளின் சவால்களை முறியடிப்பதற்காக, இந்தியா தனது படைபலத்தை பெருக்க திட்டமிட்டுள்ளது. அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் 130 பில்லியன் டாலர் (ரூ.9 லட்சத்து 36 ஆயிரம் கோடி) செலவிட உள்ளது. இதற்கான செயல் திட்டத்தை இறுதி செய்துள்ளது.

மத்திய அரசின் அதிகாரபூர்வ ஆவணங்களில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு வட்டாரங்களும் இதை உறுதி செய்துள்ளன. அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:-

இந்தியாவை ராணுவ வல்லரசாக உயர்த்தி காட்டுவதே இதன் நோக்கம். இந்தியாவின் போர்த்திறனை வலுப்படுத்தி, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் அச்சுறுத்தல்களை முறியடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலில், நிலுவையில் உள்ள ஆயுத தளவாட கொள்முதலை விரைவுபடுத்த முன்னுரிமை அளிக்கப்படும். 2,600 தரைப்படை போர் வாகனங்கள், 1,700 போர் வாகனங்கள், விமானப்படைக்கு 110 போர் விமானங்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்யும் திட்டங்கள் விரைவுபடுத்தப்படும்.

மேலும், ஏவுகணைகள், விமான பாதுகாப்பு ஏவுகணைகள், போர் விமானங்கள், நீர்மூழ்கி கப்பல்கள், போர் கப்பல்கள், ஆளில்லா விமானங்கள், கண்காணிப்பு சாதனங்கள் உள்ளிட்ட ஆயுத தளவாடங்களை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

கடந்த 10 அல்லது 15 ஆண்டுகளில், ராணுவத்துக்கு இந்தியா செலவிட்ட தொகை, மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில், ஒரே அளவாகவே இருந் தது. ஆனால், சீனா, தனது ராணுவ பட்ஜெட்டை கணிசமாக அதிகரித்துள்ளது.

ஆகவே, அதற்கேற்ப இந்தியாவும் செலவை அதிகரித்து முப்படைகளை நவீனப்படுத்த முடிவு செய்துள்ளது. இதன்மூலம், முப்படைகளின் போர்த்திறன் அதிகரிக்கும். எதிரி நாடுகளின் அச்சுறுத்தல் உறுதியுடன் முறியடிக்கப்படும்.

முப்படைகளுக்கும் ஒரே தலைவர் நியமிக்கப்படுவார் என்று பிரதமர் மோடி கடந்த மாதம் அறிவித்தார். அந்த தலைவர்தான், இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பார்.

கடற்படைக்கு 200 கப்பல்கள், 500 விமானங்கள், 24 நீர்மூழ்கி கப்பல்கள் ஆகியவை வாங்கும் திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-5 ஏவுகணை, நாட்டின் வான் பாதுகாப்பை பலப்படுத்த பயன்படும். இந்த ஏவுகணை, 5 ஆயிரம் கி.மீ. தூரம் பாய்ந்து சென்று இலக்கை தாக்கவல்லது. டெல்லி, மும்பை உள்ளிட்ட பெரிய நகரங்களின் வான்பகுதியை வலுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Comments (0)
Add Comment