16 குழந்தைகளை பெற்றெடுத்து 17-வது பிரசவத்துக்கு தயாரான பெண்..!!

மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த முதலில் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்ற பிரசாரம் முழங்கியது. தற்போதைக்கு, ஒரு குழந்தையே போதும் என்று வலியுறுத்தப்படுகிறது. பிரதமர் மோடியும் மக்கள் தொகை பெருக்கம் பற்றி கவலையை வெளிப்படுத்தி வருகிறார்.

ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் சில தம்பதியர் பல குழந்தைகளை பெற்றெடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதில், மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் 16 குழந்தைகளை பெற்றெடுத்து விட்டு தற்போது 17-வது பிரசவத்திற்காக தயாராகி விட்டார்.

பீட் மாவட்டம் மஜால்காவ் தாலுகா கேசபுரி கிராமத்தை சேர்ந்த பெண் லங்காபாய் காரத். அங்குள்ள மாநகராட்சி ஆஸ்பத்திரிக்கு மருத்துவ பரிசோதனைக்காக வந்திருந்தபோது தான், அவர் 17-வது குழந்தையை பிரசவிக்க இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளிச்சத்துக்கு வந்தது.

லங்காபாய் காரத் முதன் முதலில் கர்ப்பமாகிய போது ஆஸ்பத்திரிக்கு வந்து முதல் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அதன்பின்னர் பலமுறை கர்ப்பமாகிய அவர் ஒருமுறை கூட ஆஸ்பத்திரி பக்கம் தலைகாட்டவில்லை. அவர் அடுத்தடுத்து 15 பிரசவத்தையும் வீட்டிலேயே முடித்து விட்டார். இதனால் அவரது பிரசவ கதை பற்றி வெளி உலகிற்கு தெரியாமல் இருந்தது.

இந்தநிலையில் 17-வது குழந்தையை பெற்றெடுக்க தயாரான அந்த பெண் வயிறு வலி காரணமாக ஆஸ்பத்திரிக்கு வந்ததாக மாநகராட்சி ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவர் தெரிவித்தார். 7 மாத கர்ப்பிணியான அந்த பெண்ணும், வயிற்றில் வளரும் சிசுவும் நலமாக இருப்பதாகவும் அந்த டாக்டர் தெரிவித்தார்.

38 வயதான லங்காபாய் காரத்துக்கு தற்போது 11 குழந்தைகள் உள்ளனர். மற்ற 5 குழந்தைகள் இறந்து விட்டதாக தெரியவந்துள்ளது. அவர் இதுவரை 20 தடவை கர்ப்பமடைந்ததும், 3 தடவை கருச்சிதைவு ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது.

16 பெற்று பெருவாழ்வு வாழ்க… என்று திருமணத்தின்போது பெரியோர்கள் ஆசி வழங்குவது உண்டு. ஆனால் லங்காபாய் காரத் 16 செல்வத்துக்கு பதில் 16 குழந்தைகளை பெற்றெடுத்து 17-வது பிரசவத்துக்காக காத்திருக்கிறார். இந்த தடவை பிரசவத்துக்காக நிச்சயம் ஆஸ்பத்திரியில் சேர வேண்டும் என்று டாக்டர்கள் அந்த பெண்ணுக்கு அறிவுரை வழங்கி உள்ளனர்.

Comments (0)
Add Comment