மது குடிப்பதை கண்டித்ததால் மனைவியை அடித்து கொன்றேன்- கைதான கணவர் வாக்குமூலம்..!!

கன்னியாகுமரி சிலுவை நகரைச் சேர்ந்தவர் மரிய டெல்லஸ் (வயது 42). கன்னியாகுமரி கடற்கரையில் மரிய டெல்லஸ் பாசி மாலைகள் விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி அருள் சுனிதா (37). இவர் களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் பிளஸ்-2 படிக்கிறார். மகள் எஸ்.எஸ்.எல்.சி. படித்து கொண்டிருக்கிறார்.

மரிய டெல்லஸ் பாசி மாலைகள் விற்பனை செய்யும் பணத்தை குடும்பச் செலவிற்கு கொடுப்பதில்லை. மது பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்தே பணத்தை செலவழித்தார்.

குடும்பச் செலவிற்கு பணம் கொடுக்காததால் மரிய டெல்லசுக்கும், அவரது மனைவி அருள் சுனிதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். அப்போது மரிய டெல்லஸ், மனைவி அருள் சுனிதாவை அடித்து உதைப்பது வழக்கம்.

கடந்த ஆண்டு மனைவியை தாக்கியதால் அவர், இதுபற்றி போலீசில் புகார் செய்தார். போலீசார் மரிய டெல்லசை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். தண்டனை முடிந்து வெளியே வந்த மரிய டெல்லஸ், இனி மனைவியை தாக்க மாட்டேன் என்று போலீசில் எழுதிக் கொடுத்தார்.

இந்த நிலையில் நேற்று வேலைக்கு சென்ற மரிய டெல்லஸ் வீட்டிற்கு திரும்பி வரும்போது போதையில் வந்தார். இதனை மனைவி அருள் சுனிதா தட்டிக்கேட்டார். ஆத்திரமடைந்த மரிய டெல்லஸ் மனைவி அருள் சுனிதாவை சரமாரியாக தாக்கினார். அடி தாங்காமல் வீட்டை விட்டு அருள் சுனிதா வெளியே ஓடி வந்தார். அவரை அருகில் உள்ள 10 அடி ஆழ பள்ளத்தில் மரிய டெல்லஸ் தள்ளி விட்டார்.

கீழே விழுந்த அருள் சுனிதாவை மீண்டும் கல்லால் தாக்கினார். இதில் அருள் சுனிதா படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அருள் சுனிதா பரிதாபமாக இறந்து போனார்.

கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அருள் சுனிதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மரிய டெல்லசையும் கைது செய்தனர். கைதான மரிய டெல்லஸ் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

சிறு வயது முதலே எனக்கு மது பழக்கம் இருந்தது. திருமணத்திற்கு பிறகும் அது தொடர்ந்தது. இதனை மனைவி கண்டித்தார். மது குடிக்கக்கூடாது என்றும், குடும்பச்செலவிற்கு பணம் தர வேண்டும் எனவும் வற்புறுத்தினார். மனைவியின் பேச்சால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

மது குடிப்பதை கண்டித்ததால் அவரை தாக்கினேன். அவர், மயங்கி விழுந்த பின்பும் ஆத்திரம் தீராமல் அவரை கல்லால் அடித்தேன். இதில் அவர் இறந்து விட்டார். மனைவி இறந்ததை அறிந்ததும் அங்கிருந்து தப்பியோடினேன். போலீசார் என்னை கண்டு பிடித்து கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

கைதான மரிய டெல்லஸ், இன்று மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். பின்னர் அவரை போலீசார் ஜெயிலில் அடைக்க உள்ளனர்.

Comments (0)
Add Comment