ஐ.தே.மு. கூட்டணி கட்சிகளின் ஆதரவை முதலில் பெறுங்கள் – பிரதமர் ரணில்!!

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பா ளராக களமிறங்குவதற்கு முன்னர் கூட்டணிக் கட்சிகள் மற்றும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவை தெரிவிக்க இணக்கம் தெரிவித்துள்ள தமிழ், முஸ் லிம் கட்சிகளின் ஆதரவை பெற்று வாருங்கள் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இந்தவார இறுதிக்குள் இறுதித்தீர்வு ஒன்றினை எட்ட பிரதமர் ரணில் – அமைச்சர் சஜித் பிரேமதாச இடையிலான பேச்சுவர்த்தையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றது. இரவு 9.40 தொடக்கம் 11.30 மணிவரையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணியாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவது தொடர்பிலும் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற விடயம் குறித்தும் கலந்துரையாடப்பட்டிருந்தது.

நேற்று முன்தினம் பிற்பகல் 5 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெற்றும் என ஆரம்பத்தில் கூறப்பட்ட போதிலும் இரவு 9.40 மணியளவிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றது. கடந்த சந்திப்பில் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் பிரதமருடன் கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்த போதிலும் கூட நேற்று முன்தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அவரது சார்பில் அமைச்சர் ராஜித சேனாரத்னவும் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் அமைச்சர்களான கபீர் ஹசீம், மலிக் சமரவிக்கிரம, ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரும் கலந்துகொண்டனர். சபாநாயகர் கரு ஜெயசூரிய கலந்துகொள்வார் என கூறப்பட்ட போதிலும் அவர் இந்தச் சந்திப்பில் பங்கேற்கவில்லை. அமைச்சர் மங்கள சமரவீர இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை.

இந்தச் சந்திப்பின் ஆரம்பத்தில் ஜனாதிபதி வேட்பாளர் பிரச்சினை குறித்து இரண்டுபேரும் கருத்துக்களை பரிமாற்றிக்கொண்டனர். இதில் ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பான்மை ஆதரவும் மக்களின் ஆதரவும் தனக்கு கிடைத்துள்ளதை சுட்டிக்காட்டிய பிரதித் தலைவர் சஜித், தான் ஒருபோதிலும் கட்சியின் யாப்பினை மீறிய எந்த நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை என்பதை எடுத்துக்கூறியுள்ளார்.

தான் கட்சிக்குள் வீணான குழப்பங்களை ஏற்படுத்தவில்லை எனவும் கட்சியையும் அரசாங்கத்தையும் தக்கவைக்க வேண்டும் என்ற நோக்கமே தனக்கு இருப்பதாக அவர் பிரதமரிடம் எடுத்துக்கூறியுள்ளார். ஊடகங்கள் முன்னெடுக்கும் பிரச்சாரங்கள் குறித்தும் சுட்டிக்காட்டிய அவர் இரகசியமாக ஒப்பந்தங்களை செய்துகொண்டு தான் அரசியல் செய்ய வேண்டிய எந்த அவசியமும் இல்லை என்ற காரணிகளை சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது கருத்துக்களை முன்வைத்த பிரதமர் , கட்சியாக எடுக்கும் தீர்மானங்களுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும். இதில் எவரும் நினைத்தால் போல் செயற்பட முடியாது. கட்சிக்குள் ஆதரவு இருக்குமானால் அதனை கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பேசி தீர்வு காண முடியும். வெளியில் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கக்கூடாது. மேலும் நீங்கள் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படுவதென்றால் கட்சியின் சகல தரப்பின் அல்லது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டும். ஆகவே அதற்கான நடவடிக்கைகளை எடுங்கள். அது மட்டுமல்லாது ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகள் மற்றும் தமிழ் முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பதை அறிந்துகொள்ளவும் புதிதாக இணைய இணக்கம் தெரிவிக்கும் கட்சிகள், வடக்கு, கிழக்கின் பிரதிநிதிகள் ஆகியோரின் இணக்கத்தை பெற்றுகொண்டால் உரிய தீர்மானம் எடுக்க முடியும் என அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம் அறிவித்துள்ளார்.

ஆகவே அடுத்து வரும் சில தினங்களுக்குள் சகல கட்சிகளிடையும் சந்தித்து அவர்களின் நிலைப்பாட்டை அறிந்துகொண்டு அறிவிக்க அமைச்சர் சஜித் பிரேமதாச இணக்கம் தெரிவித்துள்ளார். அதற்கு அமைய தமிழ், முஸ்லிம் கட்சிகள், ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்துள்ள சிங்கள கட்சிகள் ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளது.

அத்துடன் கூட்டணி அமைக்கும் விடயங்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளது. எனினும் கடந்த சந்திப்புகளில் பிரதமர் தரப்புடன் இருந்த சிரேஷ்ட உறுப்பினர்கள் நேற்று முன்தினம் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொள்ளாத நிலையில் கூட்டணி விடயங்கள் ஆழமாக ஆராயப்படவில்லை என்றே அறிய முடிகின்றது.

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானிப்பதற்கு இருவரும் இணங்கியதால் சந்திப்பில் உறுதியாக யார் ஜனாதிபதி வேட்பாளர் என்ற விடயங்கள் தீர்மானிக்கப்படவில்லை. அத்துடன் இந்த விடயம் குறித்து வார இறுதிக்குள் இறுதித் தீர்மானம் ஒன்றினை எடுக்கும் வகையில் மீண்டும் கூடி பேச்சுவார்த்தை நடத்தவும் இணங்கியுள்ளனர். அதற்கமைய எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் மீண்டும் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் மத்தியில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றவுள்ளன.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

Comments (0)
Add Comment