வடக்கு ஆப்கானிஸ்தானில் ராணுவம் அதிரடி தாக்குதல்- 30 தலிபான்கள் பலி..!!

ஆப்கானிஸ்தானில் குறிப்பிட்ட சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தலிபான் பயங்கரவாத அமைப்பு, அமைதியை சீர்குலைக்கும் வகையில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அவர்களுக்கு அரசுப் படைகள் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றன.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள் ளதக்கார் மாகாணம், கவாஜா பகாவுதீன் மாவட்ட புறநகர்ப் பகுதியில் தலிபான்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்த ராணுவம், நேற்று இரவு அதிரடியாக தாக்குதல் நடத்தியது. சிறுரக துப்பாக்கிகள் மற்றும் ராக்கெட் மூலம் ஏவப்படும் குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில், சுமார் 30 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாக ராணுவ அதிகாரி ஒருவர் கூறி உள்ளார். ராணுவத்திடம் இருந்து தலிபான்கள் கைப்பற்றி வைத்திருந்த மூன்று வாகனங்களும் இந்த தாக்குதலில் சிதைந்ததாக தெரிவித்தார்.

தக்கார் மாகாணத்தில் இந்த மாத துவக்கத்தில் இருந்தே தலிபான்களுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இன்று தாக்குதல் நடந்த கவாஜா பகாவுதீன் மாவட்டத்தை ஒட்டியுள்ள யாங்கி காலா மற்றும் தர்காத் மாவட்டங்கள் தலிபான்களின் கட்டுப்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment