ஐ.நா.வின் 2-வது பொதுச்செயலாளர் விமான விபத்தில் மரணம்: 18-9-1961..!!

டாக் ஜால்மர் அக்னி கார்ள் ஹமாஷெல்ட் சுவீடனைச் சேர்ந்த தூதுவர், ஐக்கிய நாடுகள் சபையின் இரண்டாவது பொதுச் செயலராக ஏப்ரல், 1953-லிருந்து 1961-ல் விமான விபத்தொன்றில் இறக்கும்வரை பணியாற்றியவர்.

‘ட்றைகுவே லை’ ஐநா சபையின் பொதுச் செயலர் பதவியை 1953-ல் துறந்ததும் ஐநாவின் பாதுகாப்புச் சபையின் தீர்மானப்படி டாக் இப்பதவியில் அமர்ந்தார். 1957-ல் மீண்டும் இவர் அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பதவிக்காலத்தில் இசுரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையில் ஒற்றுமையை ஏற்படுத்த முனைந்தார்.

சீனாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 ஐக்கிய அமெரிக்க விமானிகளை விடுவிக்க 1955-ல் சீனா சென்றார். 1960-ல் முன்னாள் பெல்ஜியக் குடியேற்ற நாடும் புதிதாக விடுதலை அடைந்ததுமான கொங்கோவிக்கு உள்நாட்டுக் குழப்பங்களுக்கு முடிவு காண அங்கு 4 முறை சமாதானத் தூதுவராகச் சென்றார். செப்டம்பர் 1960-ல் ஐநாப் படைகள் அங்கு செல்ல எடுத்த முடிவை சோவியத் ஒன்றியம் நிராகரித்தது. அத்துடன் டாக் பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தியது.

கட்டாங்கா மாநிலத்தை கொங்கோவுடன் மீண்டும் இணைக்க உதவி செய்யுமாறு பத்திரிசு லுமும்பாவின் கோரிக்கையை டாக் ஏற்க மறுத்துவிட்டார். இதனால் லுமும்பா சோவியத் நாட்டிடம் உதவி கோர முடிவு செய்தார். 1961-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ந்தேதி கட்டாங்காப் படையினருக்கும் ஐநாப் படையினருக்கும் இடையில் போர் நிறுத்ததைக் கொண்டுவர அங்கு செல்லும் வழியில் வடக்கு ரொடீசியாவில் அவர் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளாகியது. இதில் அவரும் அவருடன் பயணம் செய்த 15 பேரும் பலியானார்கள்.

இவ்விபத்துக்கான காரணம் இதுவரையில் அறியப்படவில்லை. ஹமாஷெல்ட் அமைதிக்கான நோபல் பரிசை 1961-ல் இறந்த பின்னர் பெற்றார். ஆனாலும் இவரது பெயர் இவர் இறக்க முன்னரே பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

Comments (0)
Add Comment