ஆம்பூர் ரெயில் தண்டவாளத்தில் இளம்பெண்ணை கொலை செய்து வீசிய கள்ளக்காதலன் கைது..!!

ஆம்பூர் அடுத்த பச்சை குப்பம் ரெயில்வே தண்டவாளத்தின் அருகே கடந்த மாதம் 18-ந் தேதி உடலில் காயங்களுடன் இளம்பெண் ஒருவர் இறந்து கிடந்தார்.

அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவரை கொலை செய்து தண்டவாளத்தில் அருகே வீசியது தெரியவந்தது. இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் இளம்பெண் புகைப்படம் சமூக வலைதளங்களிலும் பரவியது.

இந்தநிலையில் கொலை செய்து வீசப்பட்ட இளம்பெண் தஞ்சாவூர் மாவட்டம் மேல் மோட்டூர் கிராமத்தை சேர்ந்த ராமசாமி மனைவி சிவரத்தினம் (வயது 32) என்பது தெரியவந்தது.

அவரை திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை சேர்ந்த ஏழுமலை (வயது 27) என்பவர் கொலை செய்து வீசியது தெரியவந்தது. போலீசார் ஏழுமலையை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

சிவரத்தினம் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

திருச்சி சமயபுரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். அங்கு ஏழுமலையும் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

கடந்த மாதம் 18-ந் தேதி ஏழுமலை சிவரத்தினத்தை ஆம்பூர் அழைத்து வந்தார். இருவரும் குப்பம் ரெயில்வே தண்டவாளம் அருகே சென்றுள்ளனர்.

அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஏழுமலை சிவரத்தினத்தை அடித்தும் கழுத்தை இறுக்கி கொலை செய்து தண்டவாளத்தின் அருகே பிணத்தை வீசி சென்றுள்ளார்.

இந்த தகவலை அறிந்த போலீசார் ஏழுமலையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளம்பெண் கொலையில் மர்மம் நீடித்து வந்த நிலையில் ஒரு மாதத்திற்கு பிறகு துப்பு துலங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Comments (0)
Add Comment