பெண் குழந்தைகளை பாதிக்கும் தண்டுவட நோய்!! (மருத்துவம்)

மூளையின் பின் கீழ் பகுதியில் உள்ள ஆக்ஸிபிட்டல்(Occipital) எலும்பில் தொடங்கி இடுப்பின் கீழ் பகுதி வரை நீண்ட நரம்பு திசுக்களின் தொகுப்பே தண்டுவடம். இதில் சிறிய அளவில் பாதிப்பு ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்புகளை உண்டாக்கி விடும். முதுகு தண்டுவட பக்கவாட்டில் ஆங்கில எழுத்து S போல வளைந்திருக்கும் பாதிப்பை ஸ்கோலியாசிஸ்(Scoliosis) என்கிறது மருத்துவ உலகம். பெரும்பாலும் வளர் இளம் பருவத்தில் இருக்கும் 10 முதல் 15 வயது வரையிலான பெண் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு ஏற்படும். ஏனெனில், வளர் இளம்பருவத்தில்தான் முதுகுத் தண்டுவடத்தில் வளர்ச்சி இருக்கும். சமநிலையற்ற தசைகள் காரணமாக இந்த நோய் பாதிப்பு ஏற்படுகிறது.

இதை Adolescent Idiopathic Scoliosis (AIS) என்றும் குறிப்பிடுவதுண்டு. மேற்கத்திய நாடுகளில் Adolescent Idiopathic Scoliosis-ஆல் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 0.47 முதல் 5.2 சதவீதமாக இருக்கிறது. ஆனால், பிறக்கும்போதே வரக்கூடிய Congenital Scoliosis இந்தியாவில்தான் அதிகமாக உள்ளது. இதற்கு பரம்பரைத் தன்மை காரணமல்ல; இந்திய தாய்மார்களின் ஊட்டச்சத்துக் குறைபாடு குறிப்பாக ஃபோலிக் அமிலக் குறைபாடு மற்றும் சில நோய்களும் இந்தியக் குழந்தைகளுக்கு ஸ்கோலியோசிஸ் வர காரணமாக உள்ளன. ஸ்கோலியோசிஸ் நோய் பாதிப்பு பெண் குழந்தைகளில் அதிகம் காணப்படுகிறது.

மேலும் இந்த குழந்தைகளின் மாதவிடாய் காலத்தில் ஸ்கோலியோசிஸ் முன்னேற்றம் துரிதப்படுத்தப்படுகிறது. சராசரியாக 2 ஆயிரம் பேரில் ஒருவருக்கு இந்த பாதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனாலும், சிலரை வெகுவாக பாதிக்கும். கவனிக்காமல் விட்டால் எலும்பு வலுவிழந்து நடக்க, உட்கார, படுக்க முடியாது. இதை சரிசெய்யும் ஆபரேஷன் மிக சிக்கலானது. தண்டுவடத்தை நேராக்கும் வகையில் உலோக கம்பி பொருத்தி, அதில் எலும்புகளை பொருந்தச் செய்ய வேண்டும். ஆபரேஷனில் சிறு கோளாறு நடந்தாலும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் உண்டு.

Comments (0)
Add Comment