டெல்லியில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சோனியா ஆலோசனை..!!

டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று தலைவர் சோனியா காந்தி தலைமையில் அனைத்து மாநில தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற மாநில தலைவர்கள் சட்டசபை காங்கிரஸ் தலைவர்கள், காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

அதன்படி இன்று காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் சோனியா காந்தி தலைமையில் நடந்தது. காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் கூட்டம் இதுவாகும்.

சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்

இக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், குலாம்நபி ஆசாத், பிரியங்கா காந்தி, அகமது பட்டேல், ஏ.கே. அந்தோணி, வேணுகோபால், மல்லிகார்ஜுனே கார்கே, ஜோதிர் ஆதித்யா சிந்தியா, மாநில தலைவர்கள், பொதுச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். முதல்வர் அமரிந்தர் சிங், (பஞ்சாப்), அசோக்கெலாட் (ராஜஸ்தான்) நாராயணசாமி (புதுவை) ஆகியோலும் பங்கேற்றனர்.

கூட்டத்தில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் அனைத்து மாநிலங்களிலும் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டு நாடு முழுவதும் மாவட்டங்கள் தோறும் ஊக்குவிப்பாளர்கள் என ஒரு அணியை உருவாக்கி பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் அனைத்து மாநில தலைமை நிர்வாகிகளும், பயிற்சி அளிக்கும் தலைவர்களை கண்டறிய கேட்டு கொள்ளப்பட்டது.

மகாராஷ்டிரா, அரியானா, ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடப்பதை யொட்டி அம்மாநிலங்களில் நிலவரங்கள் முன்னேற்பாட்டு பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

பா.ஜனதாவின் அரசின் தோல்விகளை மக்களிடம் கொண்டு செல்வது குறித்து சோனியா ஆலோசனை வழங்கியதாக தெரிகிறது.

மாநில தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை. அவர் கலந்து கொள்ளாததற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. இதேபோல் மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பெகல் ஆகியோரும் கலந்து கொள்ளவில்லை.

Comments (0)
Add Comment