அரூர் அருகே கூட்டாற்றில் மூழ்கி வாலிபர் பலி..!!

திருவண்ணாமலை மாவட்டம், இளங்குனியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 27). கோவையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு தர்மபுரி மாவட்டம், நரிப்பள்ளியை அடுத்த பெரியப்பட்டி பெருமாள் கோவிலில் இன்று (11-ந் தேதி) அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடைபெற இருந்தது.

இந்த திருமணத்திற்காக அவருடன் பணிபுரியும் ஈரோட்டை சேர்ந்த மனோஜ்குமார் (21), நாகேந்திரன் (26), சந்துரு (21), மகேந்திரன், கார்த்திகேயன் (35) ஆகிய 5 பேரும் நேற்று மாலை பெரியப்பட்டி பெருமாள் கோவிலுக்கு வந்தனர். பின்னர், அங்குள்ள கூட்டாற்றில் அவர்கள் குளித்தனர். அப்போது ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்ற மனோஜ்குமார், சேற்றில் சிக்கி நீரில் மூழ்கி மூச்சு திணறி உயிரிழந்தார்.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், அங்கு வந்த கோட்டப்பட்டி போலீசார் மற்றும் அரூர் தீயணைப்பு துறையினர் மனோஜ்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஆற்றில் இருந்து மனோஜ்குமாரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments (0)
Add Comment